பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியாவில் தடை: எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரவிக்குமார் பனங்கிப்பள்ளி
- பதவி, பிபிசி தெலுங்கு சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாவிட்டால், பல நூறு ஆண்டுகளாக பூமியில் எப்படிப் படிந்திருக்கிறது என்பதை நாம் சில ஆண்டுகளாகக் கேள்விப்பட்டு வருகிறோம். இந்தப் பிரச்னை பல ஆண்டுகலாக ஊடகங்களால் மிக விரிவாகப் பேசப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் பட்டியலில் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள், முதலிடத்தில் உள்ளன. இன்று வரை 77 நாடுகளில் பிளாஸ்டிக் முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்தியாவும் ஜூலை 1, 2022 முதல் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.
டிசம்பர் 7, 2021 அன்று குளோபல் பிளாஸ்டிக் வாட்ச் இணையதளம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் பெரியளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம், வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2019-20ஆம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் மொத்த அளவு, 34,69,780 டன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த அளவு 50 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), பூமியில் உருவாகும் மொத்த கழிவுகளின் கூட்டு எடை இந்தப் பூமியிலுள்ள அனைத்து மனிதர்களின் மொத்த எடைக்குச் சமம் என்று மதிப்பிடுகிறது.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் என்றால் என்ன?
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய வரையறையின்படி, அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற, 50 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுடைய பிளாஸ்டிக்கை ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் என்று அழைக்கலாம்.
இருப்பினும், வரையறை இடத்திற்கு இடம் மாறுகிறது. சான்றாக, இந்தியாவை எடுத்துக்கொண்டால், 2021-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளின்படி, ஒருமுறை பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தப்படும் எந்த பிளாஸ்டிக்கும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் எனக் கூறப்படுகிறது. சில நேரங்களில் அவை மறுசுழற்சி செய்யப்படலாம், சில நேரங்களில் அவை வெறுமனே நிராகரிக்கப்படலாம்.
அதாவது, பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் சோடா பாட்டில்கள், தட்டு, கப், உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட காது குடையும் குச்சிகள், சிகரெட் வடிகட்டிகள் போன்றவை நாம் அன்றாடம் உபயோகித்துத் தூக்கி எறியக்கூடியவை.

பட மூலாதாரம், Getty Images
பிளாஸ்டிக் உற்பத்தி
பிளாஸ்டிக் உற்பத்தி 1950-ஆம் ஆண்டில் இருந்து அதிவேகமாக அதிகரித்தது. இன்று பிளாஸ்டிக் மற்ற அனைத்து பொருட்களையும் விட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. புதைபடிம ஹைட்ரோ கார்பன்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. இவை புதுப்பிக்க முடியாத ஆற்றல் ஆதாரங்கள். இதே அளவில் உற்பத்தி தொடர்ந்து கொண்டிருந்தால், 2050-ஆம் ஆண்டில் உலக எண்ணெய் நுகர்வில் 20% பிளாஸ்டிக் உற்பத்திக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
25 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பாலித்தீன் பைகளுக்கு ஏற்கெனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இருப்பினும், கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது திருப்திகரமாக இல்லையென்று மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 2016-ஆம் ஆண்டு கர்நாடகா மற்றும் பஞ்சாபில் தடை செய்யப்பட்டிருந்தாலும், இந்த மாநிலங்களில் பிளாஸ்டிக் இன்னும் பரவலாகக் கிடைக்கின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம், ராஜஸ்தான், உத்தரகாண்டில் முடிவுகள் சிறிது சிறிதாக தெரிவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். டெல்லி, தமிழ்நாடு, நாகாலாந்து, ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகியவற்றிலும் தடை அமலில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் தடைகள்
மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், செப்டம்பர் 2021-ஆம் ஆண்டில் 75 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுடைய பாலித்தீன் பைகளுக்குத் தடை விதித்தது.
120 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கு டிசம்பரில் தடை விதித்தது. பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பியதாகவும் படிப்படியாக தடையை அமல்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2016-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, பொருட்களை வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் குட்கா, புகையிலை, பான் மசாலா பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் தடையை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்கும். அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியங்கள் நேரடியாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் இனி மூலப் பொருட்களை வழங்காது.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் விற்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளூர் அதிகாரிகளுக்கு உள்ளது. யாரேனும் அவற்றை விற்பனை செய்து பிடிபட்டால், அவர்களுடைய வணிக உரிமம் ரத்து செய்யப்படும்.
மட்கக்கூடிய பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் 200 உற்பத்தியாளர்களுக்கு, ஒருமுறை சான்றிதழ்கள் (One time certificate) மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், DAVID SHUKMAN
மத்திய அரசு விதித்துள்ள தடையை யாராவது மீறினால், 1986-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி, அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ கூட விதிக்கப்படும்.
இந்தத் தண்டனைக்கு மேலாக, உள்ளூர் பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாளும் நகராட்சி சட்டங்களின் கீழும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியல்
மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியலில் கீழ்க்காணும் பொருட்களை குறிப்பிட்டுள்ளது.
- பிளாஸ்டிக் தட்டுகள், கண்ணாடிகள், கரண்டிகள், கோப்பைகள், ஸ்டிராக்கள், முட்கரண்டிகள்
- இனிப்புப் பெட்டிகள், உணவுப் பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள்
- பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட காது குடையும் குச்சிகள்
- பலூன்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள்
- பிளாஸ்டிக் கொடிகள்
- சாக்லேட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள், லாலிபாப் குச்சிகள்
- ஐஸ்க்ரீம் குச்சிகள்
- தெர்மாகோல்
- 100 மைக்ரான் தடிமனுக்குக் குறைவாக இருக்கும் பிவிசி பேனர்கள்
- பிளாஸ்டிக் அழைப்பு அட்டைகள்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















