அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இரானுக்கு கிடைத்த வெற்றியா? ஆதரவும் எதிர்ப்பும்

இரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஒரு தெருவில், ஒரு பெண் இரானியக் கொடியைக் கையில் பிடித்துள்ளார்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், அமீர் அசிமி
    • பதவி, மூத்த செய்தி ஆசிரியர் - பெர்சியன் சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானின் தலைமை, அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் தங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு பின்வாங்கலாகக் காட்டாமல், தங்களின் எதிர்ப்பு மற்றும் வெற்றியின் விளைவாகக் காட்ட முயற்சிக்கிறது. ஆனால், அதை ஒரு வாதமாக முன்வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

அந்த நாடு இப்போதுதான் ஒரு கடுமையான போரைக் கடந்து வந்துள்ளது, பொருளாதாரம் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறது, மேலும் இஸ்லாமியக் குடியரசின் சொந்த ஆதரவுத் தளத்தின் சில பகுதியினர் அமெரிக்காவுடன் எந்தவொரு சமரசத்தையும் செய்யக்கூடாது என்று பல மாதங்களாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், இந்த நெருக்கடியை ராஜதந்திரத்துக்கான ஒரு தருணமாகப் பார்க்காமல், இரானில் ஆட்சி மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்கும் இரானியர்களும் நாட்டுக்குள்ளும் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள்.

இந்தப் பிளவுபட்ட அரசியல் சூழலில்தான், இந்த ஒப்பந்தத்தை மக்களிடம் ஏற்றுக்கொள்ளச் செய்ய முயன்று வருகிறது

மூத்த இரானிய அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை ஒரு வெற்றியாகவே கட்டமைத்துள்ளனர். நாடாளுமன்ற சபாநாயகரும், இரான் தரப்பில் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், இரான் "இறுதி வெற்றியை நோக்கி ஒரு நீண்ட அடியை எடுத்து வைத்துள்ளது" என்று கூறினார்.

அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்த புரிந்துணர்வை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்று விவரித்துள்ளார். இது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், இரானின் பல பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்றும், இரான் மற்றும் மத்திய கிழக்கில் "ஒரு வித்தியாசமான உலகத்தை" உருவாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காலிபாஃப்பின் பங்கு இதில் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அவர் பெசெஷ்கியனின் மிதவாத முகாமோடு அடையாளப்படுத்தப்படுபவர் அல்ல; அவரது பகிரங்கமான ஆதரவு என்பது, இஸ்லாமியக் குடியரசுப் புரட்சிகரக் காவல் படைக்குள்ளும், அமைப்பின் மிகவும் சக்திவாய்ந்த பகுதிகளிலிருந்தும் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு இருப்பதை உணர்த்துகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களுடைய முக்கிய நோக்கங்களை அடைவதில் தோல்வி அடைந்துவிட்டன என்கிற தெஹ்ரானின் வாதத்தின் அடிப்படையிலும், இந்த ஒப்பந்தத்தை இரானியத் தலைமை ஒரு வெற்றியாக முன்வைக்கிறது.

அவர்கள் இரானை பணிய வைக்கவில்லை, இஸ்லாமியக் குடியரசை ஆட்சியில் இருந்து அகற்றவில்லை, ராணுவ நடவடிக்கை மூலம் இரானின் அணுசக்தித் திட்டத்தை முடிக்கவில்லை, மேலும் ஹெஸ்பொலா உடனான இரானின் தொடர்புகளையும் உடைக்கவில்லை.

மாறாக, இரான் இன்னும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருகிறது. அந்தச் செயல்முறையில் லெபனானும் இடம்பெற்றுள்ளதுடன், இரானுக்கு வழங்கப்படக்கூடிய பொருளாதாரத் தடைகள் தளர்வு பற்றியும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், அரசாங்கம் முன்வைக்கும் இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தை இரானுக்குள்ளேயே பலர் ஏற்கவில்லை.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவரான ஒரு தீவிரப்போக்குடைய எம்.பி., இந்த வரைவு ஒப்பந்தத்தை இரானை அமெரிக்காவின் காலனியாக மாற்றும் ஒரு ஆவணம் என்று விவரித்ததாகக் கூறப்படுகிறது.

ஹோர்மூஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துவிடக் கூடாது என்ற அதி உயர் தலைவரின் உத்தரவை பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் அலட்சியப்படுத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விமர்சனம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இது அமைப்புக்கு வெளியிலிருந்து வரவில்லை. தேசியப் பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டிய ஒரு நிறுவனத்துக்கு உள்ளிருந்தே இது வந்திருக்கிறது.

பல மாதங்களாக, நாடாளுமன்றத்தில் உள்ள தீவிரப்போக்குடைய குரல்களும், அரசு சார்ந்த ஊடகங்களும், அரசு ஆதரவு இரவு நேரக் கூட்டங்களும் அமெரிக்காவை நம்ப முடியாது என்றே வாதிட்டு வருகின்றன.

போர் தொடங்குவதற்கு சற்று முன்பு வரை ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இஸ்ரேலும் அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வந்தபோது, டிரம்பின் அரசு இந்தப் பேச்சுவார்த்தைகளை ஒரு போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வாஷிங்டனுடன் செய்யப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் ஒரு சமரசமாகக் கருதப்படும் அபாயம் உள்ளது.

இருப்பினும், இந்த தீவிரக் குரல்களில் சில இப்போது சற்று அமைதியாக இருப்பது போலத் தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தை நோக்கி முன்னோக்கிச் செல்வதற்கான முடிவு அரசின் மிக உயர்ந்த மட்டத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை இது உணர்த்தலாம். அதற்காக அங்கே முழுமையான ஒற்றுமை இருக்கிறது என்று அர்த்தமல்ல.

ஒரு ஒப்பந்தத்தை நிராகரிப்பதால் ஏற்படும் இழப்பு, இந்த தீவிரப்போக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்வதை விட அதிகமாக இருக்கும் என்று தற்போதைக்கு அதிகார மையம் முடிவு செய்திருப்பதை இது காட்டலாம்.

தெஹ்ரானில் உள்ள ஒரு தெருவில், இரானின் தேசியக் கொடி வரையப்பட்ட சுவரைக் கடந்து இரண்டு இரானியப் பெண்கள் நடந்து செல்கிறார்கள்.

பட மூலாதாரம், EPA

அந்தக் கணக்கீட்டுக்குப் பொருளாதார அழுத்தமே மிக முக்கியக் காரணம்.

ஹோர்மூஸ் நீரிணையைச் சுற்றியுள்ள அழுத்தங்கள், அமெரிக்கா மற்றும் பிராந்திய எரிசக்தித் துறைகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட தங்களின் ராணுவ பலத்தின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் கிடைத்தது என்று இரானியத் தலைமை கூறலாம். ஆனால், பொருளாதார அழுத்தமும் தெஹ்ரானை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது

போர், பொருளாதாரத் தடைகள், கப்பல் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள், எண்ணெய் சந்தைகளுக்கும் வெளிநாட்டு நாணய வருவாய்க்கும் குறைந்த அணுகல், மேலும் மிக உயர்ந்த பணவீக்கம் ஆகியவை அனைத்தும் நாட்டையும் சாதாரண இரானியர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளன.

பல குடும்பங்களைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஒரு வெற்றி போல ஒலிக்கிறதா என்பது கேள்வியல்ல; மாறாக, இது விலைகளைக் குறைக்குமா மற்றும் மற்றொரு போர்ச் சூழல் பற்றிய பயத்தைப் போக்குமா என்பதுதான் விஷயம்.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இரானுக்கு வரி செலுத்துவோரின் பணம் எதுவும் கிடைக்காது, ஆனால் அது தன் கடமைகளை நிறைவேற்றி, தடைகள் தளர்த்தப்பட்டால், பில்லியன் கணக்கான டாலர்களைப் பெற முடியும் என்று கூறியுள்ளார். இது தெஹ்ரான் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் ஒரு விஷயமாகக் காட்டாமல், முதலீடு மற்றும் மறுசீரமைப்புக்கான பாதையாகக் காட்ட உதவுகிறது.

இருந்தாலும், இதிலுள்ள அபாயங்கள் மிகத் தெளிவானவை. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை, மேலும் சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் எதிர்காலம், அனுமதிக்கப்படும் செறிவூட்டலின் அளவு, சரிபார்ப்பு, தடைகள் நீக்கம், ஹோர்மூஸ் மற்றும் லெபனான் போன்ற மிகக் கடினமான விஷயங்கள் இன்னும் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட வேண்டியுள்ளன.

இஸ்ரேல் தரப்பிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கும் என்ற செய்திகளை நிராகரித்துள்ளார், மேலும் இஸ்ரேலியப் படைகள் தேவைப்படும் வரை லெபனானில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகு

இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப், லெபனானில் இஸ்ரேல் நடந்து கொள்ளும் முறையைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார், அங்கே அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இரான்-அமெரிக்கா ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு சற்று முன்பு பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து தனக்கு அதிருப்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார், அதே நேரத்தில் நெதன்யாகு உடனான தனது உறவு இன்னும் சிறப்பாகவே உள்ளது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

தெஹ்ரானைப் பொறுத்தவரை, வாஷிங்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெளியில் தெரியும் இந்த உரசல் பயனுள்ளதாக இருக்கிறது. இரானின் அழுத்தம் இஸ்ரேலின் செயல்பாட்டுச் சுதந்திரத்தைச் சிக்கலாக்கியுள்ளது என்பதற்கான ஆதாரமாக இதைக் காட்டலாம். ஆனால், இது இந்த ஒப்பந்தத்தை மிகவும் பலவீனமானதாகவும் ஆக்குகிறது.

இஸ்ரேல் லெபனானில் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டிய அழுத்தம் இரானுக்கு ஏற்படும். வாஷிங்டனால் இஸ்ரேலைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், லெபனானும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது என்கிற தெஹ்ரானின் வாதம் மிக விரைவிலேயே சோதனைக்குள்ளாகும்.

பிபிசி பாரசீக மொழி சேவையின் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த எதிர்வினைகள், அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்படும் வெற்றிக் கதை அனைவராலும் ஒரே விதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை உணர்த்துகின்றன.

நேயர் ஒருவர் கூறுகையில், மற்றொரு இஸ்ரேலியத் தாக்குதல் நடந்துவிடுமோ என்று தான் மிகவும் கவலைப்பட்டதாகத் தெரிவித்தார், ஆனால் இந்த ஒப்பந்தத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும் தனக்கு "எந்த நம்பிக்கையும் இல்லை" என்றும், இந்த ஒப்பந்தம் நீடித்தால் நாடு சரியாக நிர்வகிக்கப்படுமா என்று கவலைப்படுவதாகவும் கூறினார்.

தொடக்கத்தில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை ஆதரித்த, ஆட்சிக்கு எதிரான இரானியர், இந்த அமெரிக்கத் தாக்குதலால் என்ன சாதிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார், ஏனெனில் இது இரானில் அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கவில்லை என்றால்: "ஆளும் முறை மாறும் என்பதுதான் எங்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் துயரம், பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட கூடுதல் சேதங்களைத் தவிர, இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது?" என்றார்.

மற்றவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அதிக அனுதாபத்துடன் இருந்தனர். ஒரு பார்வையாளர், இந்தப் போரில் இரானே வெற்றியாளர் என்று கூறினார். மேலும், தடைகள் "கெஞ்சுவதன்" மூலம் அல்ல, அதிகாரத்தையும் வலிமையையும் பயன்படுத்துவதன் மூலமே நீக்கப்படுகின்றன என்பதை இந்தப் போர் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

மற்றொருவர் இந்த ஒப்பந்தத்தை மிகவும் எச்சரிக்கையுடன் வரவேற்றார், இது மக்கள் அதிக மன அமைதியுடன் வேலைக்கும் வாழ்க்கைக்கும் திரும்ப வழிவகுத்துள்ளது என்றார். "இது தற்காலிகமானது என்றுதான் நான் நினைக்கிறேன், ஆனால் நமக்கு சில மாதங்கள் மூச்சு விடவும் அமைதியாக இருக்கவும் அவகாசம் தேவைப்பட்டது," என்று அவர் கூறினார்.

அதுவே மிகவும் யதார்த்தமான விளக்கமாக இருக்கலாம். இந்த ஒப்பந்தத்தை இஸ்லாமியக் குடியரசு ஒரு வெற்றியாகச் சித்தரித்து வருகிறது. ஏனெனில், அதை ஒரு தவிர்க்க முடியாத அவசியமாக மக்களிடம் ஏற்றுக்கொள்ளச் செய்வது அதற்கு எளிதான விஷயமல்ல.

ஆனால், பல இரானியர்களைப் பொறுத்தவரை, இதன் வெற்றி வெறும் முழக்கங்களால் அளவிடப்படாது. போர் நிறுத்தப்படுகிறதா, விலைகள் குறைகிறதா, தடைகள் நீக்கப்படுகிறதா, மேலும் அடுத்தகட்டத்தை மற்றொரு திடீர் பதற்ற உயர்வு இல்லாமல் தலைமையால் நிர்வகிக்க முடிகிறதா என்பதைக் கொண்டே இதன் வெற்றி அளவிடப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு