முறுக்கு கிராமம் - அமெரிக்கா வரை செல்லும்ஆட்டையாம்பட்டி கை முறுக்குகள்

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா வரை பயணிக்கும் சேலம் ஆட்டையாம்பட்டி கிராம முறுக்குகள்
பிரசுரிக்கப்பட்டது

தமிழர்களின் சமையல் கலையில் காலத்துக்கும், மண்ணுக்கும் ஏற்ற ஏராளமான உணவு வகைகள் இடம் பிடித்துள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தேங்காய்ப்பால் கலந்து சுடப்படும் முறுக்கு புகழ் பெற்றது என்றால், சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஆட்டையாம்பட்டியில் சுடப்படும் கை முறுக்கு, முறுக்குச் சுவையின் இன்னொரு பரிமாணத்தை நமக்குக் காட்டுகிறது.

காளிப்பட்டி கந்தசாமி கோயிலின் தேர்த் திருவிழாவுக்கு மாட்டு வண்டி கட்டிச் செல்லும் விவசாயிகள் வரும் வழியில் பஞ்சு மிட்டாயுடன் ஆட்டையாம்பட்டி கை முறுக்கையும் குழந்தைகளுக்கு வாங்கி வருவார்கள்.

ஞாயிறு தோறும் நடைபெறும் ஆட்டையாம்பட்டி வாரச் சந்தையில் முறுக்கு வாங்குவதற்கென்றே குவியத் தொடங்கிய மக்களைப் பார்த்து, நாள்தோறும் முறுக்கு சுட்டு வியாபாரம் செய்யத் தொடங்கினர் அப்பகுதி பெண்கள்.

இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமல்ல எந்தக் கிழமையில் சென்றாலும் ஆட்டையாம்பட்டி முறுக்கை சுவைக்க முடியும்.

மொறு மொறுப்புடன் தனி சுவை ...

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் உள்ள நூற்றுக்கணக்கான முறுக்கு கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது பல ஊர்களில் இருந்தும் மக்கள் இங்கு தேடி வந்து சுடச்சுட கைமுறுக்கு வாங்கி செல்கின்றனர்.

கார்அரிசி மாவு கிரைண்டரில் ஆட்டப்பட்டு அதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள்ளு, சீரகம் சேர்த்து முறுக்கு மாவு பிசையப்படுகிறது.

பின்னர் பல அளவுகளில் முறுக்கு கையினால் பின்னப்படுகிறது. தொடர்ந்து விறகு அடுப்பில் முறுக்கு சுடப்படுவதால் அதற்குத் தனிச்சுவை கிடைக்கிறது.

எங்க ஊர் ஆட்டையாம்பட்டியில் முறுக்குகளை வாங்கி அமெரிக்காவிலுள்ள தங்கள் உறவினர்களுக்கு மக்கள் அனுப்பவதாக மிக பெருமையாகக் கூறுகிறார் முறுக்கு கடை உரிமையாளர் யுவராஜ் .

எங்கள் ஊர் ஆட்டையாம்பட்டியை முறுக்கு ஊர் என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு எங்கள் ஊரில் நூற்றுகணக்கான முறுக்கு கடைகள் உள்ளன இதில் ஏராளமான பெண்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிலை பரம்பரை பரம்பரையாக சுமார் 1௦௦ ஆண்டுகளுக்கு மேல் செய்து வருகிறோம்.

ஆரம்பத்தில் பத்து ரூபாய்க்கு பத்து முறுக்கு விற்பனை செய்தோம் தற்போது விலைவாசி உயர்ந்து விட்டதால், பத்து ரூபாய்க்கு 7 முறுக்குகள் விற்பனை செய்கிறோம்.

எங்கள் ஊரைப் போல மிக குறைந்த விலையில் மொறுமொறுப்பான சுவைமிகுந்த முறுக்குகளை யாரும் தர முடியாது. உடலுக்கு தீங்கு செய்யாத இந்த கைமுறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டம்.

இங்கு நூறு கடைகளுக்கு மேல் உள்ளதால் ஒரு கடைக்கு 2 ஆயிரம் 3 ஆயிரம் முறுக்குகள் செய்தால்கூட சுமார் 3 லட்சம் முறுக்குகள் வரை தினமும் இங்கு தயாராகிறது.

அப்படி உற்பத்தி செய்யப்படும் முறுக்குகள் பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா தெலுங்கானா... உட்பட பல மாநிலங்களுக்கு செல்கிறது. மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்கும் இங்கு வந்து முறுக்குகளை வாங்கி அனுப்பி வைக்கின்றனர்.

இந்த வழியே காரில் செல்பவர்கள் வண்டியை நிறுத்தி கண்டிப்பாக இங்கு முறுக்கு வாங்காமல் செல்லவே மாட்டார்கள் என்கிறார்

படித்த பெண்களும் முறுக்கு சுடுகிறார்கள்

படித்தபெண்களும் கிராமிய பாரம்பரியத்தை போற்றும் உடலுக்குத் தீங்கில்லாத, எந்த வித இரசாயன கலப்பும் செய்யப்படாத ஆட்டையாம்பட்டி கைமுறுக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தயாரிக்கப்பட்ட முறுக்குகளை அரசு நிர்ணயித்த குறைந்த அளவு மைக்ரான் கொண்ட பாலிதீன் பைகளில் கட்டி தருகிறார்கள்.

அடுத்து நம்மிடம் பேசிய மீனா, எங்கள் ஊரின் பெருமையே கைமுறுக்கு தான், ஆண்களும் பெண்களும் என 100 குடும்பங்களுக்கு மேல் முறுக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இல்லத்தரசிகள் அதிக அளவில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

நான் பொறியியல் படித்து உள்ளேன். எனக்கு இந்த தொழில் பிடித்துப்போக வேலைக்கு போகாமல் இந்த வேலை செய்து என் குடும்பத்திற்கு உதவியாக இருக்கிறேன். கொரானா காலத்தில் கூட இந்த தொழில் எங்களை கைவிடவில்லை என்கிறார்.

செய்தியாளர் & ஒளிப்பதிவாளர்: ஏ எம் சுதாகர்,

படத்தொகுப்பு: டேனியல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :