You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரையில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட தொகுதி நிதியில் 1 கோடி தரத்தயார்: சு.வெங்கடேசன்
மதுரையில் தமது தொகுதியை சேர்ந்த 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்க தாம் தயாராக இருப்பதாகவும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும் என்றும் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரியுள்ளார்.
இந்த கோரிக்கையை ஒரு கடிதமாக, மத்திய சுகாதாரத் துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளார் அவர்.
"முதலில் நாடு முழுமையும் உச்சபட்ச அர்ப்பணிப்போடும், கடும் உழைப்போடும் கோவிட்டை எதிர்த்து களத்தில் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களின் முயற்சிகள், அமைதியையும் நிம்மதியையும் மக்களின் வாழ்வில் விரைவில் கொண்டு வருமென்று நம்புகிறேன்.
கோவிட் பேரிடர் இரண்டாம் அலை 18 - 45 வயதுக்கு உட்பட்டவர்களை அதிகமாகப் பாதிக்கும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்குள் வரக் கூடிய அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.
மேலும், களத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தவிர குடிமைச் சமூகமும் இந்த நிவாரணப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை அரசின் முயற்சிகளுக்கு துணை புரியச் செய்ய வேண்டுமென கருதுகிறேன். அதுவும் சுகாதாரப் பணியாளர்கள், அரசின் முன்களப் பணியாளர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்ற செய்தி வந்துள்ள சூழ்நிலையில் இது முக்கியமானது. ஓராண்டு நீண்ட பேரிடர் பணியில் இத்தகைய மன உளைச்சல் இயல்பானதுதான்.
தன்னார்வ இளைஞர்களை ஈடுபடுத்தும் திட்டம்
ஒன்றிய, மாநில அரசின் பணிகளில் உதவ, முன்னெச்சரிக்கை மற்றும் கோவிட் வழிகாட்டல்கள் குறித்த செய்திகளை மக்களிடம் சேர்க்க, விழிப்புணர்வை உருவாக்க என்னுடைய மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தன்னார்வ இளைஞர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளேன்.
அவர்கள் இரண்டாம் நிலை சுகாதார ஆர்வலர் படையாக செயல்படுவார்கள். அலுவலர்களுக்கு உதவுவார்கள். கோவிட் நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுவார்கள். மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பது, உணவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டல், நிலைமையை கண்காணிப்பது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்புகளை பலப்படுத்துவது, எல்லோருக்கும் தடுப்பூசி ஆகியவற்றை உறுதி செய்வார்கள்.
இதன் வாயிலாக முன் களப் பணியாளர்களுக்கு வேலைப் பளுவை குறைக்க முடியும். அதன் மூலம் கோவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் மட்டும் அவர்களின் கவனக் குவிப்பை உறுதி செய்ய முடியும்.
இதன் மீது உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன். கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை எனது தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு எனது எம். பி தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக முன்னுரிமை அளித்து வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
அதன் மூலம் அவர்களை கோவிட் எதிர்ப்பு களப் பணியில் அவர்கள் தன்னார்வலர்களாக எனது தொகுதியில் பயன்படுத்த முடியும். இதற்கான துவக்கமாக எனது எம். பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30,000 தன்னார்வ இளைஞர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்க விரும்புகிறேன். அதன் பின் கோவிட் ஒழிப்புப் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
நான் அடிப்படையான கொள்கை நிலையை வலியுறுத்திப் பதிவு செய்கிறேன். "எல்லோருக்கும் இலவச தடுப்பூசி" என்பதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டு ஒட்டு மொத்த மக்கள் பயன் பெற வேண்டும். அதுவே சரியானதாகும்.
அரசின் தற்போதைய கொள்கை வரம்புக்கு உட்பட்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். எனது தொகுதிக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்குங்கள். மேலே கூறிய மனித நேய சேவைக்கு அது பயன்படும்.
தன்னார்வ இளைஞர்கள் 30,000 பேருக்கு (ரூ 150 ஒரு முறைக்கு) இரண்டு முறை தடுப்பூசி வழங்குவதற்கான செலவை சேர்த்து எனது எம். பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவேன். உங்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் இத்தொகை அனுப்பப்படுவதை உறுதி செய்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சு.வெங்கடேசன்.
பிற செய்திகள் :
- முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு : பின்னணியில் யார்?
- கமல் கட்சியில் இருந்து பத்ம பிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் விலகல்
- தமிழக மருத்துவமனைகளில் காலியாகாத படுக்கைகள்; இணைய சேவையில் குளறுபடியா?
- ஸ்டெர்லைட் ஆலையின் முதல் கட்ட ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது
- கொரோனா சடலங்கள்: தருமபுரி மின் மயானத்தில் மூச்சுத்திணறும் ஊழியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்