கே.வி பள்ளிகளில் கட்டாய சமஸ்கிருதத்தை எதிர்க்கும் திமுக - பாஜக என்ன சொல்கிறது?

சம்ஸ்கிருத பாடம்: `தி.மு.கவுக்கு என்ன கஷ்டம்?' - பா.ஜ.க 2 கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்திய கல்வித்துறையின் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கட்டாய பாடமாக வைக்கப்பட்டதற்கு திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். `மாநில அரசின் கட்டாய தமிழ்மொழிச் சட்டம் என்பது கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா ஆகிய சிறப்புப் பள்ளிகளுக்குப் பொருந்தாது. இருப்பினும், அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழியை கற்றுக் கொடுப்பதுதான் சிறந்தது'' என்கின்றனர் கல்வியாளர்கள்.

சமஸ்கிருதப் பாடம் கட்டாயமா?

தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில், `சமஸ்கிருத மொழியில் படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்பில் இருந்து ஏழாம் வகுப்புக்குச் செல்ல முடியும்' என்ற தகவல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் சொல்லப்பட்டிருந்தது. இது தொடர்பாக, அப்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், `சமஸ்கிருதத்துக்குப் பதில் தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக் கூடாது என்று வெளியான தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளி வழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்தை மாணவர்கள் மீது திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், `கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், ` விருப்பப் பாடமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது' என்றார். அப்போது பேசிய நீதிபதிகள், `பிரெஞ்ச், ஜெர்மன், வங்காளம் ஆகிய மொழிகளைக் கற்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்கக் கூடாதா?' என கேள்வி எழுப்பியதையும் மத்திய அரசு உணரவில்லை. சமஸ்கிருத திணிப்பு தவிர ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில இந்தியும் கட்டாயம் என்றும் தமிழ் கட்டாய மொழிப் பாடம் இல்லை என அவமதிக்கும் துணிச்சல் பா.ஜ.கவுக்கு எங்கிருந்து வந்தது?' என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, `கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கட்டாயப் பாடமாக இருப்பதை நீக்க வேண்டும் என்றும் அந்தந்த மாநில மொழிகளைப் பயிற்றுவிக்கவும் அதனை மதிப்பீடு செய்து பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக வைக்கவும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பேசியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

என்ன நடக்கிறது?

``கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் என்ன நடக்கிறது?'' என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

``கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் பொறுத்தவரையில் ஆங்கிலம் பிரதானப் பாடமாக உள்ளது. ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரையில் இரண்டாவது மொழியாக இந்தியை எடுத்துக் கொள்கின்றனர். ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் மூன்றாவதாக ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்,'' என்கிறார்.

மேலும், ``ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரையில் என்ன மொழியை தேர்வு செய்கிறார்களோ, அதனையே ஆறாம் வகுப்பிலும் தொடரலாம். ஆனால், மூன்றாவது மொழியாக எதைச் சொல்கிறார்களோ, அதனையே தேர்வு செய்ய வேண்டும் என்பது விதியாக உள்ளது,'' என்கிறார்.

``சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் மூன்றாவது மொழி என்ற பிரிவில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் விருப்பப்பாடமாக உள்ளன. தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரையில் இரண்டாவது மொழியாக தமிழை தேர்வு செய்யலாம். இதையே ஆறாம் வகுப்பு முதல் தொடர்ந்து தமிழ் படித்தாலும் மூன்றாவது மொழியாக இந்தியை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அங்கு மூன்று மொழிகளைப் படித்தாக வேண்டும். கட்டாய தமிழ் மொழிச் சட்டம் என்பது கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா ஆகிய சிறப்புப் பள்ளிகளுக்குப் பொருந்தாது. அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழியை கேந்திரிய வித்யாலயா கற்றுக் கொடுப்பதுதான் சிறந்ததாக இருக்க முடியும்,'' என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
படக்குறிப்பு, பிரின்ஸ் கஜேந்திரபாபு

இவர்களுக்கு என்ன கஷ்டம்?

இதையடுத்து, கனிமொழியின் கோரிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.கவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், `` தமிழ்நாட்டுக்கு என்ன வேண்டும், தமிழ் மொழி வளர என்ன செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்பதைவிட, வேறு மொழி வந்துவிடக் கூடாது என்ற எதிர்மறை எண்ணம் என்பது தி.மு.கவுக்கு வாடிக்கையான ஒன்று. அகில இந்திய அளவில் தமிழை கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என இவர்கள் எதாவது கோரிக்கை வைத்துள்ளார்களா? சமஸ்கிருதம், இந்தி ஆகியவை வரக் கூடாது எனக் கூறுவது சரியல்ல. மொழியைக் கற்றுக் கொள்வது என்பது ஒருவரின் உலக அறிவை விரிவுபடுத்தக் கூடிய ஒன்று. ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள யார் தடையாக இருந்தாலும் அதனை பா.ஜ.க எதிர்க்கும். சமஸ்கிருதப் பாடம் கட்டாயமாக இருப்பதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்?'' எனக் கேள்வி எழுப்புகிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``தமிழை அகில இந்திய அளவில் கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் சமஸ்கிருதப் பாடத்தை நீக்கு எனச் சொல்வதை ஏற்க முடியாது. சமஸ்கிருதம் என்பது பேசுகின்ற மொழியல்ல. அரசின் பழைய ஆவணங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன. பண்டைய காலத்திலும் அது பேசுகின்ற மொழியாக இல்லை. ஆவணங்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால் அதைப் படிப்பதற்கு ஒரு பாடமாகக் கொண்டு வந்தனர். மேலும், அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மொழி அல்ல. ஆவணங்களை தெரிந்து கொள்ள விரும்பியவர்கள் அனைவரும் சமஸ்கிருதம் படித்தனர். பூனூலை சித்தரித்ததுபோல சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிட்ட சாதிக்கு உரியதாக மாற்றிவிட்டனர்'' என்கிறார்.

மேலும், ``தமிழை படிப்பவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் இலவசம் என தி.மு.க அறிவிக்கட்டும். தமிழ் மொழியில் படிப்பவர்களுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கட்டும். கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.கவிடம் மத்திய அரசுக்கு எதிரான குரல்கள் மட்டுமே உள்ளன. வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை. தங்கள் மாநிலத்துக்குத் தேவையானதை பெற்றுக் கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டட்டும். அதைவிடுத்து, சமஸ்கிருதத்தை நீக்கு எனக் கூறுவதை ஏற்க முடியாது'' என்கிறார்.

எஸ்.ஆர்.சேகர்

பட மூலாதாரம், S.R.Sekar/Facebook

படக்குறிப்பு, எஸ்.ஆர்.சேகர்

மத்திய அரசின் நோக்கம் என்ன?

எஸ்.ஆர்.சேகரின் விமர்சனம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் சூர்யா வெற்றிகொண்டான், `` தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. அதனை அவசியமில்லாத, வழக்கொழிந்துபோன மொழியாகத்தான் பார்க்கிறோம். சமஸ்கிருதம் வேண்டாம் என கூறுவதை மாநிலத்தின் உரிமையாகப் பார்க்கிறோம். புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்துத்தான் சமஸ்கிருதத்தைக் கொண்டு வரும் வேலைகளை மத்திய அரசு செய்கிறது'' என்கிறார்.

மேலும், ``தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் முன்னேற்றம் அடைவதற்கு இந்த இரண்டு மொழிகள் போதும். எங்கள் மாநிலத்துக்கு சமஸ்கிருதம் தேவையா என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் அரசு வேலை என்ற விதியை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். வட இந்திய மொழிகளை திணிப்பதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை இங்கு உருவாக்குவதற்கான வேலைகளை மத்திய அரசு செய்கிறது,'' என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: