உத்தரப்பிரதேசத்தில் புல்டோசருடன் கொடி அணி வகுப்பு நடத்தியதா காவல்துறை? - நடந்தது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இன்றைய நாளில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள், இணையதங்களில் வெளிவந்த முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

புல்டோசருடன் கொடி அணி வகுப்பு நடத்திய காவல்துறை?

உத்தர பிரதேசம் அலிகாரில் நடைபெற்ற போலீசாரின் கொடி அணிவகுப்பில் புல்டோசர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய முறையில் முஸ்லிம்கள் வீடுகள் புல்டோசர் மூலம் அரசாங்கத்தால் இடிக்கப்படுகின்றன. இந்நிலையில், அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலிகரில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய கொடி அணி வகுப்பு பற்றிய தனது செய்தியில் இந்து தமிழ் திசை இப்படி குறிப்பிட்டது:

மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் சமூக விரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் பதற்றமான இடங்களில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம். அதேபோல, அலிகாரில் திங்கட்கிழமை போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில் புல்டோசர்கள் இடம் பெற்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொடி அணிவகுப்பில் புல்டோசர் இடம்பெறவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கொடி அணிவகுப்பில் புல்டோசர்கள் இடம் பெற்றிருப்பதை போன்ற புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன என விவரிக்கிறது அச்செய்தி.

ஆன்லைன் ரம்மி குறித்து அவசரச் சட்டம்

கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நிகழும் தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் ஆன்லைன் ரம்மியை தடைச் செய்யும் சட்டம் குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் வரும் 27ஆம் தேதியன்று கூடுகிறது என செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

கடந்த 10-ந் தேதி தமிழக முதலமைச்சர் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை ஆகிய ஆபத்துகளை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த குழு இருவாரங்களுக்குள் தங்களது பரிந்துரையை அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் விரைவில் அவசர சட்டம் இயற்றப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் 24-ந் தேதிக்கு மேல் நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை அளிக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில், நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கான ஒப்புதலை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது என விவரிக்கிறது தினத்தந்தியின் செய்தி.

தமிழ்நாட்டில் பிஏ - 5 வகை ஒமிக்ரான்

தமிழ்நாட்டில் இந்த மாதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 25 சதவீதம் பேர் ஒமிக்ரான் பிஏ - 5 வகையால் பாதிக்கப்பட்டது தெரியவந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.

கடந்த மாதத்தில் அந்த விகிதம் வெறும் 4 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒமிக்ரானிலிருந்து உருமாற்றமடைந்த பிஏ - 4 மற்றும் பிஏ - 5 வகை வைரஸ் பரவலே அதற்கு காரணமாக கூறப்பட்டது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் பிஏ 2.38 மற்றும் பிஏ-5 ஒமிக்ரான் அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: