`காற்று மாசால் இந்தியர்களின் ஆயுட்காலத்தில் 9 ஆண்டுகள் வரை குறையும்` - ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Images
காற்று மாசு இந்தியர்களின் ஆயுட்காலத்தில் ஒன்பது வருடங்கள் வரை குறையக் காரணமாக இருக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வட இந்தியாவில் உள்ள 48 கோடி பேர் "உலகிலேயே அதிகளவிலான காற்று மாசை" எதிர்கொள்கிறார்கள் என்றும் இது நாளடைவில் பிற இடங்களையும் பாதிக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
காற்றை தூய்மைப்படுத்தும் விதத்தில் அமையும் அரசு கொள்கைகள் மக்களின் ஆயுளில் ஐந்து வருடங்களை கூட்டலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சர்வதேச அளவில் மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்கள் முன்னணி இடங்களைப் பிடிக்கும். இந்தியாவில் மோசமான காற்று வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் அதிகமானோரைப் பலி வாங்குகிறது.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள `தி எனர்ஜி பாலிசி இன்ஸ்டிட்யூட்`டால் செய்யப்பட்ட இந்த ஆய்வு, உலகின் எந்த இடத்தையும் விட வட இந்தியாவில் உள்ள மக்கள் 10 மடங்கு மோசமான காற்றை சுவாசிக்கின்றனர் என தெரிவிக்கிறது.
இந்த காற்று மாசு பத்து வருடங்களில் வட இந்தியாவை தாண்டி மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பரவி மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களையும் பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது. அங்கு 2000ஆவது ஆண்டுடன் ஒப்பிட்டால் சராசரியாக மனிதர்களின் ஆயுட்காலத்தில் இரண்டரை முதல் மூன்று வருடங்கள் வரை குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`தி எனர்ஜி பாலிசி இன்ஸ்டிட்யூட்`டால் வெளியிடப்பட்ட புதிய காற்று தர குறியீட்டு அறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 10 µg/m³ என்ற வழிமுறைப்படி இந்தியாவில் காற்று மாசு குறைந்தால் டெல்லியில் உள்ளவர்களின் ஆயுளில் பத்து வருடம் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2019ஆம் ஆண்டு இந்தியாவில் சராசரி துகள் பொருள் செறிவு 70.3 µg/m³ ஆக இருந்தது இது உலகிலேயே மிக அதிக அளவாகும்.
வங்கதேசம், இந்தியா, நேபால் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகை சர்வதேச மக்கள் தொகையில் சுமார் கால்பகுதியாகும். இருப்பினும் இந்த ஐந்து நாடுகள் தொடர்ந்து காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் வருகின்றன.
2019ஆம் ஆண்டு இந்தியாவால் கொண்டுவரப்பட்ட தேசிய தூய்மை காற்று திட்டம் போன்ற கொள்கை ரீதியிலான மாற்றங்களால் பயன் ஏற்பட்டுள்ளது என்றும் `தி எனர்ஜி பாலிசி இன்ஸ்டிட்யூட்` தெரிவிக்கிறது. இந்த திட்டம் நாட்டில் நிலவும் ஆபத்தான காற்று மாசை குறைக்கும் திட்டத்தில் கொண்டுவரப்பட்டது.
"இம்மாதிரியான கொள்கைகளை கடைப்பிடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். டெல்லியில் உள்ளவர்களின் ஆயுட்காலத்தை சுமார் இரண்டிலிருந்து மூன்றரை ஆண்டுகள் வரை அதிகரிக்கும்" என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கொள்கைகள் மூலம் காற்று மாசை பெரிதளவில் குறைத்த ஒரு நாடாக சீனா உள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















