புல்டோசரில் நடந்த திருமண ஊர்வலம் - ஓட்டுநருக்கு அபராதம் விதித்த காவல்துறை

புல்டோசர் திருமணம்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இன்றைய (ஜூன் 25) இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

மத்தியபிரதேச மாநிலம் ஜல்லார் கிராமத்தைச் சேர்ந்த கட்டட பொறியாளர் அங்குஷ் ஜெய்ஸ்வால், தனது திருமணத்தில் புல்டோசரில் ஊர்வலம் வர, அவருக்கு அம்மாநில காவல்துறை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அங்குஷ் ஜெய்ஸ்வால், தனது பணி சார்ந்த புல்டோசரில் திருமண ஊர்வலம் செல்ல தீர்மானித்தார்.

அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற அவருடைய திருமணத்தில் புல்டோசர் ஒன்றில் கம்பீரமாக ஊர்வலம் வந்தார்.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவின. அதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட புல்டோசர் ஓட்டுநரை கைது செய்த காவல்துறை, மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.

நோயாளிக்கு உதவ படகோட்டியாக மாறிய அஸ்ஸாம் அமைச்சர்

நோயாளியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அஸ்ஸாம் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பரிமால் சுக்லபைத்யா படகோட்டியாக மாறியதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாம் கனமழை

பட மூலாதாரம், Getty Images

அவர் படகோட்டும் காணொளி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அச்செய்தியின்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரம்மபுத்ரா, பராக் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தால் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் கச்சார் மாவட்டத்திலுள்ள சில்சார் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட அமைச்சர் பரிமால் சுக்லபைத்யா நேற்று முன்தினம் சென்றார்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நோயாளி ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்தார். அவர் டயாலிசிஸ் செய்ய மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது.

இதையடுத்து அவரை படகில் அமர வைத்து படகோட்டியாக மாறினார் அமைச்சர் பரிபால் சுக்லபைத்யா. ஆம்புலன்ஸ் வாகனம் வரை துடுப்புப் போட்டு படகில் அவரை அழைத்து வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர். நோயாளியை வைத்து அவர் படகோட்டிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை நெருக்கடி: கால்நடை தீவன உற்பத்திக்கு தடை என அறிக்கை வெளியீடு

இலங்கையில், கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து விசேட வர்த்தமானி அறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக 'தமிழ்வின்' என்ற இலங்கை செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. இது இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

கால்நடை தீவனம்

பட மூலாதாரம், Getty Images

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 10(1) (ஆ) (ii) ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது, விலங்கு உணவு தயாரிப்புக்கு நேரடியாகவோ அல்லது உள்ளீடாகவோ ஏதேனும் அரிசி அல்லது நெல்லினை இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வியாபாரி அல்லது விநியோகத்தர் எவரும் இறக்குமதி செய்யவோ விற்பனை செய்யவோ, காட்சிப் படுத்தவோ அல்லது விற்பனைக்கு விடவோ, கொண்டு செல்லவோ விநியோகிக்கவோ அல்லது வாங்கவோ அல்லது கொள்வனவு செய்யவோ முடியாது என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அண்மை காலமாக பல்வேறு விடயங்களை வலியுறுத்தி பல விசேட வர்த்தமானி அறிக்கைகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: