"நீத்துறையில் 50% இடஒதுக்கீடு பெண்களின் உரிமை, தொண்டு அல்ல" - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, என்.வி. ரமணா, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
பிரசுரிக்கப்பட்டது

நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவது உங்களுடைய உரிமை, அது ஒன்றும் தொண்டு போல கிடையாது என்று பெண் வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக புதிதாக பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகளை கெளரவிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, "நீதித்துறையில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளிலும் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அந்த இடஒதுக்கீட்டைப் பெறுவது உங்களுடைய உரிமை. அது தொண்டு போல கிடையாது," என்றார்.

"இந்தியாவில் 17 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். அதில் வெறும் 15 சதவீதம் மட்டுமே பெண்கள். மாநில வழக்கறிஞர்கள் சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திடம் அதன் தேசிய செயற்குழுவில் ஏன் ஒரு பெண் வழக்கறிஞர் கூட இல்லை என்ற கேள்வியை நான் எழுப்பினேன். இவை எல்லாம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய விஷயம்," என்று என்.வி. ரமணா தெரிவித்தார்.

தமது பேச்சின்போது, கார்ல் மார்க்ஸின் வரிகளையும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா மேற்கோள்காட்டினார்.

உலகின் பெண்கள் ஒன்று சேர வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு இடையிலான தொடர்புகளைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் கோபத்துடன் குரல் கொடுக்க வேண்டும். தங்களுடைய உரிமையான 50 சதவீத இடஒதுக்கீட்டை அவர்கள் கோர வேண்டும். இது ஒன்றும் தொண்டு அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய பெண்கள் ஒடுக்கப்பட்டே வாழ்ந்துள்ளனர். இப்போதாவது நிலைமையை உணர்ந்து தங்களுடைய இலக்கை உச்ச நீதிமன்றத்திலும் கீழமை நீதிமன்றங்களிலும் பெண்கள் அடைய வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், SUPREME COURT OF INDIA

படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுடன், உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் பேலா திரிவேதி, ஹிமா கோஹ்லி, இந்திரா பானர்ஜி, பி.வி. நாகரத்னா

பெண்களுக்கு முழுமையாக பிரதிநிதித்துவம் வழங்குவதில் சிரமங்கள் இருப்பதாக மக்கள் மேற்கோள் காட்டுவார்கள். அது சரியானதல்ல. பெண் வழக்கறிஞரை தங்களுக்காக வாதிட தேர்வு செய்வதில் வழக்காடிகளின் தேர்வு, அசெளகரியமான சூழ்நிலை, போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை போன்றவை தடங்கல்களாக இருக்கலாம். ஆனால், இந்த நிலைமை மாற வேண்டும்.

இந்தியாவில் 60,000 நீதிமன்றங்களில், 22 சதவீதத்தில் பெண்கள் கழிப்பறை சரியாக இல்லை. இதனால் பெண் வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள் கூட பாதிக்கப்படுகின்றனர் என்றும் இவை எல்லாம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய பிரச்னைகள் என்றும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

முன்னதாக, பாராட்டு விழாவில் பேசிய சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய தலைமை நீதிபதி, கொரோனா பெருந்தொற்றுநோய்க்கு மத்தியில் மேலும் ஆபத்துக்களை சந்திக்க தயங்குவதாக தெரிவித்தார். எனினும் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு, நீதிமன்றங்கள் முழுமையாக பழையபடி இயங்கலாம் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டக் கல்லூரிகளில் பெண்களுக்கான குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கைக்கும் தமது ஆதரவு உண்டு என்று தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :