You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பில் முன்னணி வகிக்க இந்தியா திட்டம்: எந்த அளவு கை கொடுக்கும்?
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பசுமை ஹைட்ரஜன் குறித்து தற்போது மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் அமர்வின் போது, இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்தியா முன்னணி இடத்திற்கு வரும் என்று தெரிவித்ததே அதற்கு காரணம்.
எரிசக்தி தேவைகளுக்காக புதைபடிவ எரிபொருட்களை பெரிதும் நம்பியிருக்கும் ஒரு நாட்டிற்கு இது ஒரு லட்சிய அறிக்கையாக கருதப்படுகிறது.
ஆனால் உலகெங்கிலும் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்கான அழுத்தம் அதிகரித்து வருவதால், இந்தியாவும் தூய எரிசக்தி தொடர்பாக ஒரு தீவிரமான கொள்கையை எடுத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இருக்க விரும்புகிறது. மோதி அரசு இந்த ஆண்டு தனது தேசிய ஹைட்ரஜன் கொள்கையை அறிவித்துள்ளது.
இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு விகிதம் மிகவும் குறைவுதான். இருப்பினும் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குக்கான காலக்கெடுவை 2050ல் இருந்து 2070 ஆக இந்தியா அதிகரித்துள்ளது. ஆனால் உலகெங்கிலும் உள்ள கார்பன் உமிழ்வுகளின் கடுமையான தரநிலைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பசுமை வரி போன்ற விதிகள், பசுமை ஹைட்ரஜனைப் குறித்து தீவிரமாக சிந்திக்க இந்தியாவைத் தூண்டியுள்ளது.
கார்பன் இல்லாத ஹைட்ரஜன் அல்லது பசுமை ஹைட்ரஜன் இந்த நேரத்தில் முழு உலகத்தின் செயல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மாற்று எரிபொளாக இருக்கும் இயற்கை எரிவாயு (CNG), நிலக்கரி, டீசல் மற்றும் கனரக எரிபொருள் எண்ணெயை விட தூய்மையானதுதான். ஆனால் தொழில்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலைக்கு 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகம் வரை பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த அதற்கு திறன் இல்லை. அதேசமயம் பருவநிலை மாற்றத்தை தடுக்க, இது மிகவும் அவசியம்.
இந்தியா இந்த ஆண்டு பிப்ரவரியில் தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை அறிவித்தது. இதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறன் பெறவேண்டும். பசுமை ஹைட்ரஜனை உருவாக்க தண்ணீர் மற்றும் மலிவான மின்சாரம் தேவை. இந்தியா இந்த இரண்டு வளங்களையும் கொண்டுள்ளது. இந்தியா மிக நீண்ட கடற்கரையையும் அதிக சூரிய ஒளியையும் கொண்டுள்ளது. சூரிய மின்சாரம் மற்றும் கடல் நீர், பசுமை ஹைட்ரஜனை உருவாக்க மிகவும் உதவியாக இருக்கும். இந்தியா ஒரு படி மேலே சென்று உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் மையமாக தன்னை உருவாக்கிக்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது.
பசுமை ஹைட்ரஜன் என்றால் என்ன?
பசுமை ஹைட்ரஜன் என்பது ஒரு வகையான தூய எரியாற்றலாகும். இது சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கவல்ல எரியாற்றலைப் பயன்படுத்தி, தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீர் வழியாக மின்சாரம் கடத்தப்படும்போது ஹைட்ரஜன் உற்பத்தியாகிறது. இந்த ஹைட்ரஜன் பல விஷயங்களுக்கு எரியாற்றலாக செயல்படும். ஹைட்ரஜனை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மின்சாரம் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்களிலிருந்து வருகிறது. அதனால் மாசு ஏற்படாது. அதனால்தான் இது பசுமை ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. எண்ணெய் சுத்தீகரிப்பு, உரம், எஃகு மற்றும் சிமென்ட் போன்ற கனரக தொழில்துறைகளை, கார்பன் இல்லாத ஒன்றாக ஆக்கிட இது உதவும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, உலகளாவிய கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.
இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனின் தேவை மற்றும் விலை
ஹைட்ரஜன் ஒரு நிறமற்ற வாயு. ஹைட்ரஜனின் நிறம், பச்சை, நீலம், சாம்பல் முதல் நீலமும் பச்சையும் கலந்த நிறம் என, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து அமையும். பசுமை ஹைட்ரஜன் மட்டுமே தூய்மையான எரியாற்றல் ஆகும். இது புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து 60 லட்சம் டன் க்ரே ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட்டது என்று TERI கூறுகிறது. 2050-க்குள் இந்தியாவில் ஹைட்ரஜனின் தேவை ஐந்து மடங்கு அதிகரிக்கும். ஆனால் பசுமை ஹைட்ரஜன், புதைபடிவ எரிபொருட்களை விட 50 சதவிகிதம் மலிவானதாக மாறும் போது மட்டுமே அதனால் போட்டியிட முடியும்.
இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட எரியாற்றலில் 40 சதவிகிதம் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகும். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. ஆனால் பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்பு வசதி இல்லாமல் புதுப்பிக்கவல்ல ஆற்றல், வழக்கமான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. அதாவது புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கான சேமிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை பெரிய அளவில் பயன்படுத்த முடியும். லித்தியம் பேட்டரிகளால் பெரிய அளவில் ஆற்றலை சேமிக்க முடியாது. இருப்பினும், இது தற்போது மின்சார வாகனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் பசுமை ஹைட்ரஜனை மிகப் பெரிய அளவில் சேமிக்க முடியும். நீண்ட தூரம் செல்லும் டிரக்குகள், பேட்டரியால் இயங்கும் கார்கள், பெரிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், ரயில்கள் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாக இருக்கும்.
இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் கொள்கை என்ன?
இந்திய அரசு தனது பசுமை ஹைட்ரஜன் கொள்கையின் கீழ் ஆராய்ச்சி மற்றும் பிற தேவைகளுக்கு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க, மலிவான புதுப்பிக்கவல்ல எரியாற்றல் மூலமான, மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத்திற்கு 25 ஆண்டுகள் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2025 ஜூன் மாதத்திற்கு முன் தொடங்கும் திட்டங்களுக்கு மட்டுமே இந்த விலக்கு கிடைக்கும். பசுமை ஹைட்ரஜன் அல்லது பசுமை அமோனியா ஆலையின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வாங்குவதற்கான விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் திறந்த அணுகல் வழங்கப்படும். அரசின் தள்ளுபடிக் கொள்கைகளுக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஹைட்ரஜன் தேவை 2029-30க்குள் 1.17 கோடி டன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதன் தேவை 67 லட்சம் டன்னாக உள்ளது. இந்த 67 லட்சம் டன்களில் சுமார் 36 லட்சம் டன்கள் அதாவது 54 சதவிகிதம் பெட்ரோலிய சுத்தீகரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை உர உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இது க்ரே ஹைட்ரஜன் ஆகும். இது இயற்கை எரிவாயு அல்லது நாஃப்தாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது நிறைய மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்கில் பெரும் தடையாக உள்ளது.
கார்பன் உமிழ்வைக் குறைக்க பசுமை ஹைட்ரஜன் எவ்வளவு உதவியாக இருக்கும்?
பசுமை ஹைட்ரஜன் கார்பன் உமிழ்வைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கக்கூடும். உதாரணமாக, எஃகு மற்றும் இரும்பு மிகவும் மாசுபடுத்தும் தொழில்களில் ஒன்றாகும். இது உலகின் மொத்த பசுமைக்குடில் வாயு உமிழ்வில் ஏழு சதவிகிதம் ஆகும். கார்கள் தயாரிப்பது முதல் பாலங்கள் கட்டுவது வரை எஃகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் மொத்த கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் இந்தத் தொழிலின் பங்களிப்பு 35 சதவிகிதமாக உயரும். எஃகுத் தொழில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தொடங்கினால், இந்த கார்பன் வெளியேற்றம் கிட்டத்தட்ட நின்றுவிடும். இந்தியாவில் மாசுக்கட்டுப்பாட்டு விஷயத்தில் இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.
இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் சவால்கள் என்ன?
இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி விலை மலிவாக இருக்கும்போது மட்டுமே அதன் பயன்பாடு அதிகரிக்கும். அதாவது, எஃகு, சிமெண்ட் மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் தங்கள் செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தால் மட்டுமே அதைப் பயன்படுத்தும். தற்போது, வழக்கமான எரிபொருளில் இருந்து தயாரிக்கப்படும் எஃகுவை விட, பசுமை ஹைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் எஃகுவின் விலை 50 முதல் 127 சதவிகிதம் அதிகம்.
தற்போது இந்தியாவில் ஹைட்ரஜன் விலை கிலோவுக்கு 340 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உள்ளது. பசுமை ஹைட்ரஜனின் பயன்பாடு தொழில்துறையில் அதிகரிக்கவேண்டும் என்றால் அதன் விலை கிலோவுக்கு 150 ரூபாயாக ஆகவேண்டும். தற்போது சுத்தீகரிப்பு, உரம் மற்றும் எஃகு தொழில்கள் ஹைட்ரஜனின் மிகப்பெரிய நுகர்வோர். இந்தத் தொழில்களுக்கு மேலதிகமாக, மின் உற்பத்தி, ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் இயக்கத் தொழில்கள் (பேட்டரி மூலம் இயங்கும் கார்கள், ரயில், டிரக் பேருந்துகள் மற்றும் கப்பல்கள்) ஆகியவற்றிலும் மலிவான ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பசுமை எரிசக்தி உற்பத்தியில் 75 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால் பசுமை ஹைட்ரஜனில் எவ்வளவு முதலீடு செய்யப் போகிறது என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று CNBC கூறுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கிரீன்கோ குழுமம் மற்றும் பெல்ஜிய நிறுவனமான ஜான் கோக்ரில், இந்தியாவில் இரண்டு ஜிகாவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் தொழிற்சாலையை அமைப்பதாக அறிவித்தன. குழுவால் சீனாவுக்கு வெளியே அமைக்கப்பட இருக்கும் மிகப்பெரிய தொழிற்சாலை இதுவாகும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இரண்டு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை ஹைட்ரஜனை தயாரிக்கப்போவதாக மார்ச் மாதம் அறிவித்தது. இந்த நிறுவனங்கள் பசுமை ஹைட்ரஜனை உருவாக்க பயன்படும் எலக்ட்ரோலைசர்களை தயாரிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளன. ரிலையன்ஸ் மற்றும் அதானி ஆகிய இரு நிறுவனங்களும் உலகின் மலிவான ஹைட்ரஜனை தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த நிறுவனங்கள் பசுமை ஹைட்ரஜனை ஒரு டாலர் விலையில் விற்பனை செய்யப்போவதாக கூறுகின்றன
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் எலக்ட்ரோலைசர் முக்கிய பங்கு வகிக்கிறது. மலிவான எலக்ட்ரோலைசர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் அல்லது அதன் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வதற்கான வரி மிகக் குறைவாக இருக்க வேண்டும். நிறுவனங்களின் முன்முயற்சிகள் மற்றும் அரசு கொள்கைகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே இந்தியாவின் பசுமை ஹைட்ரஜனுக்கான இலக்கை எட்டமுடியும். இந்தப்பணியின் வேகம் என்னவாக இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், உலகப் பொருளாதார மாநாட்டில் இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி இந்த விஷயத்தில் காண்பித்துள்ள உறுதிப்பாடு, இந்தியா இதில் தீவிரமாக இருப்பதை தெளிவுபடுத்துகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்