பருவநிலை மாற்ற சவால்கள்: நெல்லை தாமிரபரணி ஆற்றை காக்க அரசுடன் கைகோர்த்த தன்னார்வலர்களின் புது முயற்சி

பட மூலாதாரம், Nellai Neervalam Team
- எழுதியவர், மு பார்த்தசாரதி
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
ஊர்களுக்கு ஆறு அடையாளமாக அமைவது, உலகின் சில நகரங்களுக்கு மட்டும் தான் வாய்த்திருக்கிறது. லண்டன் நகரத்துக்கு தேம்ஸ் போல, மதுரைக்கு வைகை போல, திருநெல்வேலிக்கு தாமிரபரணி.
வரலாற்று சிறப்பு கொண்ட தாமிரபரணி ஓடும் திருநெல்வேலியில் உள்ள நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுக்க 'நெல்லை நீர்வளம்' நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 2021 - 2030 ஆகிய பத்தாண்டு காலத்தை சூழலமைப்பு மறுசீரமைப்பிற்கான ஆண்டுகளாக அறிவித்துள்ளது. இதையடுத்து முதல்முறையாக 'நெல்லை நீர்வளம்' திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தாமிரபரணியையும் 1,200க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும் மறு சீரமைக்கும் பணி துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
"தாமிரபரணியை சுத்தப்படுத்துவதற்கான முயற்சியை இதற்கு முன் எத்தனையோ பேர் எடுத்துள்ளனர். எத்தனையோ முறை செயல்பாட்டுக்கு வந்து பிறகு முழுமையடையாமல் போயுள்ளது. ஆனால், இம்முறை தெளிவாக திட்டமிட்டு இம்முயற்சியை மாவட்ட நிர்வாகம் கையில எடுத்துள்ளது. இதை அரசு மட்டுமே வழிநடத்தி கொண்டுபோய் விட முடியாது. மக்கள் பங்களிப்பைப் பொறுத்துதான் இத்திட்டத்தின் வெற்றியுள்ளது" என்கிறார் ஏட்ரீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்.
உயிர் ஆதாரமாயிருக்கும் தாமிரபரணி

பட மூலாதாரம், Nellai Neervalam Team
தொடர்ந்து பேசுகையில், "தென் தமிழகத்தின் உயிர்நாடி தாமிரபரணி. திருநெல்வேலி, தூத்துக்குடி தவிர்த்து மதுரை வரை குடிநீருக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. விவசாயத்துக்கும் தாமிரபரணி மிக முக்கியம். காருகுறிச்சி பகுதியில் மண்பாண்டத்தொழில் செய்கிறார்கள். அவர்களுக்கான செழிப்பான மண் கிடைக்குமிடம் தாமிரபரணி ஆற்றுப்படுகைதான்.
உலகப் புகழ் பெற்ற பத்தமடை பாய்க்கான கோரைப்புல் தாமிரபரணி கரையோரங்களில்தான் வளர்கிறது. நீர்வாழ் பறவைகளுக்கும், காட்டுயிர்களுக்கும் தாமிரபரணி தலைகாட்டாமல் உதவுகிறது. ஆனால், இங்க வாழும் பெரும்பான்மை மக்களுக்கு தாமிரபரணி குறித்த புரிதல் பெரியளவில் இல்லை.
குளியலும் ரசாயனக் கழிவும்
தாமிரபரணியின் முக்கிய பிரச்சனையே தினமும் 1 லட்சம் மக்கள் வரை ஆற்றில் குளிப்பது தான். ஒரு கிலோமீட்டர் இடத்துக்குள் சுமார் 5 ஆயிரம் பேர் வரை குளிக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, டிடர்ஜெண்ட், ரசாயனங்கள் எல்லாமே நீரின் தரத்தை பெரியளவில் பாதித்துள்ளது.
சில ஊர்கள்லிருந்து வரக்கூடிய சாக்கடைக்கழிவுகள் நேரடியாக தாமிரபரணியில் கலக்கின்றன. தவிர சில தொழிற்சாலையின் ரசாயனக் கழிவுகளும் தாமிரபரணியில கலந்து ஆற்றுநீரை பாழ்படுத்துகின்றன.
ஒருங்கிணைந்த அமைப்பாக 'நெல்லை நீர்வளம்'
பல்வேறு அமைப்புகள் கடந்த சில ஆண்டுங்களாக ஆற்றை சுத்தப்படுத்த களம் இறங்கின.'நம் தாமிரபரணி' என்கிற அமைப்பு பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை உள்ள ஆற்றுப்படுகைகளை சுத்தம் செய்து வருகின்றனர். வேந்தன்குளம் உள்ளிட்ட ஒருசில குளங்களை தூய்மைப்படுத்தியுள்ளனர்.
'எஃகு' அமைப்பினர் ஆற்றிலுள்ள துணிக்கழிவுகளை அப்புறப்படுத்துகின்றனர். . ஆற்றங்கரையோரங்களில் மரத்தோட்டங்களை உருவாக்கி வருகின்றனர்.
இப்படி பல அமைப்புகள் தனித்தனியாக தாமிரபரணியை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்புகள் எல்லாமே 'நெல்லை நீர்வளம்' திட்டத்தின் கீழ் வரும்போது அரசின் ஒத்துழைப்பு எளிதில் கிடைக்கிறது" என்கிறார் மதிவாணன்.
'நெல்லை நீர்வளம்' குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.
மருதம், நாவல், ஆல், அத்தி, அரசு, இலுப்பை, வேம்பு, பனை, வில்வம், புங்கை, பின்னை போன்ற மரங்களை ஆற்றங்கரையோரங்களில் நட அறிவுறுத்துகிறோம். நெல்லை மண் வளத்திற்கு இவையே ஏற்றவை.
தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு தேவை

பட மூலாதாரம், Nellai Neervalam Team
மேலும் "மக்களை விட விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டியது ஆற்றை சுத்தப்படுத்த களமிறங்கியுள்ள தன்னார்வலர்கள் தான். காரணம், குளங்களை சுத்தப்படுததும் போது, ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குளத்தை தூர்வாருகிறார்கள். கண்ணுக்குத் தெரிந்த மண்ணையெல்லாம் அகற்றிவிடுகிறார்கள். மண்ணை கண்மூடித்தனமாக தூர்வாரும் போது மண்ணிலுள்ள விதைகளும் அகற்றப்படுகின்றன. இதையெல்லாம் தன்னார்வலர்கள்தான் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
'நம் தாமிரபரணி' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்ல பெருமாள் பேசும்போது, "தாமிரபரணி கால்வாய்கள் மூலம் குளங்கள், ஏரிகளை நிரப்பி திரும்பவும் ஆற்றிலேயே போய் கலப்பதுதான் தாமிரபரணியின் சிறப்பே. ஆனால், மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து கொட்டப்படுகிற இறைச்சிக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கால்வாய் மூலமாக நேராக ஆற்றில்தான் கலக்கின்றன. இதனால், நீரின் சிறப்பே மங்கிவிட்டது." என்றார்.
"இதுவரை 6 முறை தாமிரபரணியை சுத்தப்படுத்தியிருக்கிறோம். அப்போது எங்களுக்கு பல சவால்கள் இருந்தன. ஆனால், இனி 'நெல்லை நீர்வளம்' மூலமாக மக்களையும், தன்னார்வலர்களையும் எளிதாக இணைக்க முடிகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள தேசிய மாணவர் படை, பசுமைப்படை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இதை சிறப்பா முன்னெடுக்க மக்கள் ஒத்துழைப்புதான் அவசியமா இருக்கு" என்கிறார்.
அரசு தரப்பிலிருந்து...
" 'நெல்லை நீர்வளம்' என்கிற இந்தத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை நெல்லை டிஜிட்டல் வாட்டர் அட்லஸ், மறுசீரமைத்தல் மற்றும் புத்துயிர் அளித்தல், தாமிரபரணியின் தடங்கள் ஆகிய 3 திட்டங்களின் அடிப்படையில் மறு சீரமைக்க இருக்கிறோம்.
டிஜிட்டல் வாட்டர் அட்லஸ் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆவணப்படுத்தி அதை வரைபடமாக்கி வருகிறோம். இதன்மூலம் நீர்நிலைகள் தொடர்பான தகவல்களை 'நெல்லை நீர்வளம்' என்கிற இணையதள பக்கத்தில் சென்று பார்த்தால் எளிதில் பெற முடியும்.

பட மூலாதாரம், Nellai Neervalam Team
இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சி அமைப்புகளை பெரு நிறுவனங்களோடு இணைத்து அதன்மூலம் உள்ளூர் குடிநீர்த்தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும். இதற்கு மாணவர்களையும் பொதுமக்களையும் இணைத்து தன்னார்வ குழுவை உருவாக்கி அதன்மூலம் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளின்போது அவர்களை மாவட்ட நிர்வாகத்தினரோடு இணைத்து பணியாற்ற பயிற்சி அளிக்க இருக்கிறோம்" என்கிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு.
மேலும் "ஐக்கிய நாடுகள் சபை 2021 - 2030 ஆகிய பத்தாண்டு காலத்தை சூழல் மறுசீரமைப்பிற்கான ஆண்டுகளாக அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் பொது இடங்களில் காணப்படும் மரங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக 02 ஜுலை 2021 அன்று தமிழ்நாடு அரசின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையின்படி மாநில அளவில் ஒரு பசுமைக் குழுவும், மாவட்ட அளவில் ஒரு பசுமைக் குழுவும் நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாப்பது, மரங்களை வெட்டுவதை முறைப்படுத்துவது, தேவையான இடங்களில் இயல் மரங்களை நடுவதற்கு ஆவண செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசாணைப்படி பல அரசுத்துறைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை உள்ளடக்கிய 15 உறுப்பினர்கள் கொண்ட திருநெல்வேலி மாவட்ட பசுமைக் குழு நிறுவப்பட்டது.
இதன் முதல் கூட்டம் கடந்த 09 ஆகஸ்ட் 2021 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது, மாவட்டத்தின் பொது இடங்களில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நேரு யுவ கேந்திரா மற்றும் நெல்லை இயற்கைச் சங்கம் இணைந்து மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி செப்டம்பர் 8 அன்று மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நடைபெற்றது என்றார் ஆட்சியர் விஷ்ணு.
பிற செய்திகள்:
- மோப்பம் பிடிக்கும் டூத் பிரஷ் உங்கள் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்
- ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்
- குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை - யார் இவர்?
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை
- கேரளாவை உலுக்கும் கன மழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கிய தகவல்கள்
- சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























