You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தை கைது செய்தது அமலாக்கத்துறை - என்ன நடந்தது?
சிவ சேனை கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.
முன்னதாக சிவ சேனை கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.
ஆனால் பத்ரா சாவுல் நில ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் குறிப்பிடப்பட்டது.
அதாவது ஆயிரம் கோடி மதிப்பிலான வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இன்று காலை 7 மணிக்கு சஞ்சய் ராவத்தின் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைகளை தொடங்கியது.
இந்த சோதனை குறித்த செய்தி பரவியதும் சஞ்சய் ராவத்தின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டின் முன்னே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவசேனை கட்சியை சேர்ந்தவர்கள் சஞ்சய் ராவத்திற்கு ஆதரவான கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த சோதனை குறித்து பேசிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் அஞ்சுகிறார்? அவர் சிவசேனையின் மகா விகாஸ் அகாடியின் மூத்த தலைவர். ஒருவர் அமலாக்கத்துறைக்கு அஞ்சுகிறார் என்ற காரணத்திற்காக மட்டும் எங்களின் கட்சிக்கு வரக் கூடாது" என தெரிவித்துள்ளார்
"அமலாக்கத்துறை இதற்கு முன்பும் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அமலாக்கத்துறை மத்திய அரசுக்கு அஞ்சி நடந்தால் உச்ச நீதிமன்றம் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை அதன் பணியை செய்கிறது," என்றார். ஏக்நாத் ஷிண்டே
"சிவசேனையை விட்டு வரமாட்டேன்"
தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், தான் எந்த தவறையும் இழைக்கவில்லை என்றும், தொடர்ந்து போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்தடுத்து ஐந்து டிவீட்டுகளை பதிவிட்டிருந்தார் சஞ்சய் ராவத். அதில்,
மூன்றாவது ட்வீட்டில், "தவறான நடவடிக்கை, தவறான ஆதாரங்கள், நான் சிவ சேனையை விட்டு விலக மாட்டேன். எனது உயிர் போனாலும் நான் சரணடைய மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா," என்று பதிவிட்டுள்ளார்.
நான்காவது ட்வீட்டில், "இந்த ஊழலுக்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை சிவ சேனை கட்சியின் தலைவர் பாலா சாஹேப் தாக்கரேயின் மீது ஆணையிட்டு சொல்கிறேன். பாலா சாஹேப் எங்களுக்கு போராட கற்று தந்துள்ளார். சிவ சேனைக்காக நான் தொடர்ந்து போராடுவேன்," என்று தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது ட்வீட்டில், "ஜெய் ஹோ ஷிவ் சேனா, நான் தொடர்ந்து போராடுவேன்," என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூலை 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விசாரணைக்காக ஆஜராக அமலாக்கத் துறை விடுத்த அழைப்பை சஞ்சய் ராவத் புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.
சஞ்சய் ராவத் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவர்.
மகாராஷ்டிராவில் சிவ சேனையின் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியிலிருந்து பிரிந்து எதிர்ப்பு அணி உருவானதில் தாக்கரே தனது பதவியை இழந்தார். ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
இந்த நிலையில் சிவ சேனை கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான சஞ்சய் ராவத்தின் வீட்டில் இன்று இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்