You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்டினப்பிரவேசம்: தடை ஆணையை விலக்கிய கோட்டாட்சியர் - முழு விவரம்
தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் சுமந்தபடி நடத்தப்படும் பட்டினப்பிரவேசம் நிகழ்வை நடத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி அளித்துள்ளதாக சைவ மட ஆதீனகர்த்தர்கள் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய நிகழ்வு என ஆதினங்களால் கொண்டாடப்படும் பட்டினப்பிரவேசத்துக்கு உள்ளூர் கோட்டாட்சியர் தடை விதித்த நடவடிக்கை, மதப்பிரச்னையாக உருவெடுத்த நிலையில், திடீரென அந்த நிகழ்வை நடத்த முதல்வர் அனுமதி கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
கடந்த இரண்டு வாரங்களாக சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சைவ மடங்களை சேர்ந்த அடியார்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் சுமந்து மடங்களை சுற்றியுள்ள வீதிகளில் அடியவர்கள் வலம் வருவதுதான் பட்டினப் பிரவேசம் நிகழ்வு.
இதில் மனிதனை மனிதன் தூக்க அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியாகின.
விரைவில், பட்டினப் பிரவேச நிகழ்வு தொடர்பாக சுமூகமான முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆதினகர்த்தர்கள் சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது அந்த நிகழ்ச்சி குறித்து முதல்வரிடம் விளக்கியதாகவும் அதன் அடிப்படையில் பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் வாய்மொழி உறுதி கூறியுள்ளதாகவும் ஆதீனகர்த்தர்கள் இன்று மைலாடுதுறையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியிருக்கிறது. பட்டினப்பிரவேசத்துக்கு தடை விதித்திருந்த கோடாட்டசியரே இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கூட்டாக நடந்த செய்தியாளர் சந்திப்பு
முன்னதாக, மயிலாடுதுறையில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தருமபுரம் ஆதீனம் தம்பிரான் ஸ்வாமிகள் ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, ''தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலாம் ஆண்டு தொடர்பாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்வை தடுக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக் கொண்டோம். பட்டினப்பிரவேசம் எப்படி தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது என்றும் விளக்கினோம். இதையடுத்து நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் எங்களுக்கு வாய்மொழியாக உறுதி அளித்தார். அதற்காக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி,''என்று ஆதினங்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
விவகாரத்தின் பின்னணி
தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிகழ்வு பாரம்பரியமாக வரக்கூடிய ஒரு நிகழ்வு. எனவே இதற்கு தடை விதிக்க கூடாது என ஆதீனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வுக்கு அரசு தடை விதித்திருப்பதை மதுரை ஆதீனகர்த்தர் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே எதிர்த்தனர். அரசின் நடவடிக்கை சமய சடங்குகளில் தலையிடுவதாகும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். சில தினங்களுக்கு முன்பு தருமபுரம் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்ள வந்தபோது, அவருக்கு எதிராக திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர் வங்கு வந்து சென்றதாலேயே தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கு சுமக்கும் நிகழ்வு இலக்காக்கப்படுவதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து அரசியலாக்கப்பட்ட இந்த விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக ஆகியவற்றின் தலைவர்களும் ஆதீனங்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பட்டினப்பிரவேசம் நிகழ்வில் பங்கேற்று தருமபுரம் ஆதீனத்தை தாமே பல்லக்கில் சுமப்பேன் என்று அறிவித்தார். இதனால் இந்த விவகாரம் அரசியல் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில்தான் மே 6ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பட்டினப் பிரவேசம் தொடர்பாக ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்று தெரிவித்தார். அவர் அறிவித்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை ஆதினங்கள் சிலர் சந்தித்துப் பேசினர். அதன் முடிவில் பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி கொடுக்கப்படும் என அரசு கூறியுள்ளதாக ஆதினங்கள் தெரிவித்திருப்பதால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்