You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழங்களால் ஆன ராட்சத கழுகு, கரடி - குன்னூர் பழக் கண்காட்சியில் சுவாரஸ்யம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி இன்று தொடங்கியது.
இருநாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பாக, நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு 22 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பழக் கண்காட்சியில் 2 டன் பழங்களால் ஆன ராட்சத கழுகு, பாண்டா கரடி, தேனீ ஆகியவற்றின் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, திராட்சை பழங்களால் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கழுகு, சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பலாப்பழம், முலாம்பழத்தால் செய்யப்பட்ட தாஜ்மகாலும், பலாப்பழம் மற்றும் ஜெர்ரி பழங்களால் வடிவமைக்கப்பட்ட மீனும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.
அன்பை வெளிப்படுத்தும் வகையில், பிளம்ஸ், நெல்லிக்காய், திராட்சையால் செய்யப்பட்ட பாண்டா கரடி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததுள்ளது.
பழக் கண்காட்சியில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரின் உருவமும் பழத்தால் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
பூங்கா முழுவதும் 3 லட்சத்து 6 ஆயிரம் மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.
பால்சம், லில்லியம், மேரிகோல்டு, டேலியா,பெட்டுனியா போன்ற மலர் வகைகள் பார்வையாளர்களை கவர்கின்றன.
இது தவிர 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பழங்களில் செய்யப்பட்ட மயில், சிங்கம், புலி, மீன், தாஜ்மகால், அணை போன்ற அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக காட்சி படுத்தப்பட்டுள்ளன.
பழக் கண்காட்சியையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளையும் தோட்டக்கலைத்துறையினர் செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்