You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி தொடர்புடைய 2ஜி வழக்கில் தினசரி விசாரணை நடத்த சிபிஐ புதிய மனு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக, சிபிஐ தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கு குறித்து தினசரி விசாரணை நடத்தக் கோரியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியின்படி, 2ஜி அலைக்கறை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் புதிதாக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "கடந்த 2018ஆம் ஆண்டில் விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பு வாதம் கடந்த 2020 ஜனவரி 15ஆம் தேதியன்று நிறைவடைந்தது. எதிர் தரப்பினரின் வாதம் 2020 பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது.
கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட விவகாரங்களால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கில் தினசரி விசாரணை நடத்த வேண்டும்.
உயர்நீதிமன்றத்தில் தினசரி விசாரணை நடத்த முடியவில்லையெனில் சிறப்பு அமர்வை நியமித்து தினசரி விசாரணை நடத்தலாம்," என்று கோரப்பட்டுள்ளது.
"ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே அவர்களின் நோக்கம்" - அமித் ஷா
காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது குறித்து விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ராமர் கோயிலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாததால், மறைமுகமாக இப்படித் தெரிவிக்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியின்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் தலைவர்கள் சாதாரண உடையில் போராட்டம் நடத்தியதைப் பல முறை பார்த்துள்ளோம். ஆனால், இன்று(05/08/2022) அவர்கள் கருப்பு உடை அணிந்ததற்கான காரணம், இது ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடந்த நாள் என்பது தான்.
550 ஆண்டுகள் நீடித்த பிரச்னைக்கு பிரதமர் மோதி அமைதியான முறையில் தீர்வு கண்டார். கோயில் கட்டுமானப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், ராமர் கோயில் பிரச்னையைத் தீர்க்க எதுவுமே செய்யவில்லை. ராமர் கோயிலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாத காரணத்தால், மறைமுகமாக இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மறபடி, விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறை விசாரணை என்பதெல்லாம் வெறும் சாக்கு போக்குதான்," என்று கூறினார்.
நான்கு வயது குழந்தையை 4வது மாடியிலிருந்து வீசிய தாய் கைது
பெங்களூருவின் மையப்பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தின் நான்காவது மாடியிலிருந்து தனது 4 வயது மகளைத் தூக்கி வீசிக் கொன்றதாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், "இந்தச் சம்பவம் எஸ்.ஆர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பங்கிராமநகரில் வியாழக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது. குழந்தை மனநலம் குன்றிய நிலையில் இருந்ததாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
பல் மருத்துவரான 34 வயதான குழந்தையின் தாய், குழந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு விபத்து போல இருப்பதற்காக, அலாரத்தை அழுத்தியுள்ளார். மேலும் அவரும் நான்காவது மாடியிலிருந்து குதிக்க முயன்றுள்ளார்.
இந்தச் சம்பவம், அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தனது திட்டம் தோல்வியடைந்ததை உணர்ந்த தாய், வழக்கறிஞர் ஒருவருடன் காவல்துறையை அணுகி வியாழக்கிழமை இரவு சரணடைந்தார்.
விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு, அந்தப் பெண் தனது மகளை ரயிலில் விட்டுவிட்டு வீடு திரும்பியது தெரியவந்தது. ஒரு மென்பொருள் பொறியாளரான அவருடைய கணவர் கேட்டபோது மகள் காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளார். மகளின் மீது அதீத பாசம்கொண்ட கணவர், உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து, ஹசன் ரயிலில் யெலஹங்கா அருகே குழந்தையைக் கண்டுபிடித்தார்.
இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 302-இன் கீழ் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது, தனது மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்திருந்ததாக பல் மருத்துவர் சுஷ்மா பரத்வாஜ் தெரிவித்துள்ளார்," என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்தச் செய்தியில், "12 ஆண்டுகளுக்கு முன்பு திருமண வாழ்வில், இருவருக்கும் 6 ஆண்டுகள் குழந்தை இல்லை. பிறகு, சுஷ்மா செயற்கை கருவூட்டல் மூலம் மகளைப் பெற்றெடுத்தார். குழந்தை இரண்டு வயதைக் கடந்தும் பேசவில்லை. அதிலிருந்து சுஷ்மா தன் மகளை அலட்சியப்படுத்தத் தொடங்கியுள்ளார்," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்