You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி சிறுமி உட்பட 7 பெண்கள் பலி
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இறந்த 6 இளம் பெண்கள், ஒரு சிறுமி ஆகிய அனைவருமே உறவினர்கள்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இவர்கள் குளித்தார்கள்.
அப்போது இவர்கள் அனைவருமே நீரின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டு நினைவிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு கடலூர் தலைமை பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டார். நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், "இறந்த 7 பேரில் ஒருவர் 10 வயது சிறுமி, இருவருக்கு 16 வயது, மீதமுள்ளவர்கள் 18 வயதுடையவர்கள்.
அனைவருமே தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே உறவினர்கள். இந்தப் பகுதியில் இறங்கிக் குளிக்கக் கூடாது. ஆனால் இவர்கள் குளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.
பார்வையிட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரைக்கு இந்தப் பெண்கள் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களில் சிலர் ஆழத்துக்கு சென்று மாட்டிக் கொண்டனர். அவர்களை மீட்கச் சென்றவர்களும் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்.
நீரில் மூழ்கியதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலும், 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் இறந்தனர்.
அவர்கள் குளிக்கச் சென்ற இடம் எது என்றும், அங்கே மண்ணின் தன்மை என்ன என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. இது எப்படி நடந்தது என்று மாவட்ட நிர்வாகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது எதிர்பாராத சம்பவம். எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ," என்று தெரிவித்தார் பன்னீர்செல்வம்.
தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டு தாம் மிகவும் வேதனை அடைந்ததாகவும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்