நீட் தேர்வில் தோல்வி பயம் - கரூர் அருகே மாணவி தற்கொலை

தற்கொலை தடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்கொலை எண்ணம், சர்கோமா, எலும்பு, சிறுநீர்ப்பை மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இருப்போரை ஆதரிக்கும் விதமாக காட்டப்படும் மஞ்சள் நிற ரிப்பன் அடையாளம்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதிய நிலையில், தோல்வி பயம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ள கொள்ளுதின்னி பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் சேகர்-லட்சுமி. இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இவரது மூத்த மகள் ப்ரீத்தி ஸ்ரீ (18). தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் குறைவான மதிப்பெண் (326 கட் ஆஃப்) பெற்றதால் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர தகுதி பெறவில்லை என்றும் கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கட்ஆஃப் மதிப்பெண் கிடைத்ததாகவும் மாணவியின் உறவினர் இருளப்பன் தெரிவித்துள்ளார்.

ஆனால், எம்.பி.பி.எஸ் தான் படிப்பேன் எனக்கூறி வந்த மாணவி, இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். வேங்கம்பாடி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஓர் ஆண்டாக நீட் தேர்வுக்குப் படித்து வந்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த நீட் தேர்வினை எழுதி வந்த மாணவி பாட்டி வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மாணவி பாட்டியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த பாட்டி மாணவியை பலமுறை கூப்பிட்டும் வராததால் வீட்டினுள் சென்று பார்த்த போது, மாணவி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, மாணவியின் பெற்றோருக்கும், லாலாபேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில், குறைவான மதிப்பெண் வந்து விடுமோ என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக உறவினர்களிடம் கூறி வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது தற்கொலைக்கு காரணம், நீட் தேர்வு என்று மாணவியின் உறவினர் ஆண்டவர் கூறியுள்ளார்.

இதற்கு முன், கடந்த ஜூலை 16ஆ தேதி, நீட் தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி நிஷாந்தி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதே போல், கடந்த 2021ஆம் ஆண்டு மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், நீட் தேர்வில் இரு முறை தோல்வி சந்தித்த நிலையில், மூன்றாவது முறையாக தேர்வு எழுத இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த சில ஆண்டுளில், நீட் தேர்வு காரணமாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

2017ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா உயிரிழந்தார். அவரது மரணம், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் தங்களுடைய குரலை வலுவாக எழுப்பத் தூண்டியது.

தற்கொலை தடுப்பில் சமூகத்தின் பங்கு

நீட் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

"ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்," என்கிரார் மன நல மருத்துவர் ரம்யா சம்பத்.

சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் "Working together to Prevent Suicide" என்பதே. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்கொலை

பட மூலாதாரம், DOMOSKANONOS

இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு என்கிறார் மன நல மருத்துவர் ரம்யா சம்பத்.

தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

இதன் அடுத்தகட்டமாக, 'மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.

`இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.

நீட் தேர்வு பின்னணி

நீட் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

2013 ஆம் ஆண்டு, ஜூலை 18ஆம் தேதியன்று, நீட் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைத்தது. பின்னர், அதே ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியன்று, இந்திய மருத்துவ கவுன்சில் மறுபரீசிலனை மனுவை தாக்கல் செய்தது.

மூன்று ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது தமிழகத்தில் தேர்தல் நேரம். இதனால், தமிழக அரசுக்கு தேர்வு நடத்துவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டது. அதாவது ஏப்ரல் 2016 முதல் ஏப்ரல் 2017 வரை விலக்கு கிடைத்தது.

இதன் பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது.

அதன் பிறகும், 2017ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ம் தேதி, சென்னையில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "நீட் தேர்வு தொடர்பாக, அரசு கல்லூரிகளுக்கு மட்டும் அவசர சட்டம் (ordinance) மூலமாக மாநில அரசு ஓராண்டுக்கு விலக்கு கேட்டால், மத்திய அரசு ஒப்புதல் அளிக்க தயாராக உள்ளது," என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு, நீட் தேர்வுக்கு எதிரான இரண்டு மசோதாக்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஏழு மாதங்களுக்கு பிறகு, அதே ஆண்டு, செப்டம்பர் 18 ஆம் தேதி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளிக்க மறுத்தார்.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, செப்டம்பர் மாதம் நீட் விலக்கு மசோதாவுக்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை, 8ஆம் தேதியன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்தி மீண்டும் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: