புதுக்கோட்டை கிராம குடிநீர் தொட்டியில் நாய் சடலம் - ஒருவர் கைது; மன நலம் பாதிக்கப்பட்டவரா?

நீர் தொட்டி
பிரசுரிக்கப்பட்டது

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்ணீர் புகட்டுவதற்காக நாயை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு மேலே தூக்கிச் சென்றதாகவும், அப்போது நாய் தவறி உள்ளே விழுந்துவிட்டதாகவும் அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நேற்று நாயின் சடலம் எடுக்கப்பட்டது.

தொட்டியில் நாயைக் கொன்று வீசிய சம்பவம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அய்யனார் என்பவர், குடிநீர் தொட்டிக்குள் நாயை வீசியது தெரிய வந்ததாக கூறி போலீசார் அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அய்யனார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையின்போது, தொட்டிக்கு அருகே உயிருக்குப் போராடிய நாய்க்கு தண்ணீர் புகட்டுவதற்காக தொட்டிக்கு மேலே தூக்கி சென்றதாகவும், நாய்க்கு தண்ணீர் கொடுக்க முயன்ற போது நாய் தவறி நீர் தேக்க தொட்டியில் விழுந்ததாகவும் அய்யனார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் எவ்வாறு இதை செய்தார் என்பதை நடித்து காட்ட சொல்லி காவல்துறையினர் அய்யனாரை சம்பந்தப்பட்ட நீர் தேக்க தொட்டிக்கு அழைத்து சென்று உறுதி செய்துள்ளனர்.

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்டது புதுக்கோட்டை ஊராட்சி. புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் மூலம் கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரத்தக் கரையுடன் தொட்டிக்குள் நாய் சடலம்

புதுக்கோட்டை கிராமத்தில் 60 அடி உயரமுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு, 4 மாதங்களாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நீர் தேக்க தொட்டியில் குடிநீர் திறந்து விடும் பணியில் ராமமூர்த்தி என்பவர் இருக்கிறார். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் திங்கட்கிழமை ராமமூர்த்தி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறிய போது தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் நாய் கிடந்துள்ளது.

கஞ்சா உபயோகம்

இதையடுத்து ராமமூர்த்தி ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் குடிநீர் தொட்டியில் கிடந்த நாயின் சடலம் அகற்றப்பட்டு குடிநீர் தொட்டி முழுவதும் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

தகவல் அறிந்த வருவாய் மற்றும் சிவகாசி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் புதுக்கோட்டை கிராமத்திற்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் நீர் தேக்க தொட்டி அருகே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் கஞ்சா உபயோகப்படுத்தி வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இளைஞர்களை அழைத்து தனித் தனியாக விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக புதுக்கோட்டை கிராமத்தில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொட்டியில் தண்ணீர் இல்லாததால் தப்பிய ஊர் மக்கள்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஊராட்சி மன்ற தலைவி கே.காளீஸ்வரி," 5 நாட்களுக்கு ஒரு முறை அதாவது மாதத்தில் 5 மற்றும் 20ந் தேதிகளில் நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 5ந்தேதி ஞாயிற்று கிழமை என்பதால் திங்கள்கிழமை சுத்தம் செய்வதற்காக கடந்த சனிக்கிழமை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த அனைத்து தண்ணீரும் மக்களுக்குதிறந்துவிட்டு காலி செய்துவிட்டோம்.

தண்ணீர் திறந்துவிட்ட பின் சனிக்கிழமை பணியாளர் ராமமூர்த்தி தொட்டி மேலே சென்று பார்த்த போது தொட்டியில் தண்ணீர் இல்லை எனவே தொட்டியை மூடி விட்டு வந்துள்ளார். அப்போது தொட்டிக்குள் நாயின் சடலம் இல்லை.

இந்நிலையில் தொட்டியை சுத்தம் செய்ய நேற்று ராமமூர்த்தி சென்ற போது இறந்த நிலையில் நாயின் சடலம் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த நாய் சடலம் அப்புறப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் போட்டு தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வால் ஊர் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

அப்பகுதி மக்கள் அந்த தொட்டியில் இருந்து வரக்கூடிய தண்ணீரை குடிப்பதற்கு அச்சம் தெரிவித்ததால் மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன." என்றார் ஊராட்சி மன்ற தலைவி கே.காளீஸ்வரி.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செய்தார்களா என சந்தேகம்

தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற தலைவி கே. காளீஸ்வரி,"எங்கள் கிராமத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லாத இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இளைஞர்கள் கஞ்சா போதைக்கு பழக்கத்திற்கு அடிமையாகி நீர் தேக்க தொட்டிக்கு அருகே இரவு பகலாக கஞ்சா பயன்படுத்தி வந்துள்ளனர்.

நீர் தேக்க தொட்டிக்கு செல்ல 5 படிகள் உள்ளன. அதில் ஐந்தாவது படிக்கட்டு மிகவும் செங்குத்தாக இருப்பதால் எளிதில் ஏறி செல்ல முடியாது. எனவே கஞ்சா போதையில் இளைஞர்கள் இதை செய்திருக்க கூடும் என காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளோம் அதன் அடிப்படையில் இளைஞர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்ததாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தூண்டுதலின் பேரில் துணைத் தலைவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனக்கு பெரும் நெருக்கடி கொடுத்து என்னை வேலை செய்ய விடாமல் தடுத்து வந்தார்.

ஊராட்சி மன்ற காசோலையில் நான் கையொப்பமிடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்திருந்தார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரத்தைத் திரும்பப் பெற்றேன். எனவே என் மீது உள்ள முன் பகை காரணமாக செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்தன் அடிப்படையில் அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று முன்னதாக கூறியிருந்தார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: