You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாறுமாறாக உயர்ந்த கட்டுமானப் பொருள்கள் விலை: பின்னணியை விவரிக்கும் பில்டர்கள்
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருள்களின் செயற்கை விலையேற்றத்தால் சொந்த வீடு கனவில் உள்ளவர்களும் ஒப்பந்ததாரர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `உற்பத்தி பொருள்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லாத சூழலில் இப்படியொரு விலையேற்றம் ஏன்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஏற்கெனவே தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், சிமெண்ட், செங்கல், எம் சாண்டு, ஜல்லி, இரும்புக் கம்பி ஆகியவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டதால் தொடங்கிய வேலைகளை பலரும் பாதியில் நிறுத்திவிட்டனர். `ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பழைய விலைக்குப் பொருள்கள் கிடைக்கும்' என்பதற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லாத சூழல் நிலவுகிறது.
அதேநேரம், கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்களின் இயக்கம் குறைந்துவிட்டதால் இரும்புக் கம்பி, சிமெண்ட், மணல் ஆகியவற்றின் இருப்பும் குறைந்துவிட்டதாகக் காரணம் சொல்லப்படுகிறது. அதிலும், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகரிப்பதால் பிற மாவட்டங்களைவிடவும் அங்கு கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது. உதாரணமாக, 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் மூட்டை, தற்போது 480 ரூபாய் வரையில் விலை போகிறது.
செயற்கை விலையேற்றம்!
சிமெண்ட் கம்பெனிகளும் தரத்துக்கு ஏற்ப 530 ரூபாய் வரையில் விலையை உயர்த்திவிட்டன. எம் சாண்டை பொறுத்தவரையில் 4 யூனிட்டை 12,000 ரூபாய்க்கு விற்றுவந்தனர். அது தற்போது 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பூச்சு வேலைக்குப் பயன்படும் பி சாண்டும் 4 யூனிட்டுக்கு 5,000 ரூபாய் வரையில் அதிகரித்துவிட்டது. இரும்புக் கம்பியைப் பொறுத்தவரையில் கிலோ 60 ரூபாய்க்கு விலை போனது, தற்போது அது 72 ரூபாயாக அதிகரித்துவிட்டது. பெயிண்ட் விலையும் தரத்துக்கேற்ப 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் உயர்ந்துவிட்டது.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எதுவும் விலை உயர்வை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இவர்களிடம் உள்ள மொத்த விற்பனையாளர்களே, இப்படியொரு விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
"இந்த விலையேற்றத்தால் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நாங்கள் வாங்கும் ஏ கிரேடு சிமெண்ட்டின் விலை 350 ரூபாயில் இருந்து 500 ஆக உயர்ந்துவிட்டது. இதனை மொத்தமாக எடுத்தால் 450 ரூபாய் வரையில் கொடுக்கின்றனர். ஆனால், இவற்றைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களின் விலை எதுவும் உயரவில்லை. மின்சாரக் கட்டணம், தொழிலாளர் சம்பளம் ஆகியவையும் உயரவில்லை. அப்படியிருந்தும் செயற்கையாக விலையை உயர்த்திவிட்டனர்" என்கிறார், சென்னை சதர்ன் பில்டர்ஸ் அசோசியேசனின் முன்னாள் தலைவர் மோகன்.
கட்டுமான நிறுவனங்களின் கவலை!
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், "ஊரடங்கு காலத்தில் ஏற்கெனவே தொடங்கிய கட்டடப் பணிகளை முடிப்பதற்கு அரசு அனுமதித்துள்ளது. ஆனால், பொருள்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டதால் பலரும் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டனர். பொதுவாக, கட்டுமானம் தொடங்கும் நேரத்தில் வீடுகளை வாங்க விரும்புகிறவர்களிடம் ஒரு தொகையை நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டுள்ளோம். அவர்களிடம், `பொருள்களின் விலை அதிகரித்துவிட்டதால், கூடுதல் தொகையைக் கொடுங்கள்' எனக் கேட்கவும் முடியாது. அது ஒப்பந்தத்தை மீறியதாக ஆகிவிடும்.
சிமெண்ட் விலையுடன் சேர்த்து எம் சாண்ட், செங்கல், முக்கால் ஜல்லி, ஒன்றரை ஜல்லி என அனைத்துப் பொருள்களின் விலையையும் உயர்த்திவிட்டனர். எம் சாண்டு ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரித்துவிட்டது. இத்தனைக்கும் குவாரிகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. விற்பனையும் அதே அளவில் இருந்தாலும் அவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்து செயல்படுகின்றனர்.
சென்னையில் மட்டும் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 160 பேர் பில்டர்களாக உள்ளனர். இவர்களில் பலரும் தொடங்கிய பணியை முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாக, என்னுடைய மொத்த கட்டட விற்பனையில் தலா 20 லட்சம் வரையில் உயர்ந்துவிட்டது. இதனை தேவையற்ற உயர்வாகத்தான் பார்க்கிறேன். இதனால் வங்கியில் வாங்கிய பணத்துக்கும் வட்டி கட்ட வேண்டும்" என்கிறார்.
மேலும், "தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களில் பெரும்பாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சென்னையில் 80 சதவிகித தொழிலாளர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். சம்பள விஷயத்தில் இவர்களுக்கும் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. இவர்களை நம்பித்தான் கட்டுமானத் தொழிலே இயங்கி வருகிறது. தற்போது கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தால் பணிகள் பாதியில் நிற்கின்றன. இதனால், இவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் முடிவில் உள்ளனர். இவர்களை மீண்டும் சென்னைக்குக் கூட்டி வர நினைத்தால் கூடுதல் செலவுகள் ஏற்படும். எனவே, செயற்கையாக அதிகரித்த இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, அரசு சில ஒழுங்குமுறைகளை கொண்டு வர வேண்டும்" என்கிறார்.
செயற்கை விலை உயர்வு ஏன்?
"இப்படியொரு செயற்கையான விலை உயர்வு ஏன்?'' என கோவை மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல், மணல் விற்பனையாளர்களிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். "பண சுழற்சிக்கு வழியில்லாததால்தான் டிமாண்ட் உயர்கிறது. எங்களுக்கு குவாரிகளில் இருந்து பி சாண்ட், எம் சாண்ட் போன்றவை போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, கிடைக்கும் பொருள்களை இரட்டை விலை உயர்வில் விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதில் மிக முக்கியமான காரணம், டீசல் விலை உயர்வு. தற்போது ஒரு லிட்டர் டீசலை 91.20 பைசாவுக்கு வாங்குகிறோம். டீசல், லாரி டிரைவர் பேட்டா, தொழிலாளர்கள் சம்பளம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் எங்களுக்கு பெரிதாக லாபம் வருவதில்லை. கடந்த ஓராண்டாக நாங்களும் கடும் நஷ்டத்தில் வாகனங்களை இயக்கி வந்தோம். அதன் காரணமாக, தற்போது விலை உயர்வு ஏற்பட்டுள்ளது" என்கின்றனர்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர்கள், `` கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் 180-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக இந்தச் சூளைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இதனால், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூடுதல் விலைக்கு செங்கற்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோவையில் நான்காயிரம் செங்கற்களை 27 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியவர்கள் எல்லாம் இன்றைக்கு லாரி வாடகையோடு சேர்த்து 42 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர்.
முடங்கிய செங்கல் சூளைகள்!
இதனால் கோவையில் உள்ள சூளை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, `செங்கல் சூளைகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க அனுமதி கொடுக்க வேண்டும்' என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இந்த சூளைகளை மையமாக வைத்து வேலை பார்த்து வந்த 2,000 வெளிமாநிலத் தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
இவர்களின் வருவாயை அடிப்படையாக வைத்து நடந்து வந்த தடாகம் விவசாயிகள் சந்தையும் இயங்குவதில்லை. கட்டுமானத் தொழில் வீழ்ச்சியடைந்தால் அதனை நம்பியுள்ள ஏராளமான துறைகளும் அடிபட்டுவிடும். அரசுதான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.
கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம் தொடர்பாக அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ` ஊரடங்கு நடைமுறையில் உள்ளதன் காரணமாக பெரிய கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன.
கட்டுமானப் பொருள்களின் விற்பனையும் வெகுவாக சரிந்துவிட்டது. ஆனால், விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. ஒருவேளை ஊரடங்கு முடிந்த பின்னர் கட்டுமானப் பொருள்களின் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்டுமானப் பொருள்கள் பதுக்கப்பட்டு அதன் காரணமாக செயற்கை விலையேற்றம் உருவாகி உள்ளதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை போக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சொல்வது என்ன?
இதுதொடர்பாக, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். " கட்டுமானத் தொழிலில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் திங்கள்கிழமை சந்திப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அவர்களிடம் விவாதித்த பிறகு முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உள்ளோம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- ட்விட்டரில் களமாடும் ஒன்றிய உயிரினங்கள்: பாஜக கோபம் கொள்வது ஏன்?
- அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வரும் நரம்பு நோய் – ஆய்வில் தகவல்
- தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
- பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்
- காண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது
- தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், தட்டு, நாணயம் ஒட்டிக்கொள்வதாக கூறும் நாசிக் முதியவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்