கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனை செய்தோரை தாக்கிய பஜ்ரங்தள் அமைப்பினர் 5 பேர் கைது

ஹலால் இறைச்சி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இன்றைய (ஏப்ரல் 3) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனை செய்தவர்களை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.

ஹலால் இறைச்சிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை அம்மாநிலத்தில் தடை செய்யுமாறு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளின் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஷிவமோகா மாவட்டத்தில் இந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு யுகாதி பண்டிக்கைக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் 'ஹோசா தடாகு' என்ற பண்டிகையின் போது, இந்துக்கள் அசைவ உணவு சாப்பிடுவார்கள். இந்நிலையில், அசைவு உணவு சாப்பிடும் இந்துக்கள் ஹலால் உணவை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வலதுசாரி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். ஹலால் இறைச்சி, அல்லாவுக்கு ஏற்கனவே வழங்கப்படும். அத்தகைய உணவை சாப்பிடுவது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என்று கருத்தை அவர்கள் முன்வைக்கின்றனர்.

ஹோசமானே காவல் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், ஐந்து பேர் ஒரு கடைக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஹலால் அல்லாத இறைச்சியை கேட்டுள்ளனர். அது வழங்கப்படாத நிலையில், கடையை அவர்கள் மூடியுள்ளனர். மேலும், கடையில் இருந்த ஒரு சிறுவனையும் தாக்கியுள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் பி.எம்.லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பத்ராவதி பகுதியில் இரண்டு சம்பவங்கள், ஹோசமானே காவல் நிலையம் கட்டுப்பாட்டு பகுதியில் ஒன்றும், ஓல்ட் டவுன் பகுதியில் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

"ஒல்ட் டவுன் பகுதியில் நடந்த சம்பவத்திலும், ஹோசமானே பகுதியில் நடந்த சம்பவத்திலும் ஐந்து பேர் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வடிவேல், ஸ்ரீகாந்த் கிருஷ்ணா, சவாய் சிங் மற்றும் குண்டா. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், பிரதமர் மோதி முன்னிலையில் சனிக்கிழமையன்று கையெழுத்தானதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (இந்த்ஆஸ் எக்டா) மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் டான் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்த நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி வழியாக நடைபெற்றது.

இந்த ஒப்பந்ததில் கையெழுத்திட்ட பிறகு பேசிய நரேந்திர மோதி, "இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த்ஆஸ் எக்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையின் ஆழத்தை பிரதிபலிக்கிறது.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பரிமாற்றத்தை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும், உறவுகளை மேலும் வலுப்படுத்தும்," என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன், "இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவில் மற்றொரு மைல் கல்லாக இந்த்ஆஸ் எக்டா ஒப்பந்தம் உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே வேகமாகப் பல்வகைப்படும் ஆழமான உறவின் நிலைத்தன்மை மற்றும் வலிமைக்கு வளர்ந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் பங்களிக்கின்றன. சரக்குகள் மற்றும் சேவைகளில் வர்த்தகத்தை உள்ளடக்கிய இந்த்ஆஸ் எக்டா சமநிலையான மற்றும் சமமான வர்த்தக ஒப்பந்தமாகும்.", என்று தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் இருந்து கேரள கிராமத்திற்கு மருத்துவ உதவிகள் அனுப்பும் வெளிநாடு வாழ் இந்திய பெண்

வாஷிங்டனில் உள்ள சியாட்டிலைச் சேர்ந்த மலையாளியான இஷிகா பினு, திருவனந்தபுரத்தில் உள்ள கல்லாரா என்ற கிராமப் பஞ்சாயத்துக்கு ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதற்கு நிதி திரட்டி தந்ததாக, 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கேரளா - ஆம்புலன்ஸ் சேவை

பட மூலாதாரம், Getty Images

இதன் மூலம் அங்கு தொடங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.முரளி சமீபத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற அவரது பணிக்காக மேற்கு வாஷிங்டனின் பெண் சாரணர்கள் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

பாதுகாப்பான வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இஷிகாவின் பெண் சாரணர் திட்டமான சேஃப் டிரைவ் கிளப் மூலம் இந்த சேவை தொடங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டில், அவருக்கு 13 வயதாக இருந்தபோது, இஷிகா மிகவும் மோசமான ஒரு கார் விபத்தை சந்தித்தார். அப்போது அவரது சகோதரியும் அவருடன் இருந்தார். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை பெற்றதால்தான், தங்களின் உயிர் காப்பாற்றப்பட்டது என்று இஷிகா கூறுகிறார்.

இதனால், தனது தந்தையின் பூர்வீகமான கல்லாரா பஞ்சாயத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்க, அவர் நிதி திரட்டியுள்ளனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :