ஹரியானாவில் நடந்த டிஎஸ்பி கொலை: பல ஆண்டுகளாக நடக்கும் மணல் கொள்ளையும், காவல்துறையுடனான மோதலும் - கள நிலவரம்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், சுபம் கிஷோர்
- பதவி, ஹரியாணாவின் நூஹ் நகரிலிருந்து பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஹரியாணா மாநிலம் தாவ்டு பகுதியில் ஒரு பழைய வைரல் வீடியோ மக்களிடையே மீண்டும் விவாதத்தில் உள்ளது. 2020 டிசம்பரில் வெளியான இந்த வீடியோவில், சட்டவிரோத சுரங்கப் பணியைத் தடுக்க காவல்துறை மேற்கொண்ட முயற்சிகளைப் பார்க்கமுடிகிறது.
அதே வீடியோவைக் காட்டிய உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், "டிஎஸ்பி கொல்லப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனால் அதைத் தடுத்திருக்க முடியுமா என்பதுதான் கேள்வி. சட்டவிரோத சுரங்கம் இங்கு புதிதல்ல. காவல்துறையுடன் மோதலும் புதியதல்ல. இது நிற்பதே இல்லை. அது ஏன்?," என்று கேள்வி எழுப்பினார்.
அராவலி மலைப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருவதையும் போலீசார் மலையின் அடிவாரத்திற்குச் சென்று அவர்களை தடுப்பதையும் வீடியோவில் காணலாம்.
அப்போது திடீரென மேலே இருந்து கற்கள் வீசப்படுகின்றன. போலீஸ்காரர்கள் அவர்களை பலமுறை எச்சரித்தும் கல்வீச்சு தாக்குதல்கள் தீவிரமடைகின்றன. உயரத்தில் இருந்து கல் வீசப்பட்டதால் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் போலீசார் அங்கிருந்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வீடியோவை எடுத்த ஹரியாணா காவல்துறையைச் சேர்ந்த ஓம்பீர் சிங், அப்போது தாவ்டு நகரின் காவல் நிலையத் தலைவராக இருந்தார். பிபிசியிடம் பேசிய அவர், "இதுபோன்ற நேரத்தில் மலைப்பகுதிக்குச் செல்லும் போதெல்லாம் போலீசார் தாக்கப்படுகிறார்கள். பொதுவாக அவர்கள் கற்களால் தாக்கப்படுகிறார்கள்," என்றார்.
சட்டவிரோத சுரங்கத் தொழிலாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்கள் தாவ்டு மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்குப் புதிதல்ல. சட்டவிரோத கற்கள் நிரப்பப்பட்ட டம்ப்பர்களை சாலைகளில் பார்க்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், OMBIR SINGH
"இந்த சாலையில் சட்டவிரோத கற்கள் நிரம்பிய டம்ப்பர் ட்ரக்குகளை பலமுறை பார்த்துள்ளேன். இது எங்களுக்கு மிகவும் சகஜம். பலமுறை போலீஸ் வாகனங்கள் அவற்றை துரத்துவதையும் பார்த்திருக்கிறேன்," என்று இதுகுறித்து தாவ்டு பைபாஸ் அருகே வசிக்கும் யோகேஷ் கூறினார்.
"சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஒரு டம்ப்பர் லாரியை துரத்தியது. டம்ப்பர் ஓட்டுநர் வண்டியில் இருந்த எல்லா கற்களையும் இங்கே கவிழ்த்துவிட்டார். பாருங்கள், மின்கம்பிகளும் சேதமடைந்துள்ளன," என்று அருகில் இருந்த மின் ஒயர்களைக் காட்டி அவர் கூறினார்.
வழக்கமாக போலீஸ் துரத்தும்போது, டம்ப்பரில் உள்ள கற்கள் சாலைகளில் கவிழ்க்கப்படுகின்றன. கற்கள் சாலையில் விழும்போது போலீசார் முன்னோக்கிச் செல்ல முடியாமல் போவதால் டம்ப்பர் ஓட்டுநர் தப்பிச் சென்று விடுகிறார்.
ஜூலை 19ஆம் தேதி ஒரு கிராமத்திற்கு அருகே, தாவ்டு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுரேந்திர சிங் பிஷ்னோய், டம்ப்பர் கற்களால் தாக்கிக் கொல்லப்பட்டார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலும் இதேபோல கற்குவியல் காணப்பட்டது.

பட மூலாதாரம், SHAHNAWAZ/BBC
சட்டவிரோத மணல் அள்ளும் தொழில் எப்படி நடக்கிறது?
டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னோய் கொல்லப்பட்ட இடத்தை அடைவது அவ்வளவு எளிதானதல்ல. பச்காவில் சாலைகள் முடிவடையும் இடத்திலிருந்து, மலைப்பாங்கான பகுதிகளின் செப்பனிடப்படாத சாலைகள் வழியாக சுமார் இருபது நிமிடங்கள் பயணித்து நாங்கள் அங்கு சென்றடைந்தோம்.
இந்த இடங்களில் சுரங்கம் தோண்டும் சம்பவங்கள் நடப்பதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சில இடங்களில் கற்கள் விழுந்திருந்ததையும் பார்த்தோம். அப்போது அங்கிருந்த கிராமவாசி ஒருவர், "இவை வலிமையான மலைகள். இவற்றை துளையிடும் போதுதான் இதுபோன்ற கற்கள் வெளிவரும். அதாவது இங்கு சுரங்கம் தோண்டுவது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலர் இதனுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிலர் இயந்திரங்கள் மற்றும் டம்பர்கள் வைத்திருப்பதாகவும் கூறினர். சிலர் கைகளால் சுரங்கப்பணி செய்வதாகவும் சிலர் மற்றவர்களுக்காக வேலை செய்வதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
"அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த, இயந்திரம் இல்லாதவர்கள் கையால் தோண்டுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை அதிகம். டிரில்லிங் மிஷின்களை பயன்படுத்தினால் போலீசாருக்கு தெரியவரும் அபாயம் உள்ளது," என்று பெயர் வெளியிடாத விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SHAHNAWAZ/BBC
கற்கள் அகற்றப்பட்ட பிறகு, அவை டம்ப்பர்களில் ஏற்றப்பட்டு கிரஷருக்கு அனுப்பப்படுகின்றன. இந்த டம்ப்பர்கள் போலீசாரின் பார்வையில் படுவதைத் தவிர்க்கும் வகையில், இரவு நேரங்களில் செப்பனிடப்படாத சாலைகள் வழியாக வந்து செல்கின்றன. பல நேரங்களில் போலீஸார் இவற்றைப் பார்த்தாலும்கூட எதுவும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
"அவர்களைத் தடுப்பது எளிதல்ல. அவர்கள் நெரிசல் மிகுந்த சாலையில் செல்லும்போது நாங்கள் துரத்தவோ, நிறுத்தவோ முயன்றால், அவர்கள் கற்களை கவிழ்க்கவோ, ஓடவோ முயல்வார்கள். இவை பெரிய வாகனங்கள். இந்தக் கற்கள் பொதுமக்களின் வாகனம் மீது விழுந்தால் அல்லது அவர்கள் மீது விழுந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே வெறிச்சோடிய பகுதிகளில் மட்டுமே அவர்களைப் பின்தொடர முடிகிறது," என்று போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அராவலி பகுதிகளில் பல கிரஷர்களை நாங்கள் பார்த்தோம். இவற்றில் பல மூடப்பட்டுள்ளன, சில கிரஷர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை சட்டப்பூர்வமாக அகற்றப்பட்ட கற்களை மட்டுமே நசுக்க முடியும் என்று மக்கள் தெரிவித்தனர்.


ஆனால் மூடிய கிரஷர்கள் கூட சில சமயம் இரவு நேரங்களில் வேலை செய்யத் தொடங்குகின்றன என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். போலீசார் தொடர் விசாரணை நடத்தினாலும், அவற்றைத் தவிர்ப்பது கடினம் அல்ல.
"ஏழெட்டு நிமிடங்களில் ஒரு கிரஷர் மூலம் மொத்த டம்ப்பர் கல்லையும் நசுக்கிவிட முடியும். எவ்வளவு உஷாராக இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியாது," என்று அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சயீத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார்.
போலீசார் வருவது குறித்து தகவல் கொடுக்கும் உளவாளிகளும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பல கிராம மக்களின் வாழ்வாதாரம் சுரங்கத்தை நம்பியே இருப்பதாகவும் கிராம மக்கள் பலர் கூறுகின்றனர்.
"இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு மனிதன் செய்யும் தவறின் விளைவுகளை கிராமத்தில் உள்ள பலரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெளியில் இருந்து பார்க்கும்போது இது எத்தனை பெரிய தொழிலாகத் தெரிகிறதோ, அக்கம்பக்க மக்களுக்கு அது அப்படி அல்ல. ஒரு டம்ப்பர் மூலம் சுமார் 1500 ரூபாய் லாபம் கிடைக்கும். இதன் ஒப்பந்தத்தைப் பெற்று சந்தையில் மண் விற்பவர்கள்தான் உண்மையில் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள்," என்று சயீத் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், SHAHNAWAZ/BBC
ஆறு டயர்கள் கொண்ட ஒரு டம்ப்பர் சுமார் 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக சிலர் எங்களிடம் தெரிவித்தனர். பல சிறு வியாபாரிகள் தவிர, சில பெரிய மனிதர்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஹரியாணா எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, சுரங்க மாஃபியாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "மாஃபியா எந்த பயமும் இல்லாமல் இந்த மட்டத்தில் செயல்படுகிறது. அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது," என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் பச்காவ் சென்றடைந்தபோது, போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தியிருந்தனர். போலீசாருக்கு பயந்து பலர் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
ஹரியாணா காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிரிஷன் குமார் பிபிசியிடம், "சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபடுபவர்களை விடமாட்டோம். ஆனால் குற்றம் செய்யாதவர்கள் பயப்படத் தேவையில்லை" என்றார்.

பட மூலாதாரம், SHAHNAWAZ/BBC
போலீஸ் ஸ்டேஷன்கள் டம்ப்பர்களால் நிரம்பி வழிகின்றன
இந்த ஆண்டு நூஹ் பகுதியில் 23 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 4,28,400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
நாங்கள் தாவ்டுவின் முக்கிய காவல் நிலையத்தை அடைந்தபோது, பல டம்ப்பர்கள் அங்கே நிற்பதைக் காண முடிந்தது. அவற்றில் சில கடந்த சில மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்டவை. சில, நீண்ட காலமாக அங்கேயே நின்று கொண்டிருக்கின்றன.

பட மூலாதாரம், SHAHNAWAZ/BBC
2021-22 ஆம் ஆண்டில், நூஹ் பகுதியில் 239 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த சில காலமாகவே சட்டவிரோத சுரங்க சம்பவங்கள் நடந்து வருகின்றன. பலவற்றுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை என்று உள்ளூர் செய்தியாளர் ஒருவர் எங்களிடம் கூறினார்.
உள்ளூர் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகும் செய்திகள்
சுரங்கம் தொடர்பான செய்திகள் நாளிதழ்களின் உள்ளூர் பக்கங்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சில செய்திகளில் காவல்துறையினர் பற்றி கேள்விகளும் எழுப்பப்பட்டன.
2022 மே 13 ஆம் தேதி Dainik Jagran செய்தித்தாளில் ஒரு படம் வெளிவந்தது. சட்டவிரோத கற்களை ஏற்றிய டிரக் எந்தத் தடையும் இல்லாமல் காலையில் சோஹ்னா சாலை வழியாகச் செல்வதைக் கண்டதாகக் கூறியது. அதே அறிக்கையில், நூஹ் காவல்துறை கண்காணிப்பாளர் வருண் சிங்லாவின் அறிக்கையும் அச்சிடப்பட்டுள்ளது, அதில் அவர், "சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டிருந்த எஸ்பிஓக்கள் மற்றும் காவல்துறையினருக்கு காரணம் கேட்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.


இது தவிர, 2022 மார்ச் 20 அன்று அந்த இடத்தின் படத்துடன் வெளியிடப்பட்ட செய்தியில், சட்டவிரோத சுரங்கத்தின் போது மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் அதில் ஒரு டம்ப்பர் மற்றும் மண் தோண்டும் இயந்திரம் புதையுண்டு போனதாகவும் கூறப்பட்டது.
மூன்று நாட்களுக்குப் பிறகு, மார்ச் 23 அன்று, மற்றொரு செய்தி வெளியானது. போலீசார் ஒரு டம்ப்பரை துரத்தும்போது, அதன் ஓட்டுநர் சாலையில் கற்களை சரித்துவிட்டு தப்பித்துச் சென்றார் என்று அது தெரிவிக்கிறது.
உள்ளூர் செய்தித்தாள்களின் இந்த செய்திகளில், காவல்துறை மற்றும் சோதனைச் சாவடிகளில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டன. எல்லா செய்திகளிலும் காவல்துறையின் உயர் அதிகாரிகளின் அறிக்கைகளும் உள்ளன. அதில் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் இதில் தொடர்ந்து பணியாற்றுவது பற்றிப் பேசுகிறார்கள்.
காவல்துறை தவறு செய்ததா?
காவல்துறையினருக்கும் சுரங்கத் தொழிலாளர்களும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. ஆபத்து இருப்பது அவர்களுக்குத் தெரியும். டிஎஸ்பி சுரேந்திர சிங் பாதுகாப்பு இல்லாமல் அங்கு சென்றது சரியானதா என்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நூஹ் எஸ்பி வருண் சிங்லாவிடம் பேச முயன்றோம். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
எங்களிடம் பேசிய ஹரியாணா காவல்துறை செய்தித் தொடர்பாளர், சோதனையின் போது எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டன என்று கூறினார்.

பட மூலாதாரம், ANI
"அது ஒரு வழக்கமான சோதனை. பகலில் சோதனைச் சாவடியில் சோதனை நடக்கும். அப்படித்தான் அன்றும் நடந்தது. அங்கு சட்டவிரோத சுரங்கங்கள் நடப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. எந்த அளவுக்கு நடக்கிறது என்ற தகவல் இருக்கவில்லை. ஆகவே அவர் அங்கு சென்றார். போலீஸ் வண்டியைப் பார்த்ததும், டிம்ப்பர் டிரைவர் வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். சாலை உயரத்தில் இருந்தது. சிறிது தூரம் சென்றதும் அவர் வண்டியை நிறுத்தினார். போலீஸைப் பார்த்து அவர் வண்டியை நிறுத்திவிட்டதாக டிஎஸ்பி நினைத்தார். எனவே அவர் தனது ஜீப்பில் இருந்து வெளியே வந்தார். ஆனால் ஜாக்கை எடுத்து கற்களை வீசவே வண்டி ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். அவர் கற்களை தள்ளினார். இதன் காரணமாக டிஎஸ்பி நசுக்கப்பட்டார்," என்று அவர் மேலும் கூறினார்.
அராவலி மலைத்தொடர் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி உட்பட பல மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாக இது உள்ளது.
2002 ஆம் ஆண்டில், அராவலி மலைகளில் சுரங்கம் தோண்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் சட்டவிரோத சுரங்க விவகாரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
சட்டவிரோத மணல் கொள்ளைகளைத் தடுக்க ஒரு கூட்டுக் குழுவை அமைக்குமாறு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) , ஹரியாணா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் நூஹ், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் நிர்வாகங்களுக்கும் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












