தமிழ்நாட்டில் சொத்துவரி 150% வரை உயர்வு: "மக்களுக்கு சிறப்பு பரிசு" என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சொத்து வரி 150 மடங்கு உயர்வு: தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு முழுக்கவுள்ள நகராட்சிகள் முதல் பேரூராட்சிகள் வரை, சொத்து வரியை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

1920-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய அரசினுடைய 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1,801 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

சென்னையோடு 2011-ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புகளுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

600 முதல் 1,200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 50 சதவீதம், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவீதம் என சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும் தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

சொத்து வரியை உயர்த்தியது ஏன்?

2011-ஆம் ஆண்டு சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதம், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம் என்ற அளவில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

"இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின் போது, குடியிருப்புகளின் பரப்பளவுக்கு ஏற்றவாறு தனித்தனியாகப் பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

சொத்து வரி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாகப் பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது," எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் 6,240 சதவீதம் வரை சொத்து ஆக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் மற்ற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 சதவீதம் அமைந்துள்ளது.

ஆகவே, பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பதால் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது," எனவும் கூறப்பட்டுள்ளது.

சொத்து வரி 150 மடங்கு உயர்வு: தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படைத் தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றுக்குத் தேவைப்படும் கூடுதல் செலவினம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டும் அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாணையில் சொத்து வரி உயர்வுக்குக் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, 2022-23 ஆம் ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் சொத்து வரி, 3,240 ரூபாயாகும். சீராய்வு செய்த பிறகு, 4,860 ரூபாயாக உயர்கிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்து வரி 972 ரூபாயாகும். சீராய்வு செய்த பிறகு, 1215 ரூபாயாக உயரும்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்பு

இந்த சொத்து வரி உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

"சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது.

இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன" எனக் கூறியுள்ளார்.

அதேபோன்று, பாமக இளைஞரணித் தலைவரும் அக்கட்சியின் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்துவரி 150% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது" என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

காணொளிக் குறிப்பு, சொத்து வரியை அதிகரித்த தமிழக அரசு: புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: