You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா அலையில் டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சிறைத்து மடியும் நோயாளிகள்
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
ஆக்சிஜன் கிடைக்குமா? ஆக்சிஜன் ஏற்பாடு செய்ய முடியுமா? என தலைநகரம் முழுக்க மக்களும், நோயாளிகளும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பள்ளி ஆசிரியையின் வேதனை தொய்ந்த குரல் கொண்ட அழைப்பில் தான் இன்று காலை எழுந்தேன். அந்த ஆசிரியையின் 46 வயது கணவர், ஆக்சிஜன் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இன்று சுவாசிப்பதே பலருக்கு மிகப் பெரிய சொகுசான விஷயமாகக் கருதப்படும் டெல்லி நகரத்தில் இது மற்றும் ஒரு நாள் என எனக்கு நானே கூறிக் கொண்டேன்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். அவசர உதவி கேட்டு அழைத்தோம். மோட்டார் சத்தத்துக்கு இடையில், மீண்டும் அந்த ஆசிரியை அழைத்துப் பேசினார். தன் கணவரின் ஆக்சிஜன் சாச்சுரேஷன் அளவு 58-ஆக குறைந்துவிட்டதாகக் கூறினார். உங்கள் ஆக்சிஜன் (சாச்சுரேஷன்) உள்ளெடுப்பு விகிதம் 92-க்குக் கீழ் செல்கிறது என்றால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவரது ஆக்சிஜன் உள்ளெடுப்பு 62-ஐத் தொட்டது. தன் கணவரின் ஆக்சிஜன் உள்ளெடுப்பு அதிகரித்தது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக என்னிடம் கூறினார். தன் கணவர் பேசுவதாகவும், சுய நினைவோடு இருப்பதாகவும் கூறினார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவ நண்பர் ஒருவருக்கு இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பினேன்.
"ஆக்சிஜன் உள்ளெடுப்பு 40 இருக்கும் போது கூட நோயாளிகளால் பேச முடியும்" என அவர் பதில் அனுப்பி இருந்தார்.
செய்தித் தாளைப் எடுத்தேன். பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் மோசமான உடல் நலத்தோடு இருந்த 25 நோயாளிகள் இறந்துபோனதாகச் செய்தி இருந்தது. தீவிர சிகிச்சையில் இருக்கும் போது ஆக்சிஜன் அழுத்தம் குறைந்ததாகவும், கைகளால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது.
நாளிதழின் முன் பக்கத்தில், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் மூன்று பேர், ஒரேயொரு ஆக்சிஜன் சிலிண்டரை பகிர்ந்து கொள்வது போல ஒரு படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அவர்களுக்கு படுக்கையோ, மருந்துகளோ, ஆக்சிஜனோ வழங்க முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை. குறைந்தபட்சமாக இறந்தவர்களை வைக்க Gurney எனப்படும் சக்கரம் வைத்த கட்டிலையாவது கொடுங்கள். அதுவே தற்போது வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். அதற்கே தற்போது இந்தியர்கள் தங்கள் நன்றியைக் கூறி வருகிறார்கள்.
நாள் நகர நகர, எதுவுமே மாறவில்லை என்பதை உணர்ந்தேன்.
ஆக்சிஜன் இல்லாததால் நோயாளிகள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போது வரை மருந்துகள் பற்றாக்குறை நிலவிக் கொண்டிருக்கிறது. கருப்புச் சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. நாம் போரில் இருப்பது போல மக்கள் மருந்துகளை பயத்தில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். மறு பக்கம் மருந்தை பதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். பல வழிகளில் நாம் போரில் தான் இருக்கிறோம்.
மீண்டும் அந்த ஆசிரியை என்னை அழைத்தார். அம்மருத்துவமனையிடம் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் ஃப்ளோ மீட்டர் இல்லை எனவும், அதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கூறியுள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து, நோயாளிக்கு செலுத்தப்படும் ஆக்சிஜன் அளவைக் கட்டுப்படுத்தும் கருவி இது.
மீண்டும் தெரிந்தவர்களிடம் எல்லாம் பேசினோம், ட்விட்டரில் உதவி கேட்டு பதிவிட்டோம், உதவி கிடைத்தது.
அரசு சொல்வதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நிலைமை மோசமாக இருந்து மிகவும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நோயாளிகளைக் காக்க, சரியான நேரத்தில் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மருத்துவமனைக்கு வந்து சேர்வதில்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, மிகக் குறைந்த அளவே மருந்துகள் இருக்கின்றன.
இந்தியாவில் அனைத்து வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்குக் கூட எந்த முன்னுரிமையும் கிடைக்கவில்லை. ஒரு பெரிய பத்திரிகையின் ஆசிரியர் என்னை பகலில் அழைத்துப் பேசினார். தன் உறவினர் ஒருவர் உடல் நலமின்றி இருப்பதாகவும், அவருக்காக ஓர் ஆக்சிஜன் சிலிண்டரைத் தேடி அலைவதாகவும் கூறினார்.
நான் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் வசிப்பவர்கள், யாருக்காவது ஆக்சிஜன் தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்களை வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பகுதியில் 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் சுயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் இருக்கிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் கைவிடப்பட்டு இருக்கிறார்கள். பலருக்கு, அது மெல்ல மரணத்தைச் சென்றடையும் பாதை. கொரோனா வைரஸோ பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் கொடிய நோய்.
"நான் இறந்து கொண்டிருக்கிறேன் என்றாலும், நான் இறக்கும் வரை வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பொருள்" என When Breath Becomes Air என்கிற தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் பால் கலாநிதி என்கிற நரம்பு மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்.
இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சு விட போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு, சிறிய அளவிலேயே கருணை காட்டப்படுகிறது.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி உருக்கம்: "கொரோனா வதந்திகளை தவிருங்கள்"
- பேட்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா, அதிரடி காட்டிய ராஜஸ்தான் பவுலர்கள்
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தேர்தல் பிரசார கூட்டங்கள் காரணமா? #FACTCHECK
- தமிழ்நாடு கொரோனா அலை: ஆக்சிஜன் தேவைப்பட்டால் என்ன செய்வது? ரெம்டிசிவிர் யாருக்கு?
- குண்டு வீசி தொழிலதிபர் படுகொலை, போலீஸ் சுட்டு கூலிப்படையை சேர்ந்தவர் பலி: கோயிலில் சம்பவம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: