சேலத்தில் மாற்றுத்திறனாளி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு - என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்ற்றுத்திறனாளி பிரபாகரன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் சந்தேக மரணம் அடைந்த சம்பவத்தை மாநில குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரபாகரன். இவரது மனைவி ஹம்சலா.

இவர்கள் இருவரையும் கடந்த 8ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 11ஆம் தேதி பிரபாகரனை நாமக்கல் கிளை சிறையிலும், ஹம்சலாவை சேலம் மத்திய பெண்கள் சிறைச்சாலையிலும் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி காலை திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபாகரன் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது சடலம் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள் என மறுநாள் 13ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் பிரபாகரனின் மரணத்தை 'சந்தேக மரணம்' என வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் அதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என கூறி உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து வந்தனர்.

அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் கூறுகையில், "சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பிரபாகரனின் மார்பிலும், உயிர் நிலையிலும் கடுமையாக தாக்கியதினாலேயே அவர் உயிரிழந்ததாக கருதுகிறோம். இதில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்," என்றார்.

மேலும் பிரபாகரனின் மனைவி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பிரபாகரனை சிறையில் அடைப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்து தவறான சான்று அளித்த மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வசநத் கூறினார்.

ஜாமீனில் வெளிவந்த மனைவி

இறந்து போன பிரபாகரனின் மனைவி ஹம்சலா சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கூறுகையில், "ஜனவரி 8ஆம் தேதி 5 மணிக்கு என்னையும் என் கணவரையும் போலீஸ்காரங்க கூட்டிகிட்டு போயி கோட்ரஸ்ல்ல வச்சி அடிச்சு சித்ரவதை பண்ணி ஆபாசமா திட்டினாங்க. கடைசியில அவர கொன்னே போட்டாங்க. என் பிள்ளைகள் இரண்டும் இப்ப ரோட்டில் அனாதையா நிக்குறாங்க. என் கணவரை கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரபாகரனின் மரணம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சந்திரன், மற்றும் பூங்கொடி , தலைமை காவலர் குழந்தைவேலு ஆகிய 3 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் சரக பொறுப்பு டிஐஜி நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் நேற்றைய தினம் ஜனவரி 16ஆம் தேதி பிரபாகரனின் சடலத்தை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூரிடம் பேசியபோது, "தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவில் உண்மை வெளியே தெரியும் அதுவரை நான் எதுவும் கூற கூடாது," என்றார்.

முதல்வர் அறிவித்த ரூ. 10 லட்சம்

இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கியுள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

சேலத்தில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாம் மனித உரிமை அமைப்பின் ஆர்வலர் பூமொழியிடம் பேசியபோது, இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் மீது எந்தவித குற்றவியல் வழக்கும் பதிவும் செய்யப்படவில்லை என்றார்.

"விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாற்றுத்திறனாளி பிரபாகரனை சித்ரவதை செய்து கடுமையாக அடித்த காவல்துறையினரை வன்மையாகக் கண்டிக்கிறேன். விசாரணை என்ற பெயரில், காவல்துறையினரின் சித்ரவதைகள், அடித்துக் கொலை செய்தல், ஊனமாக்கப்படுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள், தமிழகத்தில் பரவலாக கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. இதை தமிழக அரசு குறிப்பாக, தமிழகக் காவல்துறையின் தலைமை வேடிக்கை பார்ப்பது, கடும் கண்டனத்திற்கு உரியதாகும்," என்று பூமொழி கூறினார்.

இந்த விஷயத்தில் சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சந்திரன், பூங்கொடி, தலைமை காவலர் குழந்தைவேலு ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவல்துறையினரின் சித்திரவதைகளும், படுகொலைகளும், மனித உரிமை மீறல்களும் இனியேனும் நடக்காதவாறு தடுத்து நிறுத்திட, தமிழக அரசையும் தமிழகக் காவல்துறைத் தலைமையையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் பூமொழி.

"இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான சங்கத்தின் ஒன்றிய தலைவி அமலா ராணியிடம் பேசினோம். "நூறு சதவீத மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் அடித்து துன்புறுத்துவதற்கு எந்த வகை உரிமையும் கிடையாது. காவல்துறையினர் மூன்று பேர் மீது மட்டும் பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்றார்.

"காவல் ஆய்வாளர் சகாயராஜ் உட்பட 5 பேர் பிரபாகரனை அடித்து உதைத்து இருக்கின்றனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இறந்துபோன பிரபாகரனுக்கு 2 மகன்கள் உள்ளனர். தமிழக முதல்வர் அறிவித்துள்ள ரூபாய் 10 லட்சம் உதவி அந்த குடும்பத்திற்கு போதாது. அந்த குடும்பத்திற்கு அரசாங்கம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தொகை தர வேண்டும். அத்துடன் பிரபாகரனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அமலா ராணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: