புல்லட் மீதான காதல்: பிடித்ததை செய்ய வயது ஒரு தடையல்ல - நிரூபித்த பெண்கள்

புல்லட் ஓட்டும் பெண்கள்
    • எழுதியவர், ஹேமா ராகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

புல்லட் ஓட்ட வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பெண்களும் சந்திக்கின்ற பொதுவான கேள்விகள் சில உண்டு. அந்த எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட பிறகும் அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு புல்லட் ஓட்டத் தொடங்கியிருக்கிறது இந்த பெண்கள் குழு.

சென்னையில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற பிரத்யேகமான புல்லட் பயிற்சி முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. அதில் சென்னை மட்டுமல்லாது பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பெண்களும் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியின் சிறப்பம்சமே சைக்கிள் கூட ஓட்டத்தெரியாத இந்தப் பெண்கள் பயிற்சி எடுத்த 2 நாட்களில் நம்பிக்கையுடன் பின்னால் ஒரு ஆளை வைத்துக் கொண்டு புல்லட் ஓட்டுமளவு தயாராகினர்.

குழந்தைப் பருவத்திலிருந்து பல பெண்கள் கண்ட கனவு இந்த பயிற்சி முகாமில் நினைவாகி செயல்வடிவமும் பெற்றது.

கனவுகளும் கதைகளும்

இந்த பயிற்சிக்காகவே தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு கோவை முதல் சென்னை வரை தனியாக கார் ஓட்டிக் கொண்டு வந்தார் ஒரு பெண். ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். ஆனால், புல்லட் மீதான தன்னுடைய கனவை நினைவாக்க பயணத்தை பொருட்படுத்தாது வந்துள்ளார் இவர்.

குடும்பத்தலைவியான சௌமியாவுக்கு கல்லூரி செல்லும் வயதில் மகள் உண்டு. இவருக்கு பல வருடங்களாக புல்லட் மீது தீராத காதல் இருந்திருக்கிறது.

தினமும் கணவரின் புல்லட்டை துடைத்து வைக்கும் போது, நம்மால் இதை ஓட்ட முடியுமா என்று எண்ணி இருக்கிறார். ஆனால் யார் கற்றுத்தருவார்கள்? இந்த வயதில் புல்லட் ஓட்ட கற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் மனதை துளைத்தெடுத்திருக்கிறது. ஆனால் இந்த பயிற்சியில் அதை நிறைவு செய்ததும் அவருடைய கண்களில் அத்தனை சந்தோஷம்.

இதுகுறித்து பேசியபோது, "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் ஏதோ சாதித்துவிட்டதை போல உணர்கிறேன். புல்லட் வண்டி ஓட்ட வேண்டும் என்ற கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. இனி நான் சொந்தமாக புல்லட் வாங்கி தனியாக பயணம் செய்வேன். அதற்கான தன்னம்பிக்கையை இந்த பயிற்சி முகாம் கொடுத்திருக்கிறது" என்று கூறினார் சௌமியா.

புல்லட் ஓட்டும் பெண்கள்

25 வயதான சுமித்ரா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சிறுவயதில் சைக்கிள் ஓட்டும் போது இவர் கீழே விழுந்து அடிபட்டு விட்டது. மேலும் உயரம் குறைவாக இருப்பதன் காரணமாக சைக்கிள் மற்றும் வண்டியை ஓட்ட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததால், அது வெறும் கனவாகவே போய்விட்டது. தன் 25 வயது வரைக்கும் சைக்கிள் கூட சுமித்ரா ஓட்டியதில்லை. மிகவும் ஏக்கமாகவே நாட்களை கடத்தி வந்தார் சுமித்ரா.

இதற்கிடையில், பெண்களுக்காக பிரத்யேகமான புல்லட் பயிற்சி என்ற தகவலை பார்த்ததும் மிகவும் சந்தோஷமடைந்திருக்கிறார். ஆனால் இதுவரை தான் எதுவுமே ஓட்டியதில்லை. அதனால் தன்னால் புல்லட் ஓட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஆனால் இந்த 2 நாட்கள் பயிற்சியில் கலந்து கொண்ட பின் தான் புல்லட் ஓட்டியதோடு மட்டுமல்லாமல் பின்னால் ஒருவரை வைத்தும் கொண்டும் வண்டி ஓட்டியுள்ளார்.

" நான் உயரம் குறைவாக இருந்ததால் ஏற்கனவே என்னை பலரும் கேலி செய்வார்கள். அதிலும் புல்லட் ஓட்ட போகிறேன் என்றால், என்வீட்டில் என்னை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது பெருமையாக இந்த சான்றிதழை கொண்டு போய் காட்டுவேன்" என்று துள்ளலாக சொல்கிறார் சுமித்ரா.

காணொளிக் குறிப்பு, இந்திய ஒலிம்பிக் கனவு: சத்யனின் மேஜைக்கு வருமா தங்கப் பதக்கம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: