You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியரசு தலைவர் தேர்தல் ஆலோசனை: மமதாவின் அழைப்புக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு
இன்றைய (ஜூன் 12) நாளில் இந்தியா, இலங்கையில் இருந்து வெளிவரும் நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
அடுத்த மாதம், குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "இது தொடர்பாக அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 தலைவர்களுக்கு அவர் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், மம்தா மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முயற்சி எதிர்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கும் என்று இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 15-ஆவது குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தெதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 18-ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில், சிறப்புக் கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் ஜூன் 15-ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மமதா எழுதியுள்ள கடிதத்தில், 'மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு சீர்குலைந்துள்ளது. இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள் வலிமையைக் காட்ட வேண்டும்.
ஜனநாயகத்தின் பாதுகாவலராக விளங்கும் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மிகவும் முக்கியமானது. ஜனநாயகக் கொள்கைகள் சீர்குலைந்து வரும் நேரத்தில், எதிர்க்கட்சிகளின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குரையரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் வரும் 15-ஆம் தேதியன்று ஒன்றுகூடி ஆலோசனை நடத்த ஏற்கெனவே தீர்மானித்துள்ள நிலையில், அதே தேதியில் மமதா பானர்ஜி தனிப்பட்ட முறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருப்பது பல எதிர்கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மமதா பானர்ஜியின் இந்த முயற்சி பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் என்றும் எதிர்கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சீதாராம் யெச்சூரி டெல்லியில் அளித்த பேட்டியில், 'மம்தா பானர்ஜி எனக்கும் கடிதம் அனுப்பியிருப்பதை சமூக ஊடகம் மூலமாகத் தெரிந்துகொண்டேன். வழக்கமாக, இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள் பிற கட்சிகளுடன் பரஸ்பர கலந்துரையாடல்கள் மூலமாக, இடம், தேதி, நேரம் ஆகியவை தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படும். ஆனால், மம்தா பானர்ஜி ஒருதலைபட்சமாக கடிதம் அனுப்பியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம். ஆனால், எந்தவொரு ஒருதலைபட்சமான நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கத்தான் செய்யும்,' என்று கூறினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எரிபொருள்
நாடளாவிய ரீதியில், மீன் பிடி துறைமுகங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கடற்றொழில் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 22 மீன்பிடி துறைமுகங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீன்பிடி துறைமுகங்களின் செயற்பாடுகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தை பார்வையிடச் செல்ல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதுபோல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்புகளுக்கு அருகே நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்