You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: நவம்பர் 6ஆம் தேதி அனுமதி தர உயர் நீதிமன்றம் உத்தரவு - 10 தகவல்கள்
சென்னையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நவம்பர் 6ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. தமிழ்நாடு முழுவதும் ஐம்பதுக்கும் அதிகமான இடங்களில் காந்தி ஜெயந்தியன்று ஊர்வலம் நடத்த ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) இயக்கத்துக்கு நிபந்தனை அனுமதி அளித்து கடந்த 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால்,. திருவள்ளூர் மாவட்டத்தில் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து தமிழ்நாடு உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் செப்டம்பர் 27ஆம் தேதி காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2. இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் முன்பு ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், ஊர்வலம் தொடர்பாக செப்டம்பர் 22ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் தமிழ்நாடு அரசின் உத்தரவு அமைந்துள்ளது என்று முறையிட்டனர். இந்த விவகாரத்தை அவசர வழக்காக நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தலைமையிலான அமர்வு இன்று (செப்டம்பர் 30) பிற்பகல் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
3. "இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தங்களுடைய ஊர்வலம் நடத்தும் உரிமையை மாநில காவல்துறை பறிக்க முற்படுகிறது. போராட்டங்கள் நடத்த அனுமதி தருவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் வகையில் காவல்துறையின் செயல்பாடு உள்ளதால் இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும்," என்று ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினர்.
4. "மகாத்மா காந்தியின் பிறந்த நாளில்தான் நாங்கள் ஊர்வலம் நடத்த அனுமதி கோரினோம். ஆனால், அதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை," என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
5. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ, தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் தொடர்பான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்திய பிறகு, பல இடங்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரின் இல்லங்களையும் அலுவலகங்களையும் இலக்கு வைத்து கல்வீச்சு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறினார்.
6. தமிழ்நாட்டில் சாத்தியம் மிக்க சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறைந்தபட்சம் ஏழு உளவுத்தகவல் எச்சரிக்கை குறிப்புகள் மாநில அரசுக்கு வந்துள்ளதாக என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டார். அத்தகைய நுட்பமான உளவுத்தகவல்களை ஒதுக்கி விட முடியாது என்று கூறிய அவர், சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவின் விவரங்களை வாசித்துக் காட்டினார்.
7. மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ் உத்தேசித்துள்ள ஊர்வலத்துக்கு உள்நோக்கத்துடன் காவல்துறை மறுப்பதாக மனுதாரர் சார்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் என்.ஆர். இளங்கோ மறுத்தார். அக்டோபர் 2ஆம் தேதி நீங்கலாக வேறு தேதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரினால், அதை காவல்துறை பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
8. அப்போது மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா, "ஏற்கெனவே மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனைகளுக்குப் பிறகு பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு சம்பவங்கள் நடப்பதால், மாநில அளவில் சுமார் 52 ஆயிரம் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களின் உயிரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை தருகிறது," என்று கூறினார்.
9. இதையடுத்து வாதிட்ட என்.ஆர். இளங்கோ, "அக்டோபர் 2ஆம் தேதிக்கு என்று ஒரு புனிதம் இருக்கிறது. நாதுராம் கோட்சேவை ஒருபுறம் போற்றி வரும் அமைப்பு, மறுபுறம் அவரால் கொல்லப்பட்ட மகாத்மா காந்திக்கு பிறந்த நாள் கொண்டாட முற்படுகிறது," என்று தெரிவித்தார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஊர்வலம் நடத்துவதற்காக வேறு நான்கு தேதிகளை முன்மொழிந்தனர்.
10. அனைவரது கருத்துக்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், நவம்பர் 6ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒருவேளை அந்த தேதியில் காவல்துறை அனுமதி கொடுக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விசாரணை முன்னெடுக்கப்படும்," என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்