ஷியாம பிரசாத் முகர்ஜியிடம் மன்னிப்பு கேட்ட நேரு - வரலாற்றுத்தருணம்

பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரும் அதன் முதல் தலைவருமான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி கடந்த 1953 ஜூன் 23 அன்று இறந்தார். அவரது 68 ஆவது நினைவு தினத்தை பாஜகவினர் சமீபத்தில் கொண்டாடினர். பாரதிய ஜனதா கட்சி அவர் மறைந்த நாளை "தியாக தினம்" என்கிறார்கள்.
ஷியாமா பிரசாத்தை நினைவுகூர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, "பாரத தாயின் மகனான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு அனேக கோடி அஞ்சலி" என ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஷியாமா பிரசாத் 370ஆவது பிரிவின் கடும் எதிர்ப்பாளராக இருந்தார், மேலும் காஷ்மீர் முற்றிலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களைப் போலவே அதே சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்பினார்.
370ஆவது பிரிவுக்கு எதிராக சுதந்திர இந்தியாவில் அவர் குரல் எழுப்பினார். "ஒரு நாட்டில் இரண்டு இலக்குகள், இரண்டு சட்டங்கள் மற்றும் இரண்டு தலைமைகள் இருக்க முடியாது" என்று அவர் கூறினார்.
33 வயதில் துணை வேந்தர்

பட மூலாதாரம், FACEBOOK/BJP
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி 1901 ஜூலை 6 அன்று கொல்கத்தாவின் மேல் தட்டுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் அஷுதோஷ் முகர்ஜி. அவர் வங்காளத்தில் கல்வியாளராகவும் அறிவுசார் அன்பர்களில் ஒருவராகவும் அறியப்பட்டார்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1926 இல் செனட்டில் உறுப்பினரானார். 1927 ஆம் ஆண்டில், பாரிஸ்டராக தேர்ச்சி பெற்றார்.
33 வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத் துணை வேந்தரானார். நான்கு ஆண்டுகள் அப்பதவியில் இருந்த அவர் கொல்கத்தா சட்டமன்ற உறுப்பினரானார்.
காங்கிரசுடனான கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அவர் கட்சியில் இருந்து விலகினார், மீண்டும் சுயேச்சையாகச் சட்டமன்ற உறுப்பினரானார்.
அவர் தீவிர தேசியவாத சிந்தனையாளர் என்பது அனைவரும் அறிந்தது.
பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது இடைக்கால அரசாங்கத்தில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியை அமைச்சராக்கினார். அவர் மிகக் குறுகிய காலத்திற்குத் தான் அமைச்சராக இருந்தார்.
நேரு, ஒரு பிரிவினரத் திருப்திப்படுத்தும் விதமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய ஷியாமா பிரசாத், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். "ஒரு நாட்டில் இரண்டு இலக்குகள், இரண்டு சட்டங்கள் மற்றும் இரண்டு தலைமைகள் இருக்க முடியாது" என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
காஷ்மீர் செல்ல அனுமதி பெற வேண்டிய நிலை மாறவேண்டும் என அவர் விரும்பினார். 1953 ஆம் ஆண்டில், மே 8 ஆம் தேதி, அவர் யாருடைய அனுமதியுமின்றி டெல்லியில் இருந்து காஷ்மீர் சென்றார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மே 10 அன்று, ஜலந்தரில், "நாம் அனுமதியின்றி ஜம்மு - காஷ்மீருக்கு செல்ல வேண்டும், அது நமது அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்" என்று முழங்கினார்.
மே 11 அன்று, ஸ்ரீநகர் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார். அவர் அங்குள்ள சிறையில் வைக்கப்பட்டார், பின்னர் சில நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
ஜூன் 22 அன்று அவரது உடல்நிலை மோசமடைந்தது, ஜூன் 23 அன்று அவர் மர்மமான சூழலில் இறந்தார்.
ஜனசங்கம் தோற்றம்

பட மூலாதாரம், Getty Images
அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கும் பல கருத்து வேறுபாடுகள் நிலவின.
நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிக்கும் இடையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்ட போது, இந்த வேறுபாடுகள் அதிகரித்தன. இந்த ஒப்பந்தத்தின் பின்னர், அவர் ஏப்ரல் 6, 1950 அன்று அமைச்சரவையில் இருந்து விலகினார்.
ஷியாமா பிரசாத் 1951 அக்டோபர் 21 ஆம் தேதி ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் குரு கோல்வல்கருடன் கலந்தாலோசித்து ராஷ்டிரிய ஜன சங்கத்தை நிறுவினார், இது பின்னர் ஜனதா கட்சியுடன் இணைந்தது, பின்னர் கட்சி உடைந்ததையடுத்து, 1980 ல் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது.
1951 - 52 பொதுத் தேர்தலில், மூன்று ராஷ்ட்ரிய ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் ஷியாமா பிரசாத்.
நேரு கேட்ட மன்னிப்பு

பட மூலாதாரம், Getty Images
டைம்ஸ் ஆப் இந்தியாவின் முன்னாள் ஆசிரியர் இந்தர் மல்ஹோத்ரா சில ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியிடம் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை விவரித்தார். "ஷியாமா பிரசாத் முகர்ஜி நேருவின் முதல் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். நேரு - லியாகத் ஒப்பந்தம் நடந்தபோது, அவரும் மற்றொரு வங்காள அமைச்சரும் ராஜினாமா செய்தனர். அதன் பிறகு ஜனசங்கத்திற்கு அடித்தளம் அமைத்தார். "
"பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, டெல்லி நகராட்சித் தேர்தலில் காங்கிரசும் ஜனசங்கமும் மிகவும் கடுமையாகப் போட்டியிட்டன. இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய ஷியாமா பிரசாத் முகர்ஜி, காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற மது மற்றும் பணத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். "
இந்தக் குற்றச்சாட்டை நேரு கடுமையாக எதிர்த்தார். இந்தர் மல்ஹோத்ரா இதைப் பற்றிக் கூறுகையில், "முகர்ஜி மது மற்றும் பணம் என்று கூறியதை ஜவஹர்லால் நேரு மது மற்றும் மாது என புரிந்து கொண்டார். அவர் எழுந்து அதை மிகக் கடுமையாக எதிர்த்தார்."
"அப்போது ஷியாமா பிரசாத் முகர்ஜி, நீங்கள் அதிகாரப்பூர்வப் பதிவை எடுத்து நான் கூறியதைப் பாருங்கள் என்று கூறினார். நேரு தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து, அவை முன்னிலையில், அவரிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தவறான தகவலைப் பகிர்வதில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார் ஷியாமா பிரசாத்".
பிற செய்திகள்:
- திலீப் குமார்: சத்யஜித் ரேவால் பாராட்டப்பட்ட பாலிவுட் நாயகன்
- ஒலிம்பிக் கனவுடன் தடைகளை உடைத்த 3 தமிழ்நாட்டுப் பெண்கள்: சாதித்தது எப்படி?
- முன்னாள் இந்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி டெல்லி வீட்டில் கொலை
- மகேந்திர சிங் தோனி: இந்திய கிரிக்கெட்டை உச்சங்களுக்கு எடுத்து சென்ற தலைவனின் கதை
- உலக சாக்லேட் தினம்: ஞாபக மறதிக்கு 'சாக்லேட்' மருந்தாகுமா?
- இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள் - எல்ஓசி போல மாறுகிறதா எல்ஏசி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












