தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட ஓ.பி.எஸ்; சின்னம் முடங்குமா? - முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி விளக்கம்

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அ.தி.மு.கவின் சட்டவிதிகளுக்குப் புறம்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் அ.தி.மு.கவில் என்ன நடக்கும்? ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடக்குமா?
அதிர்ச்சி கொடுத்த அவசரக் கூட்டம்
சென்னை வானகரத்தில் கடந்த 23 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் தெரிவித்தனர். அதேநேரம், கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு தனக்கு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்தாலும், புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் விதித்த தடையால் 'ஒற்றைத் தலைமை' என்ற விருப்பத்தை எடப்பாடி பழனிசாமியால் அடைய முடியவில்லை. இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் சட்டரீதியான ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவசரப் பயணமாக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேனி மாவட்டத்துக்குச் சென்றார். அன்று இரவே, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் திங்கள்கிழமையன்று காலையில் தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியானது.
'இந்தக் கூட்டம் செல்லாது' எனக் கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அறிக்கையும் வெளியானது. இதனைப் பொருட்படுத்தாமல் தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டினார். 'இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி தற்போது கூற முடியாது' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் எழுதிய கடிதம்
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவுக்குள் நடக்கும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஒன்பது பக்கங்கள் உள்ள அந்தக் கடிதத்தில், 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29 (ஏ) (9) ஆகியவற்றின்படி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த 2017 செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று அ.தி.மு.கவின் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. இந்தப் பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் இதன் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அந்தக் கடிதத்தில், 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பிலேயே இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்திய பல்வேறு தேர்தல்களைச் சந்தித்தோம். இந்தநிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ஆம் தேதியன்று நடைபெறும் என ஜூன் 2 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது. ஆனால், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தொடர்பாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. அங்கே நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AIADMKOfficial
கூட்டமே சட்டத்துக்குப் புறம்பானது
பொதுக்குழுவில் எந்த விவாதங்களும் மேற்கொள்ளாமல் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆகியோருக்கு எந்தவித ஒப்புதலும் அளிக்காமல் வரலாற்றில் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான அந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அவைத் தலைவர் மூலம் புதிய பொதுக்குழு தேதியும் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் எதுவும் முன்கூட்டியே எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளியேறினோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுக்குழு கூட்டத்தில் தன் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது, நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக பொதுக்குழுவில் வெளியாள்கள் அனுமதிக்கப்பட்டது, ஜூன் 27 ஆம் தேதியன்று தனது ஒப்புதல் இல்லாமல் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் என சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், ' அ.தி.மு.கவின் சட்டவிதிகளின்படி தலைமை நிலையச் செயலாளர் என்ற பெயரில் அழைப்பு விடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் இதுபோன்ற ஓர் கூட்ட அறிவிப்பை வெளியிட முடியும். எனவே, இந்தக் கூட்டம் சட்டத்துக்குப் புறம்பானது.
தவிர, தலைமைக் கழகத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதும் அ.தி.மு.கவின் சட்டவிதிகளுக்குப் புறம்பானது. தற்போது வரையில் அ.தி.மு.கவில் நடந்த சட்ட மீறல்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்' என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர ஆலோசனையில் எடப்பாடி
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், ' ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு போதுமான ஆதரவு இல்லை, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது' எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு விரிவான கடிதம் அனுப்பப்பட உள்ளதாக எடப்பாடி தரப்பினர் கூறுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் குழு மேற்கொண்டு வருகிறது. 'கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடிக்கே உள்ளது என்பதையும் தேர்தல் ஆணையத்தில் நிரூபிக்க உள்ளோம்' எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
அ.தி.மு.கவில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு சட்டரீதியாக தடையைப் பெறும் முயற்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்தாகக் கூறப்படுகிறது. இதனால், 'பொதுக்குழு நடக்குமா?' என்ற கேள்வியும் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
''பொதுக்குழுவில் விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறியதாக தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதன்பேரில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?'' என இந்திய அரசின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

பட மூலாதாரம், AIADMKOfficial
''தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. 'அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கவில்லை' என அவர் கூறலாம். அ.தி.மு.கவில் நடந்துள்ள விருப்பத்தகாத சம்பவங்களைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்காமல் விதிமீறல் நடந்துள்ளதா என்பதைத்தான் தேர்தல் ஆணையம் பார்க்க முடியும். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் வசை பாடினாலும் அதைப் பற்றியெல்லாம் பேச வேண்டியதில்லை. சட்டவிதிகளை முறையாகப் பின்பற்றியுள்ளார்களா என்பதுதான் முக்கியம்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய கோபாலசாமி, ''இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தீர்மானமாக எதையும் செய்ய முடியும் எனவும் எனக்குத் தோன்றவில்லை. காரணம், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதேநேரம், அ.தி.மு.கவில் ஒருவரை தேர்வு செய்கிறார்கள் என்றால் அந்தத் தேர்தல் முறையாக நடக்கவில்லை எனவும் அவர் கட்சியை வழிநடத்த முடியாது எனவும் கூறலாம். உதாரணமாக, அ.தி.மு.கவில் செயலாளர் என்ற பதவிக்கு என விதிமுறை உள்ளது என்றால், அதன்படி அவரைத் தேர்வு செய்யாமல் இருந்தால், அந்தப் பதவி செல்லாது என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கலாம். அதனைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து, 'விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை' எனக் கூறலாம். இதன்மூலம், கட்சியின் சின்னம் உள்பட எதையும் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர் கோர முடியாது. அதை மட்டும்தான் பார்க்க முடியும். மேலும், இந்தத் தேர்தல் செல்லாது என்றால் அது நீதிமன்றத்துக்குத்தான் செல்லும். தேர்தல் ஆணையத்துக்குள் வராது'' என்கிறார்.
சின்னத்துக்கு சிக்கல் வருமா?
'' இதில் 2 விஷயங்கள் உள்ளன. 'ஒருங்கிணைப்பாளர் பதவியில் 5 ஆண்டுகளுக்கு இருக்கலாம்' என எந்தக் குழு தீர்மானம் செய்ததோ, அதே குழு, '5 ஆண்டுகள் தேவையில்லை, 3 ஆண்டுகள் போதும்' எனக் கூறினால் அதனைக் கேள்வியெழுப்ப முடியாது. அதேநேரம், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லையென்றால் சிக்கல் வரும். கட்சிக்கென உள்ள வழிகாட்டல்களின்படிதான் முடிவெடுக்க முடியும். அவ்வாறு பின்பற்றவில்லையென்றால் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கும்'' என்கிறார்.
''தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முறையிடுவதன் மூலம் இரட்டை இலைச் சின்னம் முடங்கலாம் என்றொரு கருத்தும் பேசப்படுகிறதே?'' என்றோம். '' இரட்டை இலையை கட்சிக்குக் கொடுத்துள்ளனர். அது வேறு விவகாரம். அந்தக் கட்சியே இரண்டாக பிளவுபட்டு, 'இது அந்தக் கட்சியே இல்லை, அதனால் அவர்களுக்கு சின்னம் கொடுக்கக் கூடாது' என ஒரு தரப்பினர் கூறினால் அது வேறு விவகாரம். கட்சி பிளவுபட்டுள்ளதால், 'நாங்கள்தான் கட்சி' எனச் சிலர் கூறுவதற்கு எதிராக முறையிடலாம். சின்னத்தை பயன்படுத்தும் வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது எனவும் கூறலாம். இன்னும் அந்தளவுக்கு விவகாரம் செல்லவில்லை'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















