You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணா பற்றிய சர்ச்சை ட்வீட் - பத்ரி சேஷாத்ரி இடம்பெற்ற ஆலோசனை குழு மாற்றம் - என்ன நடந்தது?
பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி இடம்பெற்ற தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அரசாணை அக்டோபர் 19ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாகத்தான் பத்ரி சேஷாத்ரி அண்ணா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த இடுகைக்கும் தற்போது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை பிபிசி தமிழால் தன்னிச்சையாக உறுதிப்படுத்த இயலவில்லை.
அதே சமயம், பத்ரியின் சர்ச்சை ட்வீட்டுக்கு திமுகவைச் சேர்ந்த தருமபுரி தொகுதி எம்பி செந்தில்குமார் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து இடுகையை பதிவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு இடுகையில், தமிழ் இணைய கல்விக்கழக ஆலோசனை குழுவின் புதிய உறுப்பினர்கள் இடம்பெற்ற அரசாணையை செந்தில்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அத்துடன், ''கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி. பத்ரி சேஷாத்திரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்,'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் பதிவிட்ட பத்ரி, ''இதுதான் அண்ணாவின் வெற்றியா?'' என்று குறிப்பிட, அதற்கு பதில் அளித்துள்ள செந்தில்குமார், ''ஆம், இது எங்கள் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களின் வெற்றி,'' என்று கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
பத்ரி சேஷாத்திரி கிழக்குப்பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் அவர் அரசியல் ஆய்வாளராகவும் பங்கேற்று வருகிறார். வலதுசாரி சிந்தனை கொண்டவராக பொதுவெளியில் அறியப்படும் அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், அறிஞர் அண்ணாவின் இந்தி எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் அடங்கிய இடுகையை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்ற சில கருத்துக்கள் சர்ச்சையாக ஆளும் திமுகவினரால் கருதப்பட்டன.
அதைத்தொடர்ந்து செந்தில்குமார் எம்.பி, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் அவர் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
''அறிவாற்றல் பேரறிஞர் அண்ணாவை பத்ரி அவமானப்படுத்தி பேசியது கண்டனத்துக்குரியது, இத்தகைய ஆட்களுக்கு குழுக்களில் இடம் அளிப்பது அண்ணா மேல் மரியாதை வைத்திருக்கும் கழக சுயமரியாதை தொண்டர்களுக்கு வேதனை அளிக்கிறது,'' என்று செந்தில்குமார் தமது ட்விட்டர் இடுகையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், பத்ரி சேஷாத்திரி இடம்பெற்ற தமிழ் இணை கல்விக்குழு ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதில் பத்ரி சேஷாத்ரி பெயர் விடுவிக்கப்பட்டது குறித்து செந்தில்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
''பத்ரி சேஷாத்திரி திராவிட சிந்தனைகளுக்கு தொடர்பு இல்லாதவர். அவர் யாரையும் விமர்சிக்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் திமுகவை தோற்றுவித்தவர், தமிழகத்தின் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணாவை விமர்சிப்பதை ஒரு திமுக தொண்டனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பத்ரி அவரது பக்கத்தில், அண்ணா குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துகளை பார்த்து விட்டு, இவரை போன்றவர்கள் ஏன் ஆலோசனை குழுவில் இருக்கவேண்டுமா இல்லையா என நேற்று இரவு அந்த பதிவை நான் போட்டேன். தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று அறிந்தபோது, ஒரு தொண்டனாக மகிழ்ச்சி கொள்கிறேன்,'' என தெரிவித்தார்.
பத்ரியின் சர்ச்சை கருத்து
பத்ரி எழுதியுள்ள பதிவுகளில், ''அறிஞர் அண்ணாதுரை அவர்கள் யாரோ ஒரு இந்திக்காரருக்குப் பதில் சொல்லும் வகையில் வெறும் மூன்று மாதங்களுக்குள் அம்மொழியைப் படித்து விட முடியும் என்றும் அதற்குமேல் அம்மொழியில் ஒன்றும் இல்லை என்று சொன்னதாகப் பத்திரிகையாளர் ஒருவர் கீச்ச, நான் சற்று அதிர்ந்துதான் போனேன். அடுத்து அண்ணா வழியைப் பின்பற்றும் மற்றொரு பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா, அப்படி என்னதான் இந்தியில் உள்ளது, அதுவும் ஐம்பெருங்காப்பியங்களுக்கு இணையாக, என்ற கேள்வியை எழுப்பினார்.
ஒன்றுக்கு ஒன்று என்று அடிப்படையில் ஒரு மொழியின் காவியத்தை, கவிதையை இன்னொரு மொழியில் இணை காட்ட முடியாது. ஆனால் இந்தி என்பது ஒன்றுமில்லா டம்மி டம்பக்கா அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட என்னிடம் உள்ள சில நூல்களின் துணையுடன் சில எழுத்தாளர்கள், அவர் எழுதிய சில நூல்கள் என்று இத்திரியில் குறிப்பிடுகிறேன். இவை கிடைத்துள்ள சில துண்டுகள். இங்கை விட அங்கு தொலைந்து போனவை அதிகம்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், தொடர்ச்சியாக பல பதிவுகளில், 12 நூற்றாண்டு முதல் 21ஆம் நூற்றாண்டு வரை இந்தியில் உள்ள நூல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து கேட்பதற்காக பத்ரியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்