சேலத்தில் தடுப்பூசி போட தள்ளுமுள்ளு: அதிகாலையிலேயே காத்திருக்கும் மக்கள்

கொரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஒரு மாதமாக சேலம் மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கம் தணிந்துவருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் ஏராளமான மக்கள் வருகின்றனர்.

ஞாயிறு, திங்கள் கிழமைகளில் தடுப்பூசி கிடைக்கும் என்று அறிந்து தடுப்பூசி மையங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் கடைசியில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்காத நிலை இருந்ததால், தடுப்பூசி மையங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் போராட்டம் நடத்தும் அளவுக்குச் சென்றது. மாவட்ட ஆட்சித் தலைவரே நேரில் சென்று சமாதானம் செய்யும் நிலை ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள குமாரசாமிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக மாவட்ட ஆட்சியர் தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

தடுப்பூசி செலுத்துவதும் பணியை மேற்பார்வை செய்யும் அதிகாரிகள்

புதிதாக வந்துள்ள தடுப்பூசி சப்ளை அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டு பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி மையங்களில் தள்ளு முள்ளு ஏற்படுவதைத் தவிர்ப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதிகாலை 4 மணிக்கே வரிசையில்

இன்று வியாழக்கிழமை தடுப்பூசி போட வந்திருந்த ராம்குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, "நாங்கள் காலை ஆறு மணிக்கே தடுப்பூசி போட வந்தோம். எங்களுக்கு முன்பாக அதிகாலை நான்கு மணிக்கே வரிசையில் நிற்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒன்பது மணி அளவிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிந்தது. தடுப்பூசி போடும் மையத்தில் திருவிழா கூட்டம்போல் இருந்ததை இதுவரை நாங்கள் பார்த்தில்லை" என்றார்.

இது தொடர்பாகப் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் "சேலம் மாநகராட்சியில் 16 இடங்களில் தடுப்பூசி போடுகிறார்கள். இதை இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

சேலம் மாவட்டத்தில் 91 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்பட 121 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. எந்தெந்த பகுதியில் எந்தெந்த நாட்களில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரங்கள் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். மக்கள் முடிந்த அளவுக்கு தங்கள் பகுதியிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"சேலத்திற்கு 16ஆம் தேதி 32,750 தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளன. இதுவரை 6,01,180 டோஸ்கள் வந்துள்ளன. இதில், 5,61,316 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு இல்லாமல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார் மாவட்ட ஆட்சியர்.

மதுவுக்காக மாவட்ட எல்லைக்குப் போகும் நிலை

மதுபானம் வாங்க காத்திருக்கும் மக்கள்

சேலம் மாவட்டத்தில் தளர்வில்லா ஊடரங்கு இருப்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூர், டேனீஷ்பேட்டை, தீவட்டிப்பட்டி, மஞ்சவாகணவாய் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது அருந்துவோர் அதிக அளவில் செல்கின்றனர்.

இவர்களைத் தடுக்க போலீசார் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். ஆனால், பலர் சிறு கிராமங்கள் வழியாக சோதனைச் சாவடிகளில் சிக்காமல் மாவட்டம் தாண்டி சென்று மது வாங்குகின்றனர். இதனால், அண்டை மாவட்டங்களின் எல்லையோர டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கர்நாடகாவிலிருந்து மது பாட்டில்களைக் கடத்தி வருவதும், போலீசில் சிக்குவதும் அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :