பேடிஎம் நிறுவனர் கைது: காவல்துறை அதிகாரி கார் மீது சொகுசு காரை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் குற்றச்சாட்டு - நாளிதழ் செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

இன்றைய (மார்ச் 14) நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

காவல்துறை துணை ஆணையர் கார் மீது தனது சொகுசு காரை மோதிவிட்டு, நிற்காமல் சென்ற பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டார் என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி மாளவியா நகரில் உள்ள பெட்ரோல் பங்கு நிலையத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி டெல்லி தெற்கு காவல் துணை ஆணையர் காரை, கான்ஸ்டபிள் தீபக் குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.

அரவிந்தோ சாலையில் உள்ள மதர் இன்டர்நேஷனல் பள்ளியின் கேட் எண் 3 அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, ஒரு நீல நிற சொகுசு கார் வேகமாக வந்து துணை ஆணையர் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், காரை ஓட்டி வந்தது பேடிஎம் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினர் விஜய் சேகர் ஷர்மாவை கைது செய்து, பிணையில் விடுவித்தனர்.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், பேடிஎம் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'விஜய் சேகர் ஷர்மா கைது செய்யப்பட்டு, விசாரணை அதிகாரியால் அதே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் அல்லது வாகனத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டதன் தன்மையைக் கூறும் ஊடக அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை' என்று கூறியுள்ளார் என தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் இரண்டாவது பகுதி கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்‌ இரண்டாவது பகுதி இன்று தொடங்குகிறது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட்ஜெட்‌ கூட்டத்தொடர்‌ குடியரசுத்‌ தலைவர்‌ உரையுடன்‌ ஜனவரி 31-ஆம்‌ தேதி தொடங்கியது. அன்றைய தினம்‌ பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்‌ செய்யப்பட்டது.

2022-23-ஆம்‌ நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம்‌ தேதி நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ தாக்கல்‌ செய்தார்‌. பிப்ரவரி 11-ஆம்‌ தேதியுடன்‌ பட்ஜெட்‌ கூட்டத்தொடரின்‌ முதல்‌ பகுதி நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பகுதி கூட்டத்தொடர்‌ இன்று நடைபெற உள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ மக்களவையில்‌ தாக்கல்‌ செய்யவுள்ளார்‌. அதன்‌ மீதான விவாதமும்‌ இன்று கூட்டத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று பரவல்‌ காரணமாக, கூட்டத்தொடரின்‌ முதல்‌ பகுதியின்போது மாநிலங்களவை காலையிலும்‌, மக்களவை மாலையிலும்‌ கூடி செயல்பட்டன. தற்போது கொரோனா தொற்று பரவல்‌ கட்டுக்குள்‌ கொண்டு வரப்பட்டுள்ளதால்‌, இரு அவைகளும்‌ ஒரே நேரத்தில்‌ செயல்படவுள்ளன.

கூட்டத்தொடரின்‌ முதல்‌ பகுதியின்போது குடியரசுத்‌ தலைவர்‌ உரை மீதான விவாதம்‌ நடைபெற்றது பிறகு குடியரசுத்‌ தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்‌ தீர்மானத்தில்‌ பிரதமர்‌ நரேந்திர மோதி கலந்துகொண்டு இரு அவைகளிலும்‌ விளக்கமளித்தார்‌. அதையடுத்து அந்தத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தொடரின்‌ 2-ஆவது பகுதியின்போது, பட்ஜெட்டில்‌ அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஒப்புதல்‌ பெறுவதற்கான நடவடிக்கைகளில்‌ மத்திய அரசு ஈடுபடும்‌ எனத்‌ தகவல்கள்‌ தெரிவிக்கின்றன.

சில முக்கிய மசோதாக்கள்‌ தாக்கல்‌ செய்யப்படவுள்ளதாகவும்‌ மத்திய அரசு வட்டாரங்கள்‌ தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின்‌ பட்ஜெட்‌ கூட்டத்தொடர்‌ வருகின்ற ஏப்ரல்‌ 8-ஆம்‌ தேதி நிறைவடையவுள்ளதாக தினமணி செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என 5 மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு, 4 மணி நேரம் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என செய்தியை இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தோல்வி குறித்து ஆராய வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆஸாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா,கே.சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட 5 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யாரும் செல்போன் எடுத்துவரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பொறுப்புகளில் இருந்து சோனியா, ராகுல்,பிரியங்கா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மறுத்தனர்.

இதனிடையே, செயற்குழு கூட்டம் நடைபெற்ற கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே குவிந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

சுமார் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முழுவிவரங்களை அறிக்கை வாயிலாக காங்கிரஸ் கட்சி வெளியிடவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனிடையே கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, "கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார். எங்களை அவர் வழிநடத்திச் செல்வார். கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பான முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார்" என்றார்.

மேலும், 2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: