You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பத்தூரில் லோடு வேன் கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உட்பட 11 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் லோடு வேன் கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உட்பட 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். அதிக பாரம் காரணமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள புலியூர் கிராம பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் சுமார் 26 நபர்கள் தங்களின் கிராமத்திலிருந்து சேம்பரை பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் என்பவருடைய சொந்த லோடு வேனில் சேம்பரை கிராமத்தில் நடைபெறக்கூடிய ஆஞ்சநேயர் கோயில் திருவிழாவிற்கு வந்துள்ளனர்.
அப்போது சாலை மேடாகவும் குண்டும் குழியுமாக இருந்த காரணத்தினாலும் நிர்ணயிக்கப்பட்ட பாரதத்தை விட அதிக பாரத்தை ஏற்றி சென்ற காரணத்தினாலும் லோடு வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் புலியூர் கிராமத்தைச் சார்ந்த, அலமேலு, பரிமளா மற்றும் ஜெயப்பிரியா ஆகிய பள்ளி மாணவிகள் உட்பட சுகந்தா, துர்கா, பவித்ரா, செல்வி, மங்கை, சின்ன திக்கி, திக்கி அம்மாள், சென்னம்மாள் உள்ளிட்ட 11 நபர்கள் உயிரிழந்தனர் . மேலும் 15 நபர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த 8 பேரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோயில் திருவிழாவிற்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்திருப்பது அந்த கிராம பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாயும் படுகாயமடைந்த அனைவருக்கும் உடனடியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இயல்பாக கிராம பகுதிகளில் திருவிழாக்கள், திருமண விழாக்கள், காரியங்கள் போன்ற எந்த ஒரு விசேஷ நிகழ்வாக இருந்தாலும் சரக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து ஆபத்தை உணராமல் அதில் பயணம் செய்வது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
பொது மக்கள் அன்றாடம் சரக்கு வேன்கள் லாரிகள் ஷேர் ஆட்டோக்கள் போன்ற வாகனங்களில் பாதுகாப்பு இல்லாமல் செல்வது சில பகுதிகளில் தொடர்கிறது. அந்த வாகனங்கள் அதிக பாரத்தோடு பயணம் செய்யும் போது விபத்துக்க்குள்ளாக நேர்வதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
"எனவே பேருந்து வசதி இல்லாத பாதைகளில் போதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வழித்தடங்களில் வட்டார போக்குவரத்து துறையினர் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்