You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக வித்தியாசமான போஸ்டர்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாசகம் - பின்னணி என்ன?
போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் போஸ்டர்களால் சர்ச்சை ஏற்படுவதும் அரசியலில் புதியதல்ல. ஆனால், மாறிவரும் ட்ரெண்டுகளுக்கேற்ப போஸ்டர்களின் வடிவமும் வாசகமும்கூட மாறிவருகின்றன. அதிகரித்துள்ள சமூக வலைதளங்களின் பயன்பாட்டால் அப்படியான போஸ்டர்கள் உலகளாவிய கவனத்தையும் கூட பெறுவதுண்டு. அந்தவரிசையில் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் உலவி வருகிறது கர்நாடகாவில் அடிக்கப்பட்ட போஸ்டர்களின் படம்.
கர்நாடகத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பொதுப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாக பிரசாரம் செய்துவரும் காங்கிரஸ் கட்சி பே டிஎம் (PAYTM) க்யூ ஆர் கோட்(QR Code) போலத் தோற்றமளிக்கும் ஒரு போஸ்டரை வடிவமைத்து அதை சுவர்களில் ஒட்டியது.
அதில் பே டிஎம் பெயர் இருக்கும் இடத்தில் 'பே சிஎம்' என கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது. முதல்வருக்கு காசு கொடுங்கள் என்று பொருள் தரும் வகையில் அமைந்த இந்த வாசகத்துக்கு கீழே, 'இங்கு 40% ஏற்றுக்கொள்ளப்படும்' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
கீழே க்யூ ஆர் கோட் இடம் பெறும் இடத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உருவம் இடம் பெற்றிருந்தது.
இந்த பிரசாரம் தற்போது கர்நாடக அரசியல் களத்தில் சூடான வாதப் பிரதிவாதங்களைத் தொடங்கியிருப்பதோடு, இணையத்திலும் 'பேசிஎம்' என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ஏராளமான ட்வீட்டுகள் பகிரப்பட்டன. இதனால், இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
பின்னணி என்ன?
கர்நாடக மாநிலத்தில் பொதுப் பணிகளில் ஊழல் நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக மசோதாக்களை நிறைவேற்றுவதற்குக்கூட கர்நாடக அரசு 40% கமிஷன் பெறுவதாக மாநில சட்டமன்றத்தில் குற்றம்சாட்டி, அதற்கு விசாரணை வேண்டும் என்று பேசினார் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா.
இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்ட முதல்வர் பசவராஜ் பொம்மை, "ஒப்பந்தங்கள் வழங்குதல், மசோதாக்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை சிறப்பாக இருக்கிறது. ஆதாரமில்லாத இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மீது வெறும் அறிக்கைகள் மட்டுமே கொடுக்க முடியும்" என்று பதிலளித்தார்.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சி இந்த போஸ்டர் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. கர்நாடக அரசில் நடைபெறும் ஊழல் கூறித்து புகார் அளிக்க ஒரு பிரத்யேக இணையதளத்தை தொடங்கிய காங்கிரஸ் கட்சி ஒரு அலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளது.
அந்த புகாரளிக்கும் இணையதளத்துக்கான முகவரிதான் க்யூ.ஆர் கோட் வடிவில் மாற்றப்பட்டு போஸ்டராக ஒட்டப்பட்டுள்ளது. இந்த க்யூ.ஆரை ஸ்கேன் செய்தால் புகாரளிக்கும் இணையதளத்துக்கு உங்கள் அலைபேசி செல்லும். இந்தப் படங்களை சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவாளர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
"என்னையும் கைது செய்யுங்கள்"
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "இது கர்நாடகாவின் மீதான நன்மதிப்பையும் என் மீதான நன்மதிப்பையும் உடைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு செய்யும் செயல். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்ய உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று பேசினார்.
இதற்கு எதிர்வினையாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா, "ஊழல்களை வெளிக்கொண்டு வருவது சட்டவிரோதமானது. ஆனால், கன்னடர்களை சுரண்டுவது சட்டபூர்வமானதா? எத்தனை பேரை கைது செய்ய முடியும். கிராமங்கள் தோறும் ஜெயில் கட்டுவீர்களா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "கட்சி ஊழியர்களுடன் சேர்ந்து நானும் போஸ்டர் ஒட்டுவேன். என்னையும் கூட கைது செய்யுங்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காந்தி குடும்பம்தான் ஊழலுக்கு பெயர்போனது என்றும் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலை செய்தவர் ஜவாஹர்லால் நேரு என்றும் கர்நாடக பாஜக ட்வீட் செய்துள்ளது.
தற்போது நடப்பது என்ன?
இதற்கிடையில், அடுத்த வடிவத்தை தொடங்கிவிட்டது காங்கிரஸ் தரப்பு.
முதலமைச்சருக்கு பணம் அனுப்புங்கள் என்று குறிப்பிட்டு PAYCM பிரசாரத்தை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி, தற்போது பணம் வந்துவிட்டது என்பதைக் குறிக்கும் விதமாக ஊழல் குற்றச்சாட்டுகளின் பெயர்களையும் அவற்றோடு தொடர்புடைய தொகையையும் குறிப்பிட்டு படங்களை வெளியிட்டு வருகிறது.
இதன் பின்னணியில் மூளையாக இருந்து செயல்படுவது யார் என்பதைக் கண்டறிய உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.
அதேசமயம், கர்நாடக பாஜக தரப்பிலும் சித்தராமையாவின் படத்துடன் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் பெயர்களையும் குறிப்பிட்டு பதிவுகள் வெளியாகி வருகின்றன. அத்துடன் 'காங்கிரஸ் டெர்ரர்' என்ற தலைப்பின் கீழும் காங்கிரசுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்