You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்கள்: 3 நாட்களில் 3 சம்பவங்கள்
இந்தியாவிலேயே மிகவும் வேகமான ரயில் என்று இந்திய அரசால் கூறப்படும் 'வந்தே பாரத்' ரயில்களில் ஒன்று மீண்டும் ஓர் எதிர்மறைக் காரணத்துக்காக செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
ரயிலின் டிராக்ஷன் மோட்டார் பழுதடைந்ததால் சனிக்கிழமையன்று, புது டெல்லி மற்றும் வாரணாசி இடையே செல்லும் வந்தே பாரத் ரயிலின் பயணம் பாதியில் நிறுத்தப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்தக் கோளாறு காரணமாக ரயில் சக்கரத்தின் கச்சிதமான வட்ட வடிவம் மாறியதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர் என்று பிடிஐ செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை ஆறு மணியளவில் புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்த வந்தே பாரத் ரயில், சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உத்தர பிரதேசத்தின் குர்ஜா ரயில் நிலையம் வரை பயணித்த நிலையில் இந்தப் பழுது உண்டானது.
இந்த ரயிலில் இருந்த 1,068 பயணிகளும் பின்னர் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஷதாப்தி ரயில் ஒன்றின் மூலம் மதியம் 12:40 மணியளவில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
எருமைகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்
குஜராத்தின் வாத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையத்துக்கு இடையில், அக்டோபர் 6ஆம் தேதி எருமை மாடுகள் கூட்டத்தின் மீது மோதிய 'வந்தே பாரத்' முகப்பு பகுதி பகுதியளவு சேதமடைந்தது.
மும்பை மற்றும் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலை கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேதம் சரிசெய்யப்பட்டு இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த நாளே பசுமாடு ஒன்றின் மீது இதே ரயில் மோதியது.
அக்டோபர் 7ஆம் தேதி மதியம் குஜராத்தின் ஆனந்த் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
அடுத்த நாளான அக்டோபர் 8ஆம் தேதி வேறு ஒரு வந்தே பாரத் ரயில் பழுதடைந்து பாதியில் நிறுத்தப்பட்டதால் தொடர்ந்து மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
வந்தே பாரத் ரயில் தொடங்கிய மறுநாளே விபத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி 'வந்தே பாரத்' நடுத்தர விரைவு ரயில் சேவையை டெல்லியில் தொடக்கி வைத்தார்.
சோதனைகளின்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்ற இந்த ரயில், நரேந்திர மோதி தொடங்கி வைத்த மறுநாளே பிரேக் பழுதடைந்தது. கடைசி நான்கு பெட்டிகளில் இருந்தும் புகை கிளம்பி, அனைத்து பெட்டிகளிலும் மின்தடை ஏற்பட்டது.
அப்போது அந்த ரயில் வாரணாசியில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்தது. ரயில் பாதையில் ஏதேனும் கால்நடையின் மீது இந்த ரயில் மோதியிருக்கலாம் என்று அப்போது இந்திய ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வகை ரயில்கள் மேம்படுத்தப்பட்டு 'வந்தே பாரத் 2.0' என்ற பெயரில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதைத்தான் செப்டெம்பர் 30 அன்று குஜராத் தலைநகர் காந்தி நகரில் கொடியசைத்து தொடக்கி வைத்ததுடன், அதில் சிறிது நேரம் பயணமும் மேற்கொண்டார் நரேந்திர மோதி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்