பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

பிளாஸ்டிக்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஜூலை 1 முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்பூன், ஸ்ட்ரா, கொடி உள்ளிட்ட சில பொருட்களை முழுமையாக மத்திய அரசு தடை செய்துள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பை நோக்கி, இந்தியாவின் நகர்வாக இதைக் கருதி மக்கள் அன்றாட வாழ்வில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கான பயணத்தில் இந்தச் செய்தியை வாசிக்கும் உங்களின் பங்கு என்னவாக இருக்கும்? உங்களுக்கு சில பயனுள்ள குறிப்புக்களை வழங்க நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தமிழ்நாடு பிளாஸ்டிக் உறுபதியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்.

பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக துணி அல்லது காகித கொடிகளைப் பயன்படுத்தலாம்.⛳️

துணி பேனர்களில் அழகான ஓவியங்கள் வரையலாம். பிளாஸ்டிக் பேனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ✋

பிளாஸ்டிக் குச்சிகளுக்குப் பதிலாக மரகுச்சிகளில் பலூன் கட்டலாம்.

போர்க், ஸ்பூன் ஆகியவற்றில் பிளாஸ்டிக் கரண்டிகளுக்கு பதிலாக உங்கள் விரல்களை பயன்படுத்தலாம் 😊. அல்லது உணவகத்தில் ஸ்டெயின்லெஸ் கரண்டி கேட்கலாம்.

பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக காகித ஸ்ட்ரா, மூங்கில் ஸ்ட்ரா கிடைக்கிறது. 🥤 அடுத்தபடியாக, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ரா தயாரிப்பு அதிகரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. நீங்கள் சிறுவயதில் 🥤 ஸ்ட்ரா டம்ளர் பயன்படுத்திய ஞாபகம் உங்களுக்கு வரலாம்.

காது தூய்மை செய்யும் குச்சிக்கு மாற்று என்ன? மரக்குச்சிகளில் அந்தக் குச்சிகள் கிடைக்கின்றன.

கைக்குட்டை அளவில் இருந்தாலும் வசதிக்கு ஏற்ப மடக்கி, விரிக்கும் துணிப்பைகள் கிடைக்கின்றன. கடைகளுக்குச் செல்லும் போது, உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கலாம்.

பிளாஸ்டிக்

பட மூலாதாரம், Getty Images

அழைப்பிதழ்களில் பளபளவென மின்னும் பிளாஸ்டிக் சீட்டுக்குப் பதிலாக, பனை ஓலை, காகிதம் போன்றவற்றில் அழகாகத் தயாரிக்கலாம்.

நுகர்வோர் உரிமை ஆர்வலர் சரோஜாவிடம் பேசியபோது, நுகர்வோர் ஒரு தரமான பொருளை வாங்குவதில் கவனமாக இருப்பதைப் போலவே, தடை செய்யப்பட்ட பொருளை வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்கிறார்.

''மத்திய அரசு தடை விதித்துள்ளது, சரி. நாமும் அதில் உறுதியாக இருக்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். கடைகளில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் கிடைக்கவில்லை என்ற நிலையில், ஒரு நுகர்வோர் கட்டாயமாகக் கேட்டு வாங்கமுடியாது. அதேநேரம், நம்மிடம் உள்ள பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிகின்ற யூஸ் அண்ட் த்ரோ மனநிலை மாறவேண்டும்,''என்கிறார் சரோஜா.

''ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் தான் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருந்தோம். அந்த வாழ்க்கை சாத்தியம்தான். எடுத்துக்காட்டாக, பலர் தங்களது சிறுவயதில், உணவகத்திற்குப் போகும்போது, சாம்பார், இட்லி, சட்டினி 🍵 வாங்க தனித் தனியாக பாத்திரங்கள் கொண்டு சென்றதை நினைவு கூறலாம். அதேபோல எண்ணெய், காய்கறி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எடுத்துச் செல்லும் மதிய உணவுக் கூடை எனப் பல பொருட்களை நாம் பயன்படுத்தினோம். அதையெல்லாம் இப்போதும் கடைபிடிக்க முடியும்,'' என்கிறார்.

Presentational grey line
Presentational grey line

பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை நாம் கற்பனை கூட செய்ய முடியாது என்பது தமிழக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சுவாமிநாதனின் வாதம். ''தமிழகத்தில் சுமார் 8,000 பிளாஸ்டிக் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இதில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகள் சுமார் 10 தான் இருக்கும். இதில் கடந்த ஓராண்டில் பலரும் தயாரிப்பைக் குறைத்து, ஜூலை 1ஆம் தேதி கொண்டு வந்த தடைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால் எல்லா பிளாஸ்டிக் பொருட்களையும் ஒழித்துவிட முடியாது. அதாவது மாறவேண்டியது, நுகர்வோரின் மனநிலைதான்,'' என்கிறார்.

பிளாஸ்டிக்

பட மூலாதாரம், Getty Images

''நாம் பயன்படுத்தும் பொருட்கள் குப்பையாகத் தேங்குவதை தான் நாம் தடுக்கவேண்டும். அதாவது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகக் கொண்டு வரும் பொருட்களைப் பயன்படுத்தி குப்பையாகக் குவிக்கக் கூடாது என்ற மனநிலை நமக்கு வேண்டும். மருத்துவ பயன்பாட்டிற்கு இருக்கும் பிளாஸ்டிக், சரியான மைக்ரான் அளவில், மீண்டும் பயன்படுத்தும் நிலையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருக்கும்,'' என்கிறார் சுவாமிநாதன்.

ஜூலை 1ஆம் தேதி தடை வருவதற்கு முன்பே மஞ்சப்பை இயக்கத்தைத் தொடங்கிவிட்டதால், மேலும் விறுவிறுப்பான பணியில் இருப்பதாகக் கூறுகிறார் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு. ''பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் பயன்படுத்தபடும் இடங்களில் துணிப்பை பயன்பாடு அதிகரிக்க வேண்டும். தற்போது கோயம்பேடு மலர் மற்றும் பழங்கள் மார்க்கெட்டில் மஞ்சள் பை இயந்திரம் ஒன்றை வைத்துள்ளோம். இதுவொரு சோதனை ஓட்டம் தான். இதுபோன்ற தானியங்கி துணிப்பை இயந்திரங்களை பல இடங்களில் வணிகர்கள் வைக்கலாம். அரசு வழங்கும் நிவாரண பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் தருவதைப் பெரும்பாலும் துணிப்பைகளில் தருகிறோம். இதுவொரு தொடக்கம். மஞ்சள் பை என்பது ஓர் அடையாளம். நாம் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பில்லாத பொருட்களைப் பயன்படுத்தவில்லை என்பதைக் காட்டும் அடையாளம்,'' என்கிறார் அவர்.

பிளாஸ்டிக்

பட மூலாதாரம், Getty Images

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியல்

மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியலில் கீழ்க்காணும் பொருட்களை குறிப்பிட்டுள்ளது.

  • பிளாஸ்டிக் தட்டுகள், கண்ணாடிகள், கரண்டிகள், கோப்பைகள், ஸ்ட்ராக்கள், முட்கரண்டிகள்
  • இனிப்புப் பெட்டிகள், உணவுப் பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள்
  • பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட காது குடையும் குச்சிகள்
  • பலூன்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள்
  • பிளாஸ்டிக் கொடிகள்
  • சாக்லேட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள், லாலிபாப் குச்சிகள்
  • ஐஸ்க்ரீம் குச்சிகள்
  • தெர்மாகோல்
  • 100 மைக்ரான் தடிமனுக்குக் குறைவாக இருக்கும் பிவிசி பேனர்கள்
  • பிளாஸ்டிக் அழைப்பு அட்டைகள்
Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: