சிகிச்சையில் குறைபாடு: தமிழக அரசு 1.8 கோடி கொடுக்க உத்தரவு

பட மூலாதாரம், AFP
மருத்துவ சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக கண் பார்வையை இழந்த 18 வயது பெண்ணுக்கு, 1.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசால் நடத்தப்படும் அரசு மருத்துவமனையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால், தமிழக அரசுதான் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற வழக்குகளில் இதுவரை இவ்வளவு பெரிய இழப்பீடு உத்தரவிடப்பட்டதில்லை என்றும் இப்போதுதான் முதல் முறையாக இவ்வளவு பெரிய தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது 18 வயது நிரம்பியுள்ள இந்த பெண் குறைமாதத்தில் பிறந்ததாகவும், அவரை அப்போது மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பும் முன்னர் கண்டிப்பாக செய்திருக்க வேண்டிய விழித்திரை சோதனையை செய்ய தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், tngovt
இந்த தவறை அவரது குடும்பத்தினர் கண்டறியும் முன்னரே, அந்த பெண் தனது கண் பார்வையை இழந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தை தேசிய நுகர்வோர் மன்றத்தில் அந்தப் பெண்ணின் தன்தை முறையிட்டார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்றம் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதையெதிர்த்து, இருதரப்புமே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன.
தமிழக அரசின் முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்தத் தீர்ப்பை அளித்தது.
























