கோவையில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மறுப்பு - செய்தியாளர்களை விமர்சித்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
கோவையில் மதத்தின் பெயரால் மக்களிடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயன்றாலும் மக்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக யார் மீதும் மத சாயம் பூசவில்லை என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
ஆனால், சம்பவ பகுதியை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக கூறப்பட்ட செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சில செய்தியாளர்கள் கோரினர். ஆனால், அண்ணாமலை தாம் தவறே செய்யாதபோது மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. கோயம்புத்தூரில் இன்று என்ன நடந்தது?
உக்கடம் பகுதிக்கு வந்த அண்ணாமலை அங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பாஜக ஏற்பாடு செய்திருந்த வழிபாடு நிகழ்வில் கலந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. அண்ணாமலை உடன் எஸ் ஆர் சேகர் மற்றும் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் மற்றும் சில பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்களை பட்டியலிட்டார்.


"கோவையில் நடக்கவிருந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது. மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நிலவ வேண்டும். அதனால் தான் இன்று சங்கமேஸ்வரர் கோவிலில் மத ஒற்றுமையை வலியுறுத்தி கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.
கோவை இதை கடந்து செல்ல வேண்டும். 1998இல் நடந்த குண்டு வெடிப்பால் கோவை நகரம், 20 ஆண்டுகள் பின் தங்கியது. கோவையால் அது போன்ற பின்னடைவை மீண்டும் தாங்க முடியாது. இதை குண்டு வெடிப்பு, தீவிரவாத தாக்குதல் எனக் குறிப்பிடுவதில் என்ன தயக்கம்? என்ஐஏ தற்கொலை தாக்குதல் என கூறும்போது அப்படி குறிப்பிட மாநில காவல்துறை தயங்குவது ஏன்?
சம்பவம் பகுதியில் காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு இடத்தைத் தனிமைப்படுத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தார்கள். அதற்கு காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவையில் மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள். பாஜக யார் மீதும் மத சாயம் பூசவில்லை. நாங்கள் எங்குமே மதத்தை குறிப்பிடவில்லை. இந்த வழக்கிலும் குற்றவாளிகள் என்று தான் சொல்கிறோம். யாருடைய மதத்தை சொல்லவில்லை. எந்த மதத்தைச் சேர்ந்தவரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு," என்று அண்ணாமலை கூறினார்.

"அனைத்து மதங்களும் அமைதியைத் தான் விரும்புகின்றன. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும் இருக்கிறார்கள். மத தலைவர்கள் தனிமைப்பட்டிருக்கும் இளைஞர்களை அடையாளம் கண்டு நல்வழிப்படுத்த வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தமே இஸ்லாத்துக்கு எதிரானது என அம்மத தலைவர்களே கூறுகிறார்கள்.
எங்களுடைய விமர்சனம், கேள்விகள் எல்லாம் காவல்துறையை சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, யாருக்கு எதிராக இல்லை. இந்த தாக்குதல் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்க வேண்டும் என குறிவைத்து நடத்தப்பட்டது. ஒரு சம்பவம் நடந்த பின்னர் ஒருவரை ஒருவர் பழி சொல்லிக் கொள்வதில் பயனில்லை. எங்களுடைய கேள்விகள் எல்லாம் இந்த 'சிஸ்டத்தை' சரி செய்ய வேண்டும் என்பதுதான்.
எங்குமே நாங்கள் காவல்துறையை குறை சொல்லவில்லை. தகவல் தொடர்பில் எங்கோ பிழை நிகழ்ந்துள்ளது. அதை கண்டறிந்து களைய வேண்டும்," என்கிறார் அண்ணாமலை.

"ஜூன் 19ஆம் தேதி 'கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்' என உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில் 89ஆவது நபராக ஜமேசா முபின் உள்ளார். அப்படிப்பட்டவர் எவ்வாறு கண்காணிப்பு வளையத்தில் இருந்து தவறினார் என்பதுதான் என் கேள்வி. கோவையில் செப்டம்பர் மாதம் வரை உளவுத்துறைக்கு அதிகாரி நியமிக்கப்படாமலேயே இருந்துள்ளார். இவ்வாறு காவல்துறையில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்," என்று அண்ணாமலை கூறினார்.
தீவிரவாத தாக்குதல் என்று கூறுவதில் தவறில்லை. மக்களை எச்சரிக்கை செய்வதும் விழிப்புணர்வு செய்வதும் காவல்துறையின் பணி தான். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் தீவிரவாத தாக்குதல் என்று குறிப்பிடுங்கள் என பாஜக கோருகிறது.
இது தீவிரவாத தாக்குதல் தான் என்கிற உண்மையை கூறியாக வேண்டும். ஒரு விபத்தை கண்டறிவதை விட தடுப்பதே சிறந்தது. நான் இஸ்லாமிய சமூக தலைவர்களிடமும் பேசினேன் அவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். தற்போதைய நிலையில் வேண்டாம், வேறு உகந்த நேரத்தில் சந்திப்போம் என அவர்கள் தெரிவித்தனர். அடுத்த முறை வரும் போது நிச்சயம் அவர்களையும் சந்திப்பேன்" என்று அண்ணாமலை கூறினார்.

காவல்துறை Vs அண்ணாமலை சொற்போர்
கோவை கார் வெடிப்புக்கு பின்னால் தீவிரவாத சதி செயல்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பிவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், காவல்துறை மீது அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அக்டோபர் 29 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
கோவை வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றியதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அண்ணாமலையும் காவல்துறையின் அறிக்கைக்கு பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய சர்ச்சை
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்ப முயன்றபோது, தன்னை ஏன் 'குரங்கு போல' பின்தொடர்ந்தபடியே இருக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பல்வேறு ஊடக சங்கங்கள் கண்டனம் தெரிவித்தும் அவர் மன்னிப்பு தெரிவித்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் சில நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், குரங்கு போல என்றுதான் சொன்னேன் என்றும் 'குரங்கு' என்று சொல்லவில்லை என்றும் அண்ணாமலை பதில் அளித்தார். மேலும், குறிப்பிட்ட ஊடகத்தின் நிருபரிடம் மட்டுமே அவ்வாறு கூறியதாகவும் அவர் இலக்கு வைத்து தன்னிடம் கேள்வி கேட்டதால் அப்படி எதிர்வினையாற்றியதாகவும் அண்ணாமலை கூறினார்.
இருந்தபோதும்,அண்ணாமலையின் கேள்வி சரியானது அல்ல என்பதால் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று செய்தியாளர்கள் ஒரே குரலாக ஒலித்தனர். ஆனால், தான் தவறே செய்யாதபோது மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மன்னிப்பு கேட்பது என்பது தமது ரத்தத்திலேயே இல்லை என்றும் அண்ணாமலை கூறினார்.
இதையடுத்து அவருடைய செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்க நேரிடும் என்று செய்தியாளர்கள் குறிப்பிட்டபோது, "இந்த விஷயத்தில் என்னுடைய நிலைப்பாட்டை கூறிவிட்டேன். எனது நிகழ்வு தொடர்பான செய்தியை சேகரிப்பதா வேண்டாமா என்ற முடிவை சம்பந்தப்பட்ட செய்தியாளர்களிடமே விட்டு விடுகிறேன்," என்று அண்ணாமலை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவருடன் சில செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்ததால் அங்கு சலசலப்பு நிலவியது.

நடந்தது என்ன?
கடந்த 23ஆம் தேதி ஞாயிறு அதிகாலை கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு மாருதி வாகனம் 2 எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களோடு வெடித்தது. அதில் வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

























