You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்த தாய்
தனது இரண்டு குழந்தைகளை இழந்த வேதனையிலிருந்து மீள முடியாமல் ரயில் முன் பாய்ந்து தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தின் லத்தேரி பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள லத்தேரி பகுதியை சேர்ந்த மோகன்(வயது 60) என்பவர் பட்டாசுக் கடை நடத்திவந்துள்ளார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஏப்ரல் 18) காலை அன்று திடீரென பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பட்டாசுகள் அனைத்தும் வெடித்துள்ளது. இதனால் கடைக்குள் சிக்கிக் கொண்ட உரிமையாளர் மோகன் மற்றும் அவரது மகள் வழி பேர்க் குழந்தைகளான 8 வயதுடைய தேஜஸ், 6 வயதுடைய தனுஷ் உள்ளிட்ட மூவரும் தீ விபத்தில் கருகி உயிரிழந்தனர்.
அன்றைய தினம் தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பிருந்தே பொதுமக்கள் அனைவரும் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் வேலையில் ஈடுபட்டனர். குறிப்பாக இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் கடை அருகே நின்று கொண்டிருந்த 4க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்தன.
தீ விபத்து ஏற்பட்ட போது வாடிக்கையாளர்களுக்குப் பட்டாசுகளை மோகன் காண்பித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில், கடைக்கு உள்ளே இருந்த தனது மகள் வழி பேரக் குழந்தைகள் இருவரைக் காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் அந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த சோகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர் உயிரிழந்த குழந்தைகளின் தாயும், கடை உரிமையாளர் மோகனின் மகளுமான வித்யா (வயது 34). குழந்தைகள் மற்றும் தந்தை இழந்த சோகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரும் மன வேதனையில் வித்யா இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், சுமார் 3 மணியளவில் உயிரிழந்த குழந்தைகளின் தாயார் வித்யாவை காணாமல் அவரை குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது லத்தேரி ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் சடலமாக இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடும்பத்தினர் பார்த்தபோது உயிரிழந்து இருப்பது வித்யா என்று தெரியவந்தது.
பின்னர் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர், வித்யாவின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்விற்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரயிவே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தை உயிரிழந்த சோகத்திலிருந்த வித்யா வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இன்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். பட்டாசு கடை தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சோகத்திலிருந்து மீள முடியாத சூழ்நிலையில், குழந்தைகளின் தாயார் வித்யா மரணம் மேலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- 'மன்னிக்க தயார்; ஆனால் யாரை?' - ஈஸ்டர் தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் நீங்கா நினைவுகள்
- 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: கொந்தளிக்கும் கல்வியாளர்கள் - முடிவின் பின்னணி என்ன?
- ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி என தீர்ப்பு
- புதுவை லாக்டவுன்: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: