முகமது ஜுபைருக்கு ஜாமீன் மறுப்பு - அரசு வழக்கறிஞர் அடுக்கும் புதிய குற்றச்சாட்டுகள்

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆல்ட் நியூஸ் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜுபைரின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க டெல்லி பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்னிக்தா சர்வாரியா உத்தரவிட்டுள்ளார். அவரை பிணையில் விடுவிக்கக் கோரி ஜுபைர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி மறுத்து விட்டார்.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இன்றைய விசாரணையின்போது, இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில உண்மைகள் தெரிய வந்துள்ளதாகவும் ஜுபைர் மீது மேலும் சில சட்டப்பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் ஸ்ரீவாஸ்தவ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜுபைர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120-பி (குற்றச் சதியில் ஈடுபடுதல்), 201 (தடயங்களை அழித்தல்) வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டப்பிரிவு 35இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜுபைரின் மடிக்கணினி மற்றும் அலைபேசியை பறிமுதல் செய்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் ஸ்ரீவாஸ்தவ் நீதிபதியிடம் கூறினார்.

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், ANI

இதற்கு ஜுபைர் அகமது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

"2018இல் பகிரப்பட்ட ட்வீட்டுகள் அவை. அந்த காலகட்டத்தில் அவர் பயன்படுத்திய அலைபேசி வேறு என்று அவர் கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாம் பதிவிட்ட இடுகையை ஜுபைர் மறுக்கவில்லை. ஆனால், அவர் பதிவிட்ட ட்வீட்டை சரிபார்க்க வேண்டுமானால், அதற்கு ட்விட்டர் நிறுவனத்தைத்தான் காவல்துறை அணுக வேண்டும்," என்றும் விருந்தா குரோவர் வாதிட்டார்.

இருதரப்பும் கூறியது என்ன?

"டெல்லி காவல்துறை ஜுபைரின் மடிக்கணினி மற்றும் அலைபேசிகளைப் பறிமுதல் செய்துள்ளது. ஆனால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் ஜுபைர் மீதான குற்றத்தை நிரூபிக்க காவல்துறை தவறி விட்டது. இந்த வழக்கை தேவையில்லாமல் காவல்துறையினர் தாமதப்படுத்துகிறார்கள்," என்று தமது வாதத்தை விருந்தா காரத் முன்வைத்தார்.

இதைத்தொடர்ந்து டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீவாஸ்தவ், "இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஜுபைர் வெளிநாட்டு நிதி பெற்றுள்ளார். ஆகவே அவர் மீது வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்பிரிவு 35-யின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையின் அழைப்பின் பேரில் ஜுபைர் விசாரணைக்கு வந்த போது, அதற்கு முந்தைய நாள் வரை அவர் வேறு சிம் கார்டு மற்றும் அலைபேசியைப் பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது என்று அவர் கூறினார்.

டெல்லி போலீசாரிடம் ஜுபைர் அமகே ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையின் அழைப்பாணை (சம்மன்), கிடைத்த உடனேயே தமது சிம் கார்டை வேறு அலைபேசியில் அவர் பொருத்தியுள்ளார். "இதில் இருந்தே ஜுபைர் எவ்வளவு புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்கிறார் பாருங்கள்," என்று அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறினார்.

அப்போது, விருந்தா குரோவர் ஒருவரின் சிம் அல்லது போனை மாற்றுவது குற்றமா? புத்திசாலித்தனமாக இருப்பது குற்றமா? இவை அனைத்தும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த சட்டபிரிவிலோ குற்றமாகாது. உங்களுக்கு ஒரு நபரை பிடிக்காமல் இருக்கலாம். அது பரவாயில்லை. ஆனால் நீங்கள் அவர் மீது எந்த வகையிலும் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது," என்று கூறினார்.

மேலும் அவர், டெல்லி காவல்துறை அவரை தப்பிக்க முடியாத வகையில் சிக்க வைக்க விரும்புகிறது என்று விருந்தா குரோவர் குற்றம்சாட்டினார்.

"இந்த நாட்டில் பொய் வழக்கு போட்டு யாரையும் சிக்க வைக்க முடியாது. பாரபட்சமற்ற தன்மையை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். ஜுபைர் ஏற்கெனவே ஐந்து நாட்களாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அனைத்து நோட்டீஸ்களுக்கும் அவர் பதில் அளித்துள்ளார். அவரை (ஜுபைரை) நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அவர்களே (காவல்துறையினர்) கோருகின்றனர்." என்று விருந்தா காரத் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து டெல்லி காவல்துறையின் வழக்கறிஞர் ஸ்ரீவாஸ்தவ், ஜுபைருக்கு பாகிஸ்தான் மற்றும் சிரியாவில் இருந்து 'ரேசர் கேட்வே' என்ற இணைய வழி பணப்பரிவர்த்தனை மூலம் நிதி பெற்றதாகக் கூறப்படுவது கண்டறியப்பட்டது என்று கூறினார்.

எனவே அதில் அவர் குற்றம் இழைத்தாரா என்பது பற்றிய விசாரணையை நடத்த வேண்டியுள்ளது என்று கூறினார்.

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து ஜுபைரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் விருந்தா குரோவர் கூறினார்.

"முகமது ஜுபைர் ஒரு இளம் பத்திரிகையாளர் மற்றும் உண்மை தகவல்களை சரிபார்ப்பவர். நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய நபர் அவர். அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும், " என்று விருந்தா கேட்டுக் கொண்டார்.

தமது கட்சிக்காரர் இதுநாள்வரை எவ்வித ஆதாரங்களையும் அழிக்கவில்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 201ஆவது பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது தவறு என்றும் விருந்தா குரோவர் வாதிட்டார்.

அப்போது அரசு வழக்கறிஞர், விருந்தா குரோவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். இந்த வழக்கில் போலீஸாரின் விசாரணைக்கு ஜுபைர் ஒத்துழைக்கவில்லை. அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41வது பிரிவின் கீழ், ஒரு நபர் ஒரு வழக்கில் அவரது பங்கு குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனில், அவரை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீவாஸ்தவ் கூறினார்.

மேலும், "ஜுபைர் ஓர் இளம் பத்திரிகையாளர் என்பதற்காக அவரை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்று கூறத்தொடங்கினால், அந்த இளம் பத்திரிகையாளரின் பிரசாரம் மற்றும் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியவை ஆக உள்ளன. அவருக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வருகிறது. இவை எல்லாம் அவசியம் விசாரிக்கப்பட வேண்டிய பிரச்னை. எனவேதான் அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடக் கூடாது," என்றார் ஸ்ரீவாஸ்தவ்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: