தமிழ்நாடு: சினிமா பாணியில் தங்க கடத்தல் தொடர்வது ஏன் ? - தங்க கடத்தலுக்கு தண்டனை என்ன ?

பட மூலாதாரம், AIU Chennai
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
தங்கத்தை இப்படி எல்லாம் கடத்தலாமா?' என சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றனர் கடத்தல்காரர்கள். அந்தளவுக்கு நூதனமான யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர். ` வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கொண்டு வருகிறவர்களில் 40 சதவீதம் பேர் தப்பிவிடுகின்றனர். வெகுசிலரே சிக்குகின்றனர்' என்கின்றனர் சுங்கத்துறை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள்.
பிப்ரவரி 22 ஆம் தேதி நடந்த சம்பவம் இது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்த துபாய் செல்லும் விமானத்தை சுத்தப்படுத்தியபோது ஓர் இருக்கைக்கு அடியில் 6 தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சல் சிக்கியது. அதன் மதிப்பு 31 லட்ச ரூபாய் என்கின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள்.
இதற்கு இரு நாட்கள் முன்னதாக துபாய் விமானத்தில் சென்னை வந்த பயணிகள் 5 பேரை சோதித்தபோது, அவர்களின் உள்ளாடைக்குள் 24 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு என்பது 65 லட்ச ரூபாய். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று உள்ளாடைகளில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பசைகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சம்பவத்தில் தொடர்டைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே மாதத்தில் எலக்ட்ரானிக் பொருள்களில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கக் கட்டிகள், ஒரு பெண்மணியின் தலைமுடியோடு இணைக்கப்பட்ட விக்கில் இருந்து சிக்கிய தங்கம் என கடத்தல் தங்கம் பிடிபடுவது தொடர்கிறது.
இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி

பட மூலாதாரம், AIU Chennai
மார்ச் 5 ஆம் தேதி இலங்கையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 142 பேர் வந்தனர். அதில் சந்தேகப்படும்படியான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், `சுங்கத்தீர்வை கட்டுவதற்கான பொருள்கள் எதுவும் இல்லை' எனக் கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியேற முற்பட்டார்.
அவரது செயல்பாடுகளால் சந்தேகம் வலுக்கவே, அவரது காலணிகளை பரிசோதனை செய்தனர். அப்போது 14 சிறு தங்கக்கட்டிகளை ஒட்டிக் கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. 393 கிராமுள்ள இந்தத் தங்கத்தின் மதிப்பு என்பது 18 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டு, துபாயில் இருந்து சென்னை வந்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா என்பவர், முகக்கவசத்தில் 65 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.
சென்னையைப் போலவே கோவை விமான நிலையத்திலும் கடத்தல் தங்கம் பிடிபடுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 2.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தங்களின் ஆடைகள் மற்றும் ஆசனவாய் ஆகியவற்றில் மறைத்து இவர்கள் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர எலக்ட்ரிக் குக்கரில் மறைத்து கொண்டு வரப்பட்ட 1.55 கிலோ தங்கம், குழந்தைகளுக்கான பியானோவில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 110 கிராம் தங்கக் கம்பிகள் எனக் கடத்தல் தொடர்பான யுக்திகளும் மலைக்க வைக்கின்றன.
சென்னையில் பிடிபட்ட 130 கிலோ தங்கம்
சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் வருவதால் கடத்தலின் மையப்புள்ளியாக சென்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
` சென்னை விமான நிலையத்தில் 2021-22 நிதியாண்டில் 130 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கொல்கத்தாவில் 128 கிலோ தங்கமும் திருச்சியில் 78 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகள் காரணமாக 2020-21 ஆம் நிதியாண்டில் தங்கக் கடத்தல் குறைந்ததாகவும் இதற்கு முந்தைய நிதியாண்டில் டெல்லி மற்றும் மும்பையில் அதிகளவு கடத்தல் தங்கம் பிடிபட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக 2018-19 ஆம் நிதியாண்டில் மும்பை விமான நிலையத்தில் 763 கிலோ தங்கம் பிடிபட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதிலும், வருவாய் புலனாய்வு இயக்குநகரத்தின் 2019-20 ஆம் ஆண்டு அறிக்கையின்படி நாடு முழுவதும் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு என்பது 185 மில்லியன் டாலர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தொடர்புடன் கடத்தல்

பட மூலாதாரம், AIU Chennai
`` துபாயில் இருந்து தங்கத்தைக் கடத்தி வருவது என்பது தொடர்கதையாக உள்ளது. அங்கிருந்து விமானம் கிளம்பும்போது பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் செய்யப்படும். அப்போது எந்த பெட்டியில் தங்கம் உள்ளது என்பது தெரிந்துவிடும். அந்த விமானம் எந்த ஊருக்குச் செல்கிறது என்பதையறிந்து நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் கொடுத்துவிடுவார்கள். அந்தவகையில் உளவுத்துறையின் தகவல் சரியாக இருந்தால், கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள்.
அதேநேரம், விமான நிலைய சோதனையையும் மீறி 30 முதல் 40 சதவீதம் பேர் தப்பித்துவிடுகின்றனர். பாதியளவு நபர்கள்கூட பிடிபடுவதில்லை'' என்கிறார், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் மூத்த வழக்கறிஞர் சீனிவாசன். இவர் சுங்கத்துறை தொடர்பான வழக்குகளைக் கையாண்டவர். தற்போது அமலாக்கத்துறையின் வழக்குகளையும் நடத்தி வருகிறார்.
இந்த விவகாரத்தில் கடத்தல்காரல்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை சுங்கத்துறையில் பணியாற்றிய முகமது இர்பான் என்பவர், விமான உளவுத்துறையின் கண்காணிப்பாளராகவும் பொறுப்பேற்றார்.
இவர் 2021 ஆம் ஆண்டு பெங்களூரு வழியாக லக்னோவுக்கு விமானத்தில் செல்ல முற்பட்டபோது நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 75 லட்ச ரூபாய் பணம், 169 கிராம் தங்கம் ஆகியவற்றுடன் பிடிபட்டார். இதுதொடர்பாக இர்பான் மீதும் அவர் மனைவி மீதும் சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இவர் ஆறு மாதங்களில் மட்டும் 1,851 சதவீதம் அதிகமான சொத்துகளை சேர்த்தது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
சி.பி.ஐ வலையில் சுங்கத்துறை அதிகாரிகள்
முன்னதாக, 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கடத்தலுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் கடத்தல்காரர்களிடம் இருந்து நாளொன்றுக்கு பத்து லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரையில் அதிகாரிகள் லஞ்சமாகப் பெற்றதாகவும் தகவல் வெளியானது. கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்சம் வாங்கிய புகாரில் சென்னை சுங்கத்துறை அதிகாரி உள்பட நான்கு பேரை சி.பி.ஐ கைது செய்தது.
சென்னை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்கள் மூலமாக தங்கம் கடத்தப்படுவதும் அதற்கு சில அதிகாரிகளே உடந்தையாக இருப்பதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடத்தல்கள் அதிகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், AIU Chennai
தங்கக் கடத்தல்கள் அதிகரிப்பது ஏன்? என மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் சீனிவாசனிடம் கேட்டபோது, ``ஒருவர் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தால் குறிப்பிட்ட அளவு தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரலாம். ஆனால் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுகிறவர்கள் அனைவருமே கடத்தலுக்காகவே செல்கிறவர்கள். அவர்களின் பாஸ்போர்ட்டுகளைப் பார்த்தாலே நிறைய தகவல்கள் கிடைக்கும். அவர்களுக்கு துபாய், சிங்கப்பூரில் எந்த வேலைகளும் இருக்காது.
சுற்றுலா விசாவில் 2 அல்லது 3 வாரம் செல்வார்கள். அங்கு தங்கம் புழங்குவதற்கு எந்தவிதத் தடைகளும் இல்லை. தங்கத்தை முறையாகக் கொண்டு வருகிறவர்கள், வெளிநாடுகளில் பணி நிமித்தமாக ஆறு மாதங்களுக்கும் மேல் தங்கியிருப்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் எந்தவித சிக்கல்களும் இல்லை.
விமான நிலையங்களில் கிரீன் சேனல், ரெட் சேனல் என இரண்டு வழிகள் இருக்கும். தன்னிடம் எதுவும் இல்லை என்பவர்கள் கிரீன் சேனல் வழியாகச் சென்றுவிடலாம். அதுவே, சுங்கத் தீர்வை போடுவதற்கான பொருள்கள் இருந்தால் ரெட் சேனல் வழியாக வர வேண்டும். அங்குள்ள அதிகாரிகளிடம் தன்னிடம் உள்ள பொருள்களைக் குறிப்பிட்டால் அதற்கேற்ப தீர்வை போடுவார்கள்'' என்கிறார்.
`குருவி'களின் வேலை என்ன?
`` தற்போது பிடிபடுகிறவர்கள் எல்லாம் தன்னிடம் என்ன இருக்கிறது என சுங்கத்துறைக்கு எந்தவிதத் தகவலையும் தெரிவிக்காமல் வருகிறவர்கள்தான். இந்த விவகாரத்தில் கிரீன் சிக்னல் வழியாக வருகிறவர்களை இரண்டுவிதமாகப் பிடிக்கின்றனர். பயணியின் நடை, உடை, பார்வை ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களின் உடைமைகளை ஆய்வு செய்வது ஒரு வகை. இவர்களில் சிலர் சூட்கேஸ், தொப்பி, தொலைக்காட்சி, லேப்டாப் என விதவிதமான முறைகளில் தங்கத்தைக் கொண்டு வருவார்கள்'' என்கிறார் சீனிவாசன்.
தொடர்ந்து பேசுகையில், `` குறிப்பிட்ட பயணியின் பாஸ்போர்ட்டை பார்த்தால் மிகச் சாதாரண மனிதர்களாக இருப்பார்கள். ஆனால், ஆறு மாதத்தில் எட்டு முறை துபாய் சென்றிருப்பார்கள். விமானத்தைவிட்டு இறங்கும்போது இமிக்ரேஷன் கிளியரன்ஸை வாங்க வேண்டும். அப்போது பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் அடித்துக் கொடுப்பார்கள். ஒரே மாதத்தில் எத்தனை முறை சென்றார்கள் என்பதைப் பொறுத்து சந்தேகம் எழும். இவ்வாறு பிடிபடுகிறவர்களை குருவிகள் என்பார்கள்.
இவர்கள் கடத்தல்காரர்கள் இல்லை. தங்கத்தைக் கொண்டு வந்து கொடுக்கக் கூடிய தரகு வேலையை மட்டும் பார்ப்பார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி கொடுப்பார்கள். பொதுவாக, இவர்களின் பின்னணியில் உள்ள நெட்வொர்க் தொடர்பான விவரம் குருவிகளுக்குத் தெரிவதில்லை. வேறு சிலர் சொந்தமாக தானே தங்கத்தைக் கடத்துவார்கள்'' என்கிறார்.
என்ன தண்டனை?
``கடத்தல் தங்கத்தை அரசு என்ன செய்யும், இதில் பிடிபடுகிறவர்களுக்கு என்ன தண்டனை?'' என்றோம். `` தங்கத்துக்கு முறையான கணக்குகளைக் காட்டாவிட்டால் அரசின் கஜானாவுக்கு அது சென்றுவிடும். பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தங்கம், வைரம், வெளிநாட்டு கரன்ஸி ஆகியவற்றைக் கொண்டு சென்றால் காபிபோசா (conservation of foreign exchange and prevention of smuggling act) சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்நிய செலாவணி மற்றும் கடத்தலைத் தடுக்கும் சட்டம் இது. இதன்பேரில் பிடிபடுகிறவர்களை ரிமாண்ட் செய்ய முடியும். குண்டர் தடுப்புச் சட்டம் போலத்தான் இந்தச் சட்டம். பிணை என்பதே கிடையாது. வருவாய் புலனாய்வுத் துறை, சென்னை சுங்கத்துறை, மாநில அரசு ஆகியவற்றுக்கும் காபிபோசா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளது'' என்கிறார்.
``தமிழ்நாட்டில் அதிகப்படியான தங்கம் பிடிபடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். இங்கும் ஓரளவு பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ளன. திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் தங்கம் பிடிபடுவது குறைவாக இருப்பதற்குக் காரணம், சர்வதேச விமானங்களின் வரத்து குறைவாக இருப்பதுதான்'' என்கிறார் சீனிவாசன்.
கடத்தலுக்குக் காரணம் வரிகளா?
தங்கக் கடத்தலால் பாதிப்புகள் இருந்தாலும் தொடர்ந்து சிக்குவது ஏன்?'' என சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லாலிடம் பேசினோம். `` சென்னை விமான நிலையத்தில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் காரணமாக நிறைய தங்கம் பிடிபடுகிறது. அரபு நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஏராளமான விமானங்கள் வருகின்றன.
அங்கிருந்து 200 கிராம், 300 கிராம் என தங்கத்தைக் கொண்டு வருகின்றனர். இதில் சிலர் தங்கத்தைக் கொண்டு வருவதால் ஏற்படப் போகும் பாதிப்புகளை அறியாதவர்களும் உள்ளனர். தவிர, கிலோ கணக்கில் இல்லாமல் கிராம் கணக்கில்தான் கொண்டு வருகின்றனர்'' என்கிறார்.
``இந்தியாவில் தங்கத்துக்கு விதிக்கப்படும் வரிகள்தான் கடத்தலுக்கு முக்கியக் காரணம். வெளிநாடுகளில் விற்கப்படும் தங்கத்தின் விலைக்கும் இந்தியாவில் உள்ள விலைக்குமான வித்தியாசம் என்பது 12 சதவீதமாக உள்ளது. ஒருமுறை சென்று வருவதன் மூலம் கிடைக்கும் லாபத்தால்தான் கடத்தல்கள் தொடர்கின்றன'' என்கிறார் ஜெயந்திலால்.
பிற செய்திகள்:
- யுக்ரேன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்குச் சொல்லப்போகும் செய்தி என்ன?
- யுக்ரேன் போரை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் அதிபரின் மனைவி
- இஸ்லாமியரின் நிலத்துக்குள் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்




























