குட்கா வழக்கு: விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோரை விசாரிக்க அரசு அனுமதி

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் அனுமதி கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியிக்காலத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தபோதும், மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகே இது சூடுபிடித்தது. இந்த நிலையில், தற்போது ஆளும் திமுக அரசு சிபிஐக்கு அனுமதி அளித்திருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த மாதவராவ் என்ற குட்கா வியாபாரி ரூ. 250 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கில், 2016இல் வருமானவரித்துறை விசாரணை மேற்கொண்டததுதான் குட்கா வழக்கின் ஆரம்பப்புள்ளி.
சென்னையை அடுத்து செங்குன்றம் பகுதியில் குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, ஆட்சியில் இருந்த அதிமுக அமைச்சர்கள் பலர் மற்றும் பல துறைகளில் உள்ள அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குட்கா வியாபாரம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாயின.
அத்துடன் குட்கா வியாபாரத்திற்கு, அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான முக்கியமான டைரி ஒன்று சோதனையின்போது வருமானவரித்துறைக்கு கிடைத்தது. அதில் ரூ. 39.91 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
குட்கா வியாபாரி லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.


ஆணையர் மாற்றத்தில் அரசியலா?
இந்தக் கடிதம் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊடகங்களில் கசிந்தது. ஆனால், அம்மாதிரி கடிதம் ஏதும் எழுதப்படவில்லை என்று தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. அதே தருணத்தில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக இருந்தது அசோக் குமார் ஓய்வுபெற்றார். அவருக்குப் பிறகு புதிய காவல்துறை டிஜிபி இயக்குநராக டி.கே. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்க முற்பட்டதாலேயே அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார் என்றும் மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டார் என்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு குட்கா வியாபாரி லஞ்சம் கொடுத்தது பற்றியும் ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பது பற்றியும் தமிழக சட்டமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டபின்னர்தான், இந்த விவகாரத்தில் வழக்கு பதிவாகியது.
இந்த நிலையில் இந்த குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வழக்கு பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை கையில் எடுத்து சிபிஐ.
2018ல் இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட 27 பேர் மீது சிபிஐ. அதிகாரிகள் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்ட ஆறு பேர் கைதாகினர்.
தற்போது, இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ தற்போது தயாராகி வருகிறது. அதில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தனர். இந்த விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.


வருமான வரித்துறையின் பிரமாண பத்திரம்
இந்த வழக்கில், வருமான வரித் துறை ஒரு பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது.
வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் முதன்மை இயக்குநர் சுசி பாபு வர்கீஸால் தாக்கல் செய்துள்ள அந்த பிரமாண பத்திரத்தில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் சோதனையிட்டபோது, குட்கா விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், சில மூத்த காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் காவல்துறை டிஜிபிக்கு அசோக் குமார் முதல்வருக்கு எழுதி கடுசநி கடிதம் கிடைத்ததாக" கூறப்பட்டுள்ளது.
வேதா நிலையம் இல்லத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதியன்று இரவில் சோதனை நடத்தியபோது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அறையில் சோனையிடப்பட்டதாகவும் அங்கு முன்னாள் டிஜிபி 2016 செப்டம்பர் 2ஆம் தேதி முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாகவும் அத்துடன் வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் 2016 ஆகஸ்ட் மாதம் எழுதிய ரகசிய கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித்துறை தன் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை எழுதிய கடிதமே இல்லை என தமிழக அரசு கூறியிருந்த நிலையில், வருமான வரித்துறை தாக்கல் செய்த இந்த பிரமாண பத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























