நான்கு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்தாகிறது - ஊடகச் செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

(இன்று (ஜூன் 3, 2021, வியாழக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்வா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலமும் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்துள்ளது. மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வா் செளஹான் பதிவிட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்திலும் ரத்து: உத்தரகண்ட் மாநிலமும் பிளஸ்-2 பொதுத் தோ்வை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து மாநில கல்வி அமைச்சா் அரவிந்த் பாண்டே கூறுகையில், 'மாநில முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் மாணவா்கள், ஆசிரியா்களின் நலனைக் கருத்தில்கொண்டு பொதுத் தோ்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றாா். இவ்வாறு தினமணியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களிடம் 1.64 கோடி தடுப்பூசி கையிருப்பு : மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, தடுப்பூசி செலுத்தும் பணி செயல்படுத்தப்படுகிறது. மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மாநிலங்களின் நேரடி கொள்முதல் தடுப்பூசிகளையும் வினியோகித்து வருகிறது.

இதுவரை 23 கோடிக்கும் அதிகமான டோஸ்கள், மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 21 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 22 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 938 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. இதை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பிட்காயின் வர்த்தகத்துக்குத் தடை இல்லை: ரிசர்வ் வங்கி

இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாக இந்து தமிழ்திசை செய்தி வெளியிட்டுள்ளது.,

இதனால் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை வங்கிகள் மூலமாக மேற்கொள்ளவும் வழியேற்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நிதி பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என ரிசர்வ் வங்கி முன்னர் தெரிவித்திருந்தது. இதனால் பிற வங்கிகளில் அதுவரை மேற்கொள்ளப்பட்ட கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே கிரிப்டோ வர்த்தகத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

ரிசர்வ் வங்கியே கிரிப்டோ கரன்சியை உருவாக்குவது குறித்தும் பரிசீலித்தது. கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு நெருக்குதலால் இப்போது தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் ரிசர்வ் வங்கி எவ்வித தெளிவான அறிவிக்கையையும் வெளியிடாத சூழலில் வங்கிகள் இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்குத் தயக்கம் காட்டின.

இந்நிலையில், கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்ட பிறகு 2018-ல்ஆர்பிஐ வெளியிட்ட உத்தரவு அர்த்தமற்றதாகி விடுகிறது என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது 100 சதவீதம் சட்டப்பூர்வமானதாகிறது என இந்து தமிழ்திசையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாரில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகளுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிகார் அரசு எடுத்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான மசோதாவை பரீசிலிப்பதற்காக அண்மையில் நடந்த சுகாதார, அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆய்வுக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை மூலம் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாகவும் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

பிகாரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்று படிக்கக்கூடாது என்பது தங்களது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இறப்புச் சான்றிதழ்கள் 250% வரை உயர்வு

டெல்லியின் மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 34,750 இறப்புச் சான்றிதழ்கள்வழங்கப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 9,916 இறப்புச் சான்றிதழ்களே வழங்கப்பட்டுள்ளன. இது சுமார் 250 சதவிகித உயர்வாகும்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாகப்பரவியதால் கடந்த மே மாதத்தில் மட்டும் 24 ஆயிரம் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் 5,475 சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றன.

தெற்கு டெல்லியில் அதிகபட்சமாக 10,209 இறப்புச் சான்றிதழ்கள் கடந்த மே மாதத்தில் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக வடக்கு டெல்லியில் 9,663 சான்றிதழ்களும், கிழக்கு டெல்லியில் 4,128 இறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருப்பதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :