அதிமுக வங்கி கணக்குகளை யார் கையாள்வது? தொடங்கியது புகார் போர்

திண்டுக்கல் சீனிவாசன்

பட மூலாதாரம், TWITTER

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் வங்கி கணக்குகளைக் கையாள அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து, எடப்பாடி தரப்பால் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வங்கிகளுக்கு அளித்த கடிதம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் கட்சி பதவிகள் குறித்த முடிவு நிலுவையில் இருப்பதால், வங்கி கணக்குகளை முடக்கவேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு புதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் ரிசர்வ் வங்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தாலும், தற்போதுவரை தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராக இருப்பதால், வங்கி கணக்குகளை தனது அனுமதி இன்றி கையாள யாரையும் அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டள்ளார். ஆனால் முன்னர், வங்கிகளுக்கு இபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில், கட்சி பொதுக்குழு நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடைபெற்று, அதில் தேர்வு செய்யப்பட்ட பொருளாளர் சீனிவாசன் என்பதால், கட்சியின் ஏழு வங்கி கணக்குகளை கையாள அவருக்கு முழு அதிகாரம் சட்டப்படி உள்ளதாக கூறியுள்ளார்.

ஓபிஎஸ்

பட மூலாதாரம், Getty Images

ஓபிஎஸ் வங்கி கணக்குகளை முடக்க கடிதம் எழுதியுள்ள பரபரப்பு அடங்குவதற்குள், அதிமுகவின் இடைகால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் இருந்து அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்து சென்றுள்ளதாக ஓபிஎஸ் அணியினர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த மோதலின் போது, அதிமுகவின் கட்சி அலுவலகத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள், கட்சிக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருட்களும் திருடப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், ஓபிஎஸ் ஆதரளவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். கட்சியின் சொத்துக்களை எடுத்துச்சென்றுள்ளதை எதிர்த்து புகார் கொடுத்துள்ளோம். கட்சி அலுவலகத்தின் அசல் பத்திரமும் அதில் அடங்கும் என்றார்.

முன்னதாக, அதிமுக கட்சி அலுவலகம் மற்றும் ராயப்பேட்டை பகுதியில் ஓபிஎஸ் இபிஎஸ் அணியினர் ஜூலை11ம் தேதி மோதிக்கொண்டதில், பொதுச்சொத்துக்களும் சேதம் அடைந்துள்ளதாகக் கூறி இரு அணிகளைச் சேர்ந்த 400 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: