பசு கடத்தியதாக முஸ்லிம் இளைஞர்கள் மீது பஜ்ரங் தள் குழு தாக்குதல், ஒருவர் பலி என புகார், ஹரியாணா போலீஸ் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், BBCHINDI
- எழுதியவர், அபிநவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர், நூஹிலில் இருந்து
- பிரசுரிக்கப்பட்டது
ஹரியாணாவில் பசுக்காவலர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு கும்பல் மூன்று முஸ்லிம் இளைஞர்களைப் பிடித்து வைத்துத் தாக்கியதாக காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அந்த மூன்று இளைஞர்களில் வாரிஸ் என்ற பெயருடைய இளைஞர் இறந்துவிட்டார்.
கடந்த ஜனவரி 28, ஹரியணாவின் நூஹ் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தைக் காட்டும் சில படங்கள் திடீரென சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஒரு வைரல் வீடியோ மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது, சில பசுப் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள், மூன்று முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கினர். அந்த இளைஞர்கள் தங்கள் பெயர்களை வாரிஸ், ஷோக்கீன் மற்றும் நஃபீஸ் என்று கூறுவது ஒரு வைரல் வீடியோவில் தெரிகிறது.
காயமடைந்த மூன்று இளைஞர்கள் காரில் அமர்ந்திருப்பது இந்த வீடியோவில் தெரிகிறது. போலீஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் இளைஞர்களை இடுப்பில் முழங்கையால் குத்துவதும் காயமடைந்த இளைஞர்களைச் சாலையில் அமரச் செய்து சிலர் படம் எடுப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது.
இந்தச் சம்பவம் ஃபேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது, ஐந்து மணி நேரம் கழித்து, காயமடைந்த மூன்று இளைஞர்களில் ஒருவரான வாரிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசின் பங்கு என்ன?
பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பசுப் பாதுகாவலர்கள் என்று அழைத்துக்கொள்ளும் கும்பல், தங்கள் மகனை அடித்துக் கொன்றதாக வாரிஸின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் போலீசாரின் பங்கு குறித்தும் பலத்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
நூஹில் நடந்த இந்தச் சம்பவம் கும்பல் கொலையா? இதில் ஈடுபட்டவர்கள் பஜ்ரங் தள் தொண்டர்களா? இதில் காவல் துறையின் பங்கு என்ன?
டெல்லியில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் அமைந்துள்ள நூஹ், பசு வதை, மாடு கடத்தல், வாகனத் திருட்டு போன்ற செயல்களுக்காக முன்னரே செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள நூஹ் மாவட்டத்தில் சுமார் 11 லட்சம் மக்கள் வசிக்கின்றனர், இதில் 80 சதவீதம் மக்கள் முஸ்லிம்கள்.
பிபிசி குழுவினர் நூஹ் மாவட்டத்தின் ஹுசைன்பூர் கிராமத்தை அடைந்தபோது, வாரிஸ் மரணத்துக்கு ஊரே துக்கம் அனுசரித்துக்கொண்டிருந்தது. அங்கு வாரிஸின் தாயார் ஹஸ்ராவை சந்தித்தோம்.
மகன் இறந்த சோகத்தில் மூழ்கியிருந்த தாய், "என் மகன் இறந்துவிட்டான், என் மகன் இறந்துவிட்டான், என் மகன் மெக்கானிக்கா இருந்தான். கூட்டிப் போய், அப்பாவிப் பையனைக் கொன்றுவிட்டனர், அவன் நிரபராதி, எங்களுக்கு நீதி வாங்கிக் கொடுங்கள்" என்று புலம்பினார்.

பட மூலாதாரம், BBCHINDI
ஆறு சகோதரர்களில் ஐந்தாவது மகன் வாரிஸ், கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். வாரிஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு தற்போது மூன்று மாதப் பெண் குழந்தை உள்ளது. அந்த பச்சிளம் குழந்தை தந்தையை இழந்து அனாதையாகி விட்டது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பசுப் பாதுகாவலர்கள் வாரிஸை அடித்துக் கொன்றதாகக் கூறுகிறார் வாரிஸின் சகோதரர் இம்ரான்.
"பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த மோனு மானேசர் காலையில் ஃபேஸ்புக்கில் லைவ் செய்தபோதுதான் 3 இளைஞர்களை அவர் பிடித்து வைத்திருப்பது கிராம மக்களுக்குத் தெரிந்தது, அப்போதுதான் எங்களுக்கும் தெரிய வந்தது.
அவர்களை மோனு மானேசரின் பொலேரோ காரில் உட்கார வைத்து, வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, அடித்து, நடத்தி அழைத்துச் சென்றனர். அது விபத்தாக இருந்திருந்தால், அங்கு சில அடி தொலைவில் ஒரு போலீஸ் நிலையம் இருந்தது. அங்கு ஒப்படைத்திருக்கலாம். ஆனால் காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை." என்றார்.
"யாரேனும் தவறு செய்தால் காவல் துறை இருக்கிறது. அரசாங்கம் இருக்கிறது. நீதிமன்றம் இருக்கிறது. யாரோ ஒரு மூன்றாவது மனிதர்களுக்கு இப்படிச் செய்ய என்ன உரிமை இருக்கிறது?" என்கிறார் இம்ரான்.
நஃபீஸ் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?
வாரிஸ் தவிர, பசுக் காவலர் கும்பலால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மற்றொரு இளைஞன் பெயர் நஃபீஸ். இவர் ரானியாகி கிராமத்தைச் சேர்ந்தவர்.
22 வயதான நஃபீஸுக்கு ஏழு உடன்பிறப்புகள் உள்ளனர். சம்பவத்தன்று நஃபீஸின் மனைவி முபீனா சுயநினைவின்றி இருந்துள்ளார். நஃபீஸுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகனும், ஏழு மாத மகளும் உள்ளனர்.
"என் மகனின் முகம் வீங்கி இருந்தது. பஜ்ரங் தள் ஆட்கள் அவனை அதிகம் தாக்கியுள்ளனர். எப்படியோ பிழைத்திருக்கிறான்." என்கிறார் நஃபீஸின் தாய் அஃப்சானா.
நஃபீஸின் தந்தை ஜாஹித், "போலீசார் தனது மகனை மருத்துவமனையில் இருந்து சிறைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்." என்கிறார்.

பட மூலாதாரம், BBCHINDI
நஃபீஸ் மற்றும் ஷோக்கீன் மீது பசு கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் வாரிஸின் தாக்குதல் மற்றும் இறப்புக்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
பசு பாதுகாவலர்கள் என அழைத்துக்கொள்ளும் தரப்பு கூறுவது என்ன?
மோனு மானேசர் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர் என்று பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினரும் நேரடியாகக் குற்றம் சாட்டினர். மோனுதான், ஹரியாணா பஜ்ரங் தளம் அமைப்பின் பசுப் பாதுகாப்புப் பிரிவின் மாநிலத் தலைவர் என்று கூறிக்கொள்கிறார்.
பிபிசியிடம் பேசிய மோனு மானேசர், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்ததோடு, "சான்ட்ரோ காரில் பசுக்கள் இருப்பதாக எங்கள் சகாக்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் சரியானது என்று கண்டறியப்பட்டது. அதிவேகமாக ஓடத் தொடங்கிய சான்ட்ரோ கோரி சௌகி அருகே ஒரு டெம்போ மீது மோதியது. காரில் மூன்று கடத்தல்காரர்கள் இருந்தனர், மூவரும் விபத்தில் காயமடைந்தனர்." என்றார்.
35 நிமிடங்களுக்குப் பிறகுதான் அந்த இடத்தைத் தான் சென்றடைந்ததாக மோனு மானேசர் கூறுகிறார்.
மேலும் அவர், "எங்களிடம் அந்த இளைஞர்கள் இல்லை. அவர்கள் போலீஸ் முன்னிலையில் இருந்தனர். அவர்கள் போலீஸ் முன்னிலையில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். நான் அவர்களுடன் இல்லை. அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை." என்கிறார்.
தாக்குதல் வீடியோவில் அவர் காணப்படுவது குறித்துக் கேட்டபோது, அதில் ஒரு சதவீதம்கூட உண்மை இல்லை என்றார்.
நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
மோனு மானேசர் இப்படி கூறுவது குறித்து சம்பவத்தை நேரில் கண்டவர்கள், சில கேள்விகளை எழுப்பினர். சம்பவ இடத்துக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், பி பி சி-யிடம், ''நான் வீட்டை விட்டு வெளியே வந்தபோது ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். கார் உடைந்து கிடந்தது, காய்கறிகள் சிதறிக் கிடந்தன," என்றார்.

பட மூலாதாரம், BBCHINDI
நேரில் பார்த்த இன்னொரு சாட்சி, "அவர்களை நன்றாக அடித்தார்கள். அடித்து உட்கார வைத்தார்கள். அவர்களில் ஒருவர், வயிறு வலிக்கிறது, ஆஸ்பத்திரியில் காட்டுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் எத்தனை நாள் வேண்டுமானாலும் ஜெயிலில் இருக்கிறேன், ஆனால் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவர் ரத்த வாந்தி எடுத்தார். அனால், அவன் மாட்டிறைச்சி சாப்பிட்டான் அதனால் தான் அப்படி என்று சொல்லிவிட்டார்கள்," என்றார்.
அந்த இடத்தில் இருந்த மற்றொரு சாட்சி, "காலையில் ஆஸான் ஒலித்துக் கொண்டிருந்தது. எனது வீடு இங்கே அருகில் உள்ளது, நாங்கள் வந்து கொண்டிருந்தோம். நான் பார்த்தபோது, கார் விபத்துக்குள்ளாகியிருந்தது. பஜ்ரங் தள் அமைப்பினர், அவர்களை வெளியே இழுத்து வைத்துத் தாக்கினர். அவர்களிடம் தடிகளும் இருந்தன. துப்பாக்கியாலும் வயிற்றில் மூன்று நான்கு முறை தாக்கினார்கள்," என்றார்.
இதுகுறித்து நூஹ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லா கூறுகையில், "கடந்த 28ம் தேதி டெம்போ டிரைவர் மற்றும் சில பசுப் பாதுகாவலர்களிடமிருந்து சாலை விபத்து நடந்ததாக தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்த 3 பேரும் வாகனத்தில் பத்திரமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்." என்றார்.
காவல் துறை என்ன சொல்கிறது?
ஆனால், போலீஸ் கூறும் விளக்கம் சிசிடிவி காட்சிகளின் நேரத்துடன் பொருந்தவில்லை.
சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு, நான் அவருடன் தொலைபேசியில் பேசியபோது, இந்த விஷயத்தில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க அவர் மறுத்தார். பசுப் பாதுகாவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டதற்கு, "விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

பட மூலாதாரம், BBCHINDI
காயமடைந்த இளைஞர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஏன் ஆனது என்று கேட்டதற்கு, வருண் சிங்லா தொலைபேசியில் பதிலளித்தார், "டெம்போ டிரைவரின் புகாரின் பேரில், விபத்து மற்றும் பசுக் கடத்தல் வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரிஸின் உறவினர்களிடமிருந்து பசுப் பாதுகாவலர்களுக்கு எதிராகப் புகார் வந்துள்ளது. அது விசாரிக்கப்பட்டு வருகிறது." என்றார் அவர்.
இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள, நிகழ்வுகளைக் காலக் கிரமப்படிப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். விபத்து எப்போது நடந்தது? போலீசார் எப்போது சம்பவ இடத்திற்கு வந்தனர்?
முதல் ஐந்து மணி நேரத்தில் போலீஸ் என்ன செய்தது? பசுப் பாதுகாவலர்கள் என்று கூறப்படுவோர் அந்த இடத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
பி பி சி விசாரணை
கால வரிசைப்படி நடந்தது என்ன?
இந்தச் சம்பவத்தை புரிந்து கொள்ள உதவும் வேறொரு முக்கியமான விஷயம், சிசிடிவி காட்சிகள்.
சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்த கடைக்காரர் ஒருவர் ஜனவரி 28 அன்று காலை 5 மணி முதல் 8 மணி வரையிலான சிசிடிவி காட்சிகளை எங்களுக்குக் காட்டினார், இது காவல்துறையின் கூற்றுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.
காலை 4.56 மணிக்கான சிசிடிவி காட்சிகளை சரிபார்த்ததில், நூஹை நோக்கி வேகமாக வந்த சான்ட்ரோ எதிர் திசையில் வந்த டெம்போ மீது மோதியது.
இந்தச் சம்பவம் உள்ளூர் காவல் நிலையமான கோரி கலானிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நிகழ்ந்தது.
காலை 4.56 - மோதிய ஐந்து வினாடிகளுக்குள், ஒரு பொலிரோ கார் போலீஸ் சாவடிக்கு முன்னால் சைரன் சத்தத்துடன் அந்த இடத்தில் நின்றது.
பொலிரோ காரில் வந்த பசுப் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்வோர், சான்ட்ரோ காரில் இருந்த இளைஞர்களை வெளியே இழுத்துச் சென்று தாக்குகிறார்கள்.

பட மூலாதாரம், BBCHINDI
நேரில் பார்த்த சாட்சியான இர்பான், "அவரிடம் ஒரு தடியும் துப்பாக்கியும் இருந்தது. மேலும் அவர் வயிற்றில் மூன்று நான்கு முறை அடித்துள்ளார்" என்று கூறினார்.
'பசுவுக்காக வந்த ஆம்புலன்ஸ்'
காலை 5.54 மணிக்குப் பதிவான காட்சியில், பசுப் பாதுகாவலர்கள் என்று கூறப்படுபவர்கள் சான்ட்ரோ காரில் இருந்து கன்றுக்குட்டியை வெளியே எடுப்பதைக் காண முடிகிறது. வேறு சில வைரல் வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளும் காரில் ஒரு கன்றுக்குட்டி இருந்ததாக கூறுகின்றன.
அப்போது அந்த இடத்தில் இருந்த மோனு மானேசர் கூறுகையில், பசுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அதற்காக ஆம்புலன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டது என்றும் கன்றுக்குட்டிக்கான இந்த ஆம்புலன்ஸ் தர்வேதா மருத்துவமனையில் இருந்து வந்தது என்று கூறுகிறார்.
காலை 6.17 - விபத்து நடந்து சுமார் ஒரு மணி நேரம் 21 நிமிடங்களுக்குப் பிறகு காவல்துறையின் ரோந்துக் கார் அங்கு வருகிறது. இரண்டு போலீஸ்காரர்கள் காரில் இருந்து கீழே இறங்குகிறார்கள். ஒரு போலீஸ்காரர் இறங்கி முதலில் போனில் சில படங்களை எடுக்க முயற்சிக்கிறார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியும், நீண்ட நேரத்துக்குப் பிறகே காவல்துறையினர் வந்ததாகக் கூறினார்.
இருப்பினும், அந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள போலீஸ் சாவடிப் பதிவேட்டில், 6:35 மணிக்கு, போலீஸ் ரோந்து கார் 0496 மற்றும் 0495 அங்கு வந்தடைந்தன என்று எழுதப்பட்டுள்ளது.
டெம்போ டிரைவர் விபத்து குறித்துத் தகவல் தெரிவித்ததாக அந்தப் பதிவேடு குறிபிடுகிறது..
6.26 மணிக்கு சான்ட்ரோ காரின் முன் பசுப் பாதுகாவலர்கள் புகைப்படம் எடுத்து கோஷம் எழுப்பியதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
'ஹர் ஹர் மகாதேவ், ஜெய்காரா வீர் பஜ்ரங்கி, பாரத் மாதா கி ஜெய்' போன்ற கோஷங்கள் சிசிடிவி காட்சிகளில் கேட்கின்றன.

பட மூலாதாரம், BBCHINDI
அவர்கள் காரின் மீது நின்று கொண்டு பஜ்ரங் பலி மற்றும் கோ மாதா கோஷங்களை எழுப்பியதாகக் கூறுகிறார் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்.
6.41- காவல் துறையின் மற்றொரு ரோந்து வாகனம் வருகிறது. ஆனாலும், காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
சம்பவ இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாலா ஹர்த்வாரி லால் சமூக மையத்திற்கு போலீசார் இளைஞர்களை அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையின் அவசர நுழைவுப் பதிவேட்டில், "காலை 7.40 மணிக்கு ஷௌக்கீன், வாரிஸ், நஃபீஸ் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்."என்ற குறிப்பு உள்ளது.
"7.40 மணியளவில் போலீசார் இளைஞர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர், நான் அவர்களைப் பரிசோதித்தேன்," என்று லாலா ஹர்த்வாரி லால் சமூக மையத்தின் மருத்துவ அதிகாரி தேவேந்திர ஷர்மா கூறினார்.
மேலும் அவர், "வாரிஸின் கன்னத்தில் லேசான வெட்டு இருந்தது, அவர் வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகச் சொன்னார். அவருக்கு வலிக்கு ஊசி போடப்பட்டது." என்றார்.
8.20- மருத்துவ அதிகாரி தேவேந்திர சர்மாவின் கூற்றுப்படி, அவர் இந்த நேரத்தில் மருத்துவ சட்ட அறிக்கையை (எம்எல்சி) தயாரித்தார். அதில் அவர், "அவர் (வாரிஸ்) அந்த நேரத்தில் நிலையான உடல் நிலையுடன் தான் இருந்தார். அல்ட்ராசவுண்ட் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரின் கருத்துக்காக அவரை நல்ஹட் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவேந்திர ஷர்மா கூறுகையில், "கன்னம் தவிர வேறு எங்கும் காயம் இல்லை. உள் காயம் இருப்பதாக சந்தேகம் இருந்தது. எனவே பரிந்துரைக்கப்பட்டது." என்று தெளிவு படுத்தினார்.

பட மூலாதாரம், BBCHINDI
"நஃபீஸின் வலது புருவத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. எக்ஸ்ரே எடுக்கும்படி கூறப்பட்டது. ஷோக்கீனின் இடது கண்ணில் வெட்டு விழுந்திருந்தது, அதற்கு தையல் போடப்பட்டது. அவருக்கும் முழங்கை மற்றும் தோளில் சிறிய காயங்கள் இருந்தன."
9.50 - தாவுடுவில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் பதிவேட்டில், வாரிஸ் மற்றும் நஃபீஸ் மருத்துவமனையின் ஆம்புலன்ஸிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்ஹரில் உள்ள ஷாஹீத் ஹசன் கான் மேவாத்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்தாகக் குறிப்பு உள்ளது.
ஆம்புலன்ஸ் டிரைவர் அலாவுதீன், "வாரிஸை நல்ஹரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது, அவர் நன்றாக இருந்தார், ஆனால் நாங்கள் அங்கு சென்றடைந்தபோது, வாரிஸ் சிரமத்துடன்தான் சுவாசித்தார்." என்றார்.
10.30- வாரிஸ் மற்றும் நஃபீஸ்-க்குப் பரிந்துரைக்கப்பட்ட ஷாஹீத் ஹசன் கான் மேவாத்தி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்(பெயர் வெளியிட விரும்பவில்லை), ஆவணங்களைப் புரட்டி, "அவர் 10:30 மணிக்கு இறந்த நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார்" என்று கூறினார்.
வாரிஸின் மரணத்திற்குப் பிறகு, பசுப் பாதுகாவலர்கள்தான் இந்த மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி, குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர், ஆனால் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பசுப் பாதுகாவலர்கள் என்று கூறப்படுவோர் சம்பவ இடத்தில் இருப்பது, காயமடைந்த வாரிஸ், நஃபீஸ் மற்றும் ஷோக்கீன் ஆகியோரை அழைத்துச் சென்றது, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் அந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் ஆகியவை, இந்தச் சம்பவத்தில், பசுப் பாதுகாவலர்களின் பங்கு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.
இந்த வழக்கில் பசுப் பாதுகாவலர்களின் பங்கு குறித்து ஏன் போலீசார் இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை என்பதுதான் கேள்வி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















