விருதுநகரில் விவசாய நியாய விலைக் கடை பெயரில் பருப்பு வியாபாரியிடம் கோடி ரூபாய் மதிப்பில் மோசடி: நடந்தது என்ன?

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

விருதுநகரில் மத்திய அரசின் திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பருப்பு வாங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி தனலட்சுமி இவர்கள் 'தனலட்சுமி டிரேடர்ஸ்' எனும் பெயரில் பருப்பு மொத்த கொள்முதல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2021 ஆண்டு, விருதுநகரை சேர்ந்த பருப்பு வியாபாரிகளான முருகேசன், ஹரிஹரன் ஆகியோர் சேர்ந்து ராஜ்குமார்-தனலட்சுமி தம்பதியினரை சந்தித்து தாங்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும்‌ 'கிஸான் ரேஷன் ஷாப்' (விவசாய நியாய விலைக் கடை) நிறுவன பர்ச்சேஸ் இன்சார்ஜ்கள் என அறிமுகப் படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து, அரசு அடையாள அட்டைகளை காண்பித்து தங்களை அரசு அதிகாரிகள் என கூறி உள்ளனர்.

பருப்பு மொத்த கொள்முதல் வியாபாரிகளிடமிருந்து மானிய விலைக்கு பருப்பு கொள்முதல் செய்து, அதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கிஸான் ரேஷன் ஷாப் வழியாக பொதுமக்களுக்கு சரியான விலையில் வழங்கும் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்து தங்களுக்கு பருப்பு விற்பனை செய்தால் 2 நாளில் பணம் வந்துவிடும் என கூறியுள்ளனர் இதற்கு ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆர்வம் காட்டியுள்ளனர்.

அதை தொடர்ந்து கிஸான் ரேஷன் ஷாப் சேர்மன் என கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரும், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்த பாண்டியராஜன்‌ மேனேஜிங் டைரக்டர் எனவும் ராஜ்குமார் தம்பதியிடம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, கிஸான் ரேஷன் ஷாப் திட்டம் பற்றி பல்வேறு ஆவணங்களை காட்டியுள்ளனர்.

இதை முழுசாக நம்பிய ராஜ்குமார் தம்பதியினர், கிஸான் ரேஷன் ஷாப் திட்டத்தில் சேர்ந்து தொழில் செய்ய விருப்பம் தெரிவித்து டெண்டர் போட்டுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களுக்குள் சுமார் ஐந்து கோடி மதிப்பிலான பருப்பு மூட்டைகளை ஜெயகணேஷ் மற்றும் பாண்டியராஜன் கொடுத்த முகவரிக்கு ராஜ்குமார் தம்பதியினர் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் இவை எதற்கும் ஜெய்கணேஷ் மற்றும் பாண்டியராஜன் பணம் வழங்கவில்லை . இதனால் சந்தேகமடைந்த ராஜ்குமார் இதுகுறித்து, ஜெயகணேஷ், பாண்டியராஜனிடம் கேட்டுள்ளார். விரைவில் ராஜ்குமாருக்கு பணம் கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். இதை அடுத்து ராஜ்குமார் சரக்குகளை அனுப்ப மறுப்பு தெரிவித்ததை அடுத்து பாண்டியராஜனின் வங்கி கணக்கு மற்றும் அவருக்கு சொந்தமான ஜெயா டிரேடர்ஸ் நிறுவனக் கணக்கு மூலமாக 2 கோடியே 15 லட்ச ரூபாயை ராஜ்குமாருக்கு கொடுத்துள்ளனர். மீதி 2 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரத்து 40 ரூபாயை கொடுத்தால் தான் சரக்கு அனுப்புவேன் என ராஜ்குமார் மறுத்து விட்டு அவர்கள் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது அரசு அதிகாரிகள் என தன்னை ஏமாற்றி போலியான அரசு அடையாள அட்டைகளை வைத்து மானிய விலையில் பருப்பை கொள்முதல் செய்து அதே பருப்பை விருதுநகர் மார்க்கெட்டில் உள்ள பல நிறுவனங்களுக்கு கள்ளச்சந்தையில் குறைந்த விலைக்கு உடனுக்குடன் விற்று பணம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

கள்ளச்சந்தையில் பருப்பு மொத்த விற்பனைக்கு வாங்குவோருக்கு குறைவான விலையும், அதேப் பருப்பை கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து அதிக விலைக்கும் விற்று கொள்ளை லாபம் சம்பாதித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த ராஜ்குமார் அவரது மனைவி தனலட்சுமி, பருப்பு கொள்முதலுக்கான மீதத்தொகையை கேட்டதற்கு பாண்டிராஜன், அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறுகின்றனர்.

இதனால் பயந்துபோன அவர்கள், இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பல மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி

இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கையில், விசாரணையில், ஜெயகணேஷ், பாண்டியராஜன் சேர்ந்து தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று பல கோடி ரூபாய் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் பதுங்கி இருந்த ஜெயகணேஷை குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அதன்பின் பாண்டியராஜனும் சென்னை போலீஸால் கைது செய்யப்பட்டு தற்போது இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெய்கணேஷ் மற்றும் பாண்டியராஜன் வாக்குமூலத்தின்படி, இந்த பண மோசடியில் பாண்டியராஜன் மற்றும் ஜெய்கணேஷுக்கு உதவிய விருதுநகரைச் சார்ந்த முருகேசன், கருமாரியப்பன் ஆகியோரை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்துள்ள நிலையில் இவர்களுக்கு உதவிய மேலும் 2 நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

'விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராஜ்குமார் கூறுகையில், அடிப்படை தேவையான உணவுப்பொருளில் நடக்கும் இந்த மோசடியை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதுபோன்று விருதுநகரிலும் ஒரு சில வியாபாரிகளிடமும் இவர்கள் மோசடி செய்துள்ளனர். ஆனால் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதன் காரணமாக அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்காமல் உள்ளனர்.

உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தால் மட்டுமே இது போன்ற மோசடி கும்பலை கண்டறிந்து பணம் மீட்க பட்டு அவர்களுக்கு தண்டனையும் பெற்று தர முடியும் என அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: