மது, புகையிலையை நுழைய விடாத தமிழகத்தின் சாதனை கிராமம்
தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைக்கிறது பொதிகுளம் கிராமம். இக்கிராமத்தில் போதை பொருட்கள், புகையிலை பொருட்களை பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என கட்டுப்பாட்டோடு வாழ்கிறார்கள்.
செய்தியாளர் & ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பொதிகுளம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வது போன்ற பணிகள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
பொதிகுளத்தை சேர்ந்த இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் மது பழக்கத்திற்கும், புகையிலை பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து கிராம வாசிகளை மீட்க ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு மதுக்கடைகளை அடைத்திருந்தது. இதனை பயன்படுத்தி இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தொடர்ந்து மது குடிக்க கூடாது, வெளியூர்களில் மது அருந்திவிட்டு ஊருக்குள் வர கூடாது என ஊர் பொது மக்கள் கூடி முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை கிராம மக்கள் மது அருந்துவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பொதிகுளம் கிராமத்தில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை, போதை பாக்கு போன்றவற்றை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த கிராம பொது மக்கள் மது, பீடி, சிகரெட் பயன்படுத்துவதில்லை. இதனால் அக்கிராம பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மது பழக்கத்தில் இருந்து மீண்ட கந்தவேல் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் மது பழக்கத்தற்கு ஆளாகி சரியாக வேலைக்கு செல்லாமல் என் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்த நிலையில் எங்கள் ஊர் பெரியவர்கள் எடுத்த முடிவு தற்போது எனக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நான் மது அருந்துவதை முற்றிலும் நிறுத்தி விட்டேன்” என்கிறார்.
பொதிகுளம் கிராமத்தை சேர்ந்த சசிகலா பேசுகையில், ``எங்கள் கிராமத்தில் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்க தடை விதித்ததால் ஊரே நிம்மதியாக இருக்கிறது. இதனால் வரும் தலைமுறை மதுப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்கிறார்.
``இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் எங்களை மரியாதையாக பார்க்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. மேலும் சில கிராம மக்கள் எங்களிடம் எவ்வாறு நீங்கள் உங்கள் கிராமத்தில் மது பழக்கத்தை நிறுத்தினீர்கள் என ஆர்வத்துடன் கேட்கின்றனர்'' என்கிறார் சசிகலா.
மது இல்லா கிராமமான பொதிகுளம் குறித்து அக்கிராமத்துப் பெண் ராணி பிபிசி தமிழிடம் பேசுகையில், ``எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் வசித்து வருகிறேன். என் கிராமத்தில் மது பழக்கம் இல்லை என்பதை அறிந்து மதுரையில் நான் வசிக்கும் வீட்டின் அருகே உள்ளவர்கள் எங்கள் கிராமத்தை பற்றி ஆச்சரியத்துடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
எங்கள் கிராமத்தில் மது, புகை பழக்கம் இல்லாததால் கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரித்துள்ளது. இளைஞர்கள் இந்த தீய பழக்கத்திலிருந்து வெளியே வந்து உடல்களை தயார் செய்து காவல்துறை, எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்வதற்கு தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்'' என தெரிவித்தார் ராணி.
பிற செய்திகள்:
- உலகத்தால் கைவிடப்படும் ஆப்கானிஸ்தான் - போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை
- நயன்தாராவின் நெற்றிக்கண் படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
- முக்கிய சீனத் துறைமுகத்தில் கோவிட்-19 தொற்று கண்டுபிடிப்பு: உலக வணிகத்துக்கு அச்சுறுத்தல்
- இது செல்போனா? கீ செயினா? மடக்கும் வசதி ஸ்மார்ட்ஃபோன்களோடு களமிறங்கும் சாம்சங்
- இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல முடியாது: அரசு அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்