You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை; மற்றொருவர் தற்கொலை முயற்சி
சென்னையில் உள்ள ஐஐடியில் படித்துவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.
சென்னை ஐஐடியில் எலக்ட்ரிகல் பொறியியலில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
நேற்று திங்கள்கிழமை மாலையில், அவர் தன்னுடைய அறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அவர் வெகுநேரமாக வெளியில் வராத நிலையில், மாலை ஆறு மணி அளவில் நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டூர்புரம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அதே விடுதியைச் சேர்ந்த வீரேஷ் என்ற மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.
படிப்பு தொடர்பான அழுத்தத்தால் இந்த தற்கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவங்களையடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்னை ஐஐடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்