You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் உயரும் சுங்கச்சாவடி கட்டணம்: 24 இடங்களில் நடைமுறைக்கு வருகிறது
இன்றைய நாளிதழ்கள் மற்றும் இணையதள பக்கங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. இது குறித்து தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (ஏப்ரல் 1ம் தேதி ) பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்கு ரூ. 5 முதல் ரூ. 120 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
''இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 26 சுங்கச் சாவடிகளிலும் மற்றவற்றில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.
அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி முதல் 22 சுங்கச் சாவடிகளில் 10 சதவீத பயன்பாட்டுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நல்லூர் (சென்னை - தடா என்.எச் 4) சுங்கச் சாவடியில் 40 சதவீதமும் சூரப்பட்டு சுங்கச் சாவடியில் 16 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"திட்டுவதற்கு கூட அழகிய தமிழைப் பயன்படுத்துங்கள்" - தமிழிசை
இணையத்தில் திட்டுவதற்குக் கூட அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள் என தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான செய்தியில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. ஆய்வரங்கத்துக்கு பல்கலைக் கழக துணை வேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் முன்னிலை வகித்தார். ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது: "நான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி என்பதால், இந்த ஊரில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும். இணையத்தின் மூலம் திட்டுவதற்கு கூட அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள். விமர்சனம் என்பது தமிழரின் பாங்கு, ஆனால் அதை மரியாதையான சொற்களுடன் பயன்படுத்த வேண்டும்." என தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.
2024-ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை: ஏ.ஐ.சி.டி.இ. தகவல்
தினத்தந்தி நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில்,
''பொறியியல் கல்வியின் தற்போதைய போக்கு, குறைவான மாணவர் சேர்க்கை ஆகியவை குறித்து ஆராய ஐதராபாத் ஐ.ஐ.டி. தலைவர் பி.வி.ஆர்.மோகன்ரெட்டி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பொறியியல் மற்றும் பட்டய படிப்புகளில் தற்போதுள்ள மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படையில் 2024-ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் அமைப்பதற்கான தடையை தொடர பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரையை ஏற்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) 2024-ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களில் 25 சதவீதம் கூடுதல் திறனையும், 80 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களில் 15 சதவீதம் கூடுதல் திறனையும் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதித்து இருக்கிறது.
மாணவர்களுக்கு கூடுதல் விருப்பம்
மேலும், ஏ.ஐ.சி.டி.இ. தனது புதிய வழிகாட்டுதல்களில் மாணவர்களுக்கு பலவகையான நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களை வழங்கியிருக்கிறது. அதன்படி, முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இளநிலை சான்றிதழையும், 2-ம் ஆண்டில் வெளியேறும் மாணவர்கள் இளநிலை டிப்ளமோ மற்றும் 3-ம் ஆண்டில் வெளியே செல்லும் மாணவர்கள் இளநிலை தொழிற்கல்வி சான்றிதழையும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளாத அந்த செய்தியில் உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்