You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத் 6 வயது சிறுமி வல்லுறவு வழக்கு: தேடப்பட்ட இளைஞர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுப்பு
ஹைதராபாத் சாய்தாபாத்தில் நிகழ்ந்த 6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்ட சந்தேக நபர் ராஜு, வாரங்கல் அருகே ரயில் பாதையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
போலீசிடம் சிக்காமல் தப்பிவந்த ராஜுவின் சடலம் ஜனகமா மாவட்டம் கன்பூர் என்ற இடத்தில் ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கூறுகிறது.
ராஜு குறித்து தகவல் தருகிறவர்களுக்கோ, அவரைப் பிடித்துத் தருகிறவர்களுக்கோ ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தெலங்கானா போலீஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வியாழக்கிழமை காலை ராஜுவின் சடலம் ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தின் கையில் இருந்த பச்சை குத்திய அடையாளத்தை வைத்து அவர் ராஜுதான் என்பது முடிவு செய்யப்பட்டது. அவர் ரயில் பாதையில் தற்கொலை செய்துகொண்டார் என்கிறது போலீஸ்.
ரயில் பாதையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அளித்த தகவல் மூலம் இந்த விஷயம் தங்களுக்குத் தெரிய வந்ததாக வாராங்கல் போலீஸ் ஆணையர் தருண் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்த தற்கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் ரயில்வே கீமேன் குமார், "ரயில் பாதையில் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்த நானும் சக தொழிலாளி சாரங்கபாணியும் 309/3 பாயிண்ட் அருகே சந்தித்தோம். அப்போது ஒரு சந்தேகத்துக்கு இடமான நபர் ரயில் பாதை அருகில் உள்ள மரங்களை நோக்கி சென்று மறைந்ததாகவும், அவரை சுமார் 10 நிமிடம் தேடிய பிறகு வழக்கமான வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும் சாரங்கபாணி தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் அருகில் இருந்த மக்கள் கூச்சல் போட்டதைக் கேட்டதைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, ஓடும் ரயிலின் குறுக்கே ஒரு நபர் பாய்ந்துவிட்டதாக மக்கள் கூறியதாகவும் சாரங்கபாணி கூறினார். அவர்களில் சிலர் அந்த நபர் 6 வயது சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற ராஜு போல இருந்ததாக கூறியதாகவும் சாரங்கபாணி கூறினார்," என்று தெரிவித்தார் குமார்.
ராஜு தற்கொலை செய்துகொண்டது மக்களுக்கான வெற்றி என்று தெரிவித்தார் தெலங்கானா எம்.எல்.ஏ. சீதாக்கா. மக்களுடைய போராட்டத்தால்தான் அவர் பயந்துபோய் தற்கொலை செய்துகொண்டார் என்பது அவரது வாதம்.
ஆனால், ராஜு செய்த தவறுக்கு எந்த வகையிலும் காரணம் அல்லாத அவரது குடும்பத்தாருக்கு அரசாங்கம் உதவி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சிறுமி வல்லுறவு, கொலை வழக்கு குறித்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் சமூக ஊடகங்களில் அவ்வளவு விவாதங்கள் நடந்தன. அரசியல் தலைவர்களும், சினிமா நடிகர்களும் அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். சிலர் அந்த அந்த சிறுமியின் வீட்டுக்கே சென்றனர்.
தெலங்கானா தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டி உள்ளிட்ட சிலர் ராஜுவை என்கௌன்டர் மூலம் கொல்லவேண்டும் என்று தெரிவித்தனர். "அவரைப் பிடித்து என்கௌன்டர் செய்வோம். ; சிறுமியின் குடும்பத்தை பார்த்துக்கொள்வோம்" என்று கூறியிருந்தார் மல்லா ரெட்டி.
ஆனால், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ராஜுவின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர். ராஜு இறந்ததற்கு அவர்கள் போலீசை குற்றம்சாட்டுகின்றனர்.
ராஜு மரணம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்
"குழந்தையை வல்லுறவு செய்த மிருகம் ரயில் பாதையில் இறந்து கிடந்ததாக தெலுங்கானா டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்," என்று குறிப்பிட்டார்.
பிணக்கூறாய்வு முடிந்து சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்.
கடந்த 9-ம் தேதி முதல் 15 தனிக்குழுவினர் அமைத்து அவரைத் தேடிவந்தது போலீஸ்.
தங்கள் வீட்டுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து தூக்கிச் சென்று வல்லுறவு செய்து கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஒருவாரமாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை என்று உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தார் கோபம் கொண்டிருந்தனர்.
பிற செய்திகள்:
- டைனோசர்களை அழித்த விண்கல் தாக்குதலில் பாம்புகள் பிழைத்தது எப்படி?
- சீனாவை சீண்டும் 'ஆக்கஸ்' திட்டம்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஒன்று கூடுவது ஏன்?
- ஆரிய இனத்தைத் தேடி சென்னைக்கு வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
- சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
- சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்